விக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்?

IMG 20200219 023353
IMG 20200219 023353

வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்படுகின்றது.

காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அத்துடன் கல்வித்துறையில் டிப்ளோமா பட்டத்தையும் முதுகல்விமாணி பட்டத்தையும் பெற்ற இவர், கல்வி கற்ற காலங்களில் மாணவத் தலைவராகவும் செயற்பட்டார். சிறந்த கணித ஆசிரியராகவும் நிர்வாகத்திறன் கொண்ட அதிபராகவும் வன்னியில் அறியப்பட்டுள்ளார்.

வவுனியா கண்ணாதிட்டி றோ.க.த.க பாடசாலையில் முதன் முதலில் ஆசிரியர் நியமனம் பெற்றதுடன், வவுனியா பாவைக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபராகவும் முதன் முதலில் பணியாற்றினார்.

தர்மக்கேணி அ.த.க பாடசாலை, கலைவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், கிளி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றியதுடன் கிளிநொச்சி வலயத்தில் மாணவர் அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபராகவும் பணியாற்றினார்.

ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் பிற்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுத்தல் என்பனவற்றில் ஈடுபாடு கொண்ட இவர், போர்க் காலத்தில் மக்களுக்கான இடர் தேவைகளை புரிவதிலும் முன் நின்று பங்களித்துள்ளார். 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வு காலத்திலும் காடுகளில் அல்லல்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை புரிந்து மக்களின் அபிமானத்தை பெற்றவர்.

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் 2008ஆம் ஆண்டு துவக்கம், கிளிநொச்சி மத்திய கல்லூரியை இடம்பெயர் காலத்திலும் தொடர்ச்சியாக இயங்க வைத்தார். அத்துடன் இறுதிப்போர் வரையில் மக்களுடன் மக்களாக சென்று தொடர்ச்சியாக கல்விப் பணியையும் போரால் அவதிப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளையும் புரிந்தார்.

அத்துடன் 2009 போருக்குப் பின்னர், முள்வேலி முகாங்களில் தொடர்ந்து தங்கியிருந்து போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக சேவையை ஆற்றினார். அருணாசலம் முகாமின் 33ஆவது பாடசாலையின் அதிபராக பணியாற்றிய இவர், மீள்குடியேற்றத்தின்போது கிளிநொச்சி மத்திய கல்லூரியை மீளத் தொடக்கி தன் அரும்பணிகளைப் புரிந்தார்.

2009 தொடக்கம் 2011 வரையான காலத்தில், கிளிநொச்சி மத்திய கல்லூரி உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை எட்டும் சாதனைகளுக்கு ஏதுவான பணிகளையும் மேற்கொண்டார்.

போராளிகளுக்கும் இவருக்குமான நெருக்கத்தையும் போராட்ட காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்களாலும் அக் காலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்களால் இவர் பதவி வழியாக நிந்திக்கப்பட்டதுடன் கிளிநொச்சியில் தமிழ் தேசியத்தை காப்பவர்கள் என கூறிக் கொள்பவர்களும் இவரது நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றலைக் கண்டு, அரசியல் பதவிகளை வழங்க நேரிடும் என அஞ்சி, இவர்மீது ஓர வஞ்சனைகளை மேற்கொண்டார்கள்.

போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை நல்கி, தமிழ் தேசியம் மீது தன்னலமற்ற பற்றுக் கொண்டு, சிறந்த நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றல் கொண்ட திரு இரட்ணகுமாரை தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலில் இறக்க தீர்மானித்திருப்பது கிளிநொச்சியில் போட்டியிடவுள்ள ஏனைய நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.