குடும்பமாக அரசியலில் ஈடுபடுவது என்பது அரசியலுக்கும் புதிதல்ல, நம் நாட்டுக்கும் புதிதல்ல. இப்போது நாட்டில் நடப்பதுகூட ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிதான். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இதுதான் நடந்தது.
ஆனால், தமிழில் குடும்ப அரசியல் என்பது சற்றுக் குறைவுதான். அப்படியே நடந்தாலும் தந்தைக்குப் பின் தனயன் என்ற நிலைதான் நீடித்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அவரின் மகன் கலையமுதனும் இப்போது ஒரே நேரத்தில் அரசியலில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களின் பதவிகள் வேறுவேறுதான்.
தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகின்றது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி. பேரம் பேசி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 3 ஆசனங்களை வாங்கி விட்டது. (சிலவேளைகளில் இது 2 ஆகக் குறையவும் வாய்ப்பு உள்ளது.)
நடைபெறவுள்ள தேர்தலில் அவர் களமிறங்குவது உறுதியானது என்றாலும் மீதமிருக்கும் ஆசனத்தில் யாரை களமிறக்குவது என்பதுதானாம். அதற்குக் காரணம் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடந்த கசப்பான அனுபவங்கள்தானாம்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்தபோது, ஸ்ரீதரன், சிவமோகன், ரவிகரன், ஐங்கரநேசன் ஆகியோருக்குப் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கியது. இவர்களின் கோட்டாவில் அரசியல் களத்துக்கு வந்தவர்கள் வெற்றி பெற்றதும் தமிழரசுக் கட்சியின் பக்கம் தாவி விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பட இதுவும் ஒரு காரணமாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு இருந்தது.
இந்நிலையில், தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடும் நிலையில் வேறு எவரையேனும் தேர்தலில் போட்டியிட வைத்து அவர்கள் கட்சி மாறிவிட்டால், நிலைமை என்ன என்பதே அவரின் யோசனையாம். இந்நிலையில், அவருக்கு வேண்டியவர்கள் சிலர் அவரது தம்பியாரான சர்வேஸ்வரனைக் களமிறக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார்களாம். இதற்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்காதபோதும், ஆதரவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறாராம்.
சர்வேஸ்வரன் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் நன்மதிப்பையும் பெற்றவர். இது தவிர, தமிழ் மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளை ஒன்றிணைப்பதில் – கொள்கைகளை வகுப்பதில் மும்முரமாக நின்று பணியாற்றுபவர். கடந்த காலங்களை விட – அதாவது கூட்டமைப்பில் இருந்த காலத்தை விட அவரின் இப்போதைய அரசியல் செயற்பாடுகள் பல மடங்கு வேகம் பெற்றிருக்கின்றன. அவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதாகத் தகவல்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கினால், வேறு கட்சிக்குத் தாவ மாட்டார் என்பது ஆலோசனை வழங்கியவர்களின் கருத்தாம். ஆனால், இதற்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ஒரு தேர்தலில் அண்ணனும் தம்பியும் போட்டியிடுவதால் அது வெற்றிக்குப் பதிலாக வீழ்ச்சியை தரும் என்பதும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராகக் கடும் பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க அது வாய்ப்பாகிவிடும் என்பதும் ஒரு சாராரின் கருத்தாக உள்ளதாம்.
இன்னொரு சாராரோ, குடும்ப அங்கத்தவர்கள் போட்டியிட்டால் தமக்கு ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் உள்ளனராம். அவர்களின் அச்சமும் ஒரு வகையில் நியாமானதுதான்…?
ஆனால், இந்த விடயத்தில் சுரேஷ் பிறேமச்சந்திரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்…!