அறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்!

கால விசித்திரத்தில், எத்தனை மாற்றங்களும் உரையாடல்களும் நிகழத் தலைபட்டுள்ளனவோ, “ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும்”, என்பார்கள். ஊடகத்துறையில் இந்தப் பழமொழி அடிக்கடி நிஜமாகிக்கொண்டே இருக்கின்றது. ஊடக ஜாம்பவானாக, தன் எழுத்து – பேச்சு ஆற்றலினால் அனைவரின் கவனிப்பைப் பெற்றிருந்த மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன், இன்றைய காலத்தில் தன்னை மறந்து – ஊடக அறத்தை மறத்து சுமந்திரனின் ஊதுகுழலாக – அநியாயத்தின் எழுத்து வடிவாக மாறியிருப்பது காலத் துயரமே.

அவருக்கே இந்தப் பகிரங்க மடல்…!

அறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்!

அறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்!

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Dienstag, 6. Oktober 2020

வித்தியாதரன் அவர்களே…!
ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கில் தன்னலமற்ற – நீதியின் பாதையில் பயணித்த – அறத்தலைமை, நிலை கொண்டிருந்த காலத்தில், இலங்கை அரசின் அசுரக் கோட்டையில் இருந்து நீங்கள் எழுதிய எழுத்துக்களையும் அதிலிருந்த நியாயங்களையும் மிகவும் ரசித்தவர்களையும் மனந்திறந்து பாராட்டியவர்களையும் இன்று மனம் நோகும் நிலைக்கு தள்ளும்வகையில் ஒருவரைப் புகழ்ந்து எழுதுகிறீர்கள். ஏன் இந்த அறத்திற்கு பிறழ்வான எழுத்தும் பிழைப்பும்?

உங்கள் எழுத்துக்களை படித்தவர்களும் – உங்களைப் பின் தொடர்ந்த ஊடகவியலாளர்களும் – நிருபர்களும் இன்று நாணிக்கோணும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஈ.சரவணபவன் அரசியலுக்கு பிரவேசிப்பதனால், “அவர் நடத்திய பத்திரிகையில் இருந்து விலகுகிறேன்”, என்று பகிரங்கமாக சொல்லிக் கொண்டீர்கள். அதனை நம்பி அப்பத்திரிகையில் இருந்து விலகி உங்கள் ஊடகப் பாசறையில் இணைந்தவர்கள், பின்வந்த காலத்தில்தான் உணர்ந்து கொண்டனர் நீங்களும் அரசியல்வாதியாகப் போகிறீர்கள் என்பதை?

2010 காலப் பகுதியில் பாராளுமன்றத் தேர்தல் காலத்திலேயே, “நான்தான் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர்”, என சொல்லித் திரிந்தீர்கள், அதற்கான காய்களை நகர்த்தி, முடியாமற் போன நிலையில், இப்போது வடக்கு மாகாண சபையின் ஓர் ஆசனத்திற்காக சுமந்திரன் புகழ் பாடத் தொடங்கியுள்ளீர்கள். ஆனால், யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு உங்கள் பெயர் தமிழ் அரசுக் கட்சியால் பிரேரிக்கப்பட்டபோது அதனைத் தடுத்ததும் – தனது சீடப் பிள்ளைக்கு வழங்கியவரும் அவரேதான். இதை நீங்களும் நன்கு அறிவீர்கள்…! இப்போது ஒரேயோர் அரசியல் கதிரைக்காக ஊடக மலையில் இருந்து படுபாதாளத்திற்கு பாய்ந்திருக்கும் இந்த பயணம் தேவைதானா?

2010இலேயே நீங்கள் அரசியலுக்கு வந்திருக்கலாம் அல்லவா? ஏன் நாடகங்களும் – நாடக அறிவிப்புக்களும்? அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை விடவும் மோசமானதாகவல்லவா இருக்கிறது.

கடந்த சில வாரங்களாக சுமந்திரனை அழைத்து திலீபன் நினைவேந்தலில் முன்னிலைப்படுத்தவில்லை என்ற ஆதங்கத்தை  எழுதி வருகிறீர்கள். அத்துடன் ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் திலீபன் நினைவேந்தலுக்கு பெறப்பட்ட அனுமதியை நினைவுபடுத்தி இப்படி சொல்வது ஏற்புடையதா? ஏனெனில் 2019 நவம்பருக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் வேறு ஆட்சி நிலவியது. அப்போதைய அணுகுமுறைகளும் அரசியலும் வேறுவிதமாக இருந்தது. அதற்குப் பிந்தைய சூழலில் இத்தகைய விவகாரத்தில் உண்மையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதனை அங்கீகரிக்கின்ற முடிவுகளை பெறுகின்ற வல்லமை சுமந்திரனுக்கு உள்ளதா?

தவிரவும், திலீபன் நினைவேந்தல் வழக்கில் யாழ்ப்பாணத்தில் முன்னிலையாகுமாறு சுமந்திரனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டுமா? அப்படியென்றால் சுமந்திரன் மக்கள் பிரதிநிதியற்றவர் என்றும் –  கூலிக்கு வாதாடுகின்ற ஒரு வழக்கறிஞர் என்றும் சொல்கிறீர்களா?
அப்படி ஏன்றால் ஏன் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வேண்டும்? பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டு பொதுநலன் சார் வழக்குகளில் கூலிக்கு வாதாடுவது என்ன வகை தர்மம்?

இப்போதும்கூட, மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பான வழக்கின் உண்மை நிலையறிந்தும் – அதனை சுமந்திரன் வாதத் திறமையால் வென்றார் என்பது போலவே விவேகமாக சித்திரித்து யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? அந்த வழக்கில் சுமந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து இதுவே. “எனது கட்சிக்காரர் திலீபனை நினைவேந்தல் செய்ய முயன்றார் என்பது தவறான குற்றச்சாட்டு. அன்றைய நாளில் அவர் திலீபன் என்ற பெயரை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை. திலீபனுக்காக ஒரு தீபத்தையும் அவர் ஏற்றவில்லை. அத்துடன் நினைவேந்தலுக்காக மக்கள் எவரையும் அழைக்கவில்லை. திலீபனை நிகைவேந்தல் செய்யும் நோக்கமும் – சிந்தனையுமில்லை. எனவே, பொலிஸாரின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை”, என்று சுமந்திரன் கூறியதன் அடிப்படையிலேயே அவ்வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

நிலைமை இப்படியிருக்க, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் படத்தை வெளியிட்டு, அதற்கு சுமந்திரன் இட்ட தலைப்பு, “கடமையை செய், பலனை எதிர்பாராதே – பகவத்கீதை” என்பதுதான்.

திலீபன் குறித்தும் நினைவேந்தல் குறித்தும் தமிழர் மனங்களில் உள்ள நியாயத்தை பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மேற்படி தலைப்பிடுவதும், சுமந்திரன் வீரச் செயல் செய்தார் என புனைந்து காலைக்கதிர் செய்தி வெளியிடுவதும் எப்படி நியாயமானது? சுமந்திரனின் செயல் அநீதியானது என்றால் காலைக்கதிரில் வித்தியாதரனாகிய நீங்கள் செய்தது ஊடக அநீதி.

பின்னரும், சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஏன் வாதாடவில்லை என்று யாரோ அநாமதேயமாக கேட்டார் என்றும் அதனை ஒரு பெருத்த ஆதங்கமாகவும் அதற்கு சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும் எனவும் மறைமுகமாக சுமந்திரனை முன்னிலைப்படுத்தி, அவரின் புகழ் பாடும் வேலையை மிக நுட்பமான ஊடக அயோக்கியத்தனத்துடன் செய்திருக்கிறீர்கள். தொடர்பாடலும் ஊடகமும் மிக நுண்மையான வளர்ச்சி பெற்ற காலத்தில் சுமந்திரனுக்காக நீங்கள் புராணம் பாடுவதை தமிழர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள் என நீங்கள் நினைப்பது மிக முட்டாள்தனம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அவர்களின் நிகரற்ற போராட்டம் தொடர்பிலும் மிக கொச்சைத்தனமாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை. அதற்கு அவர் கூறும் விளக்கம் “ஆயுதப் போராட்டத்தை நான் ஒருபோதும் ஆதரித்தது இல்லை” என்பதே. ஆனால், ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகினாலும் இன்றுவரை அதற்காக மன்னிப்போ அல்லது அது தவறு என்றோ கூறாத ஜே.வி.பி. அமைப்போடு ஒட்டி உறவாடும் போதும் – தமிழர் போராட்டத்தில் இருந்து திசை மாறி, தமிழின அழிப்பில் சிங்கள இராணுவத்துடன் ஒட்டுக் குழுவாக செயற்பட்ட ஈ.பி.டி.பியுடன் பிரதேச சபைகளில் ஆட்சி அமைக்க பேசியபோதும் அவருக்கு தெரிந்திருக்கவில்லையா அவை ஆயுதத்தால் கறைபடிந்த கைகளின் சொந்தக்காரர்கள் என்று…?

அப்படியான சுமந்திரன் இன்று செல்வாக்கு இழந்து சரிந்து போன நிலையில், திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முடியாத தமிழரின் கையறுநிலையை உங்களின் தனிப்பட்ட  பொருளாதார, அரசியல் நன்மைக்காகவும்- மாகாண சபை ஆசனத்திற்காகவும், சுமந்திரனின் அரசியலை நிமிர்த்தவும் பயன்படுத்தி, உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்பதை வலியுறுத்துகின்றோம்.

தமிழ்த் தேசிய அரசியல் பயணத்திலும் தமிழ்த் தேசிய ஊடகப் பயணத்திலும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் ஈழத் தமிழ் இனத்திற்கும் துரோகம் செய்து, தம்மை வளர்க்கவும் – பெருப்பிக்கவும் நினைக்கின்ற எவரும் மக்கள் முன் தோற்றும் அம்பலப்பட்டும் விடுவர். அவர்களின் முகத்திரையைக் கிழிக்க தமிழ்க்குரல் ஒருபோதும் பின்நிற்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆசிரியர் பீடம் – தமிழ்க்குரல்.
06.10.2020