நீலன் – நான் – பிரபாகரன் : கிளிநொச்சி அரசியல்வாதியின் புதுப் புலுடா!

kulla nari
kulla nari

நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால் சமஸ்டி யாப்பை எழுதியிருப்பார் என்றும் அவரை தவறவிட்டுவிட்டோம் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை அழைத்து கூறியதாக தமிழ் தேசியம் பேசும் கிளிநொச்சி அரசியல்வாதி ஒருவர் புதுக்கதையை ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் விடுதலைப் போராட்டம் மற்றும் அதன் தலைமை குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய கருத்துக்கள் பெரும் எதிர்ப்பை கண்டு வருகின்றது. கட்சிக்கு வெளியில் மாத்திரமின்றி கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது சுமந்திரனின் பேச்சு.

இந்த நிலையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஊடகங்கள் வாயிலாகவும் கட்சித் தலைமைக்கும் சுமந்திரன் குறித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் தேசிய வீரராக தன்னை அடையாளப்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் இன்னமும் வாய்கட்டுப் போடப்பட்டவராக மௌன விரதத்தில் உள்ளார்.

கட்சி ஆதரவாளர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் பலருக்கும் இவர் ஒரு புதிய கதையை சொல்லி சுமந்திரன்மீது விசுவாசத்தை காட்டி வருகிறார்.

நீலன் திருச்செல்வம் இருந்திருந்தால், தமிழர்களுக்கான இடைக்கால அரசியல் தீர்வு வரைபை எழுதுவித்திருக்கலாம் என்றும் அவர் இரண்டு நாடுகளுக்கு அரசியல் யாப்பு எழுதிய அனுபவத்தை கொண்டவர் என்றும் அவரை தவறவிட்டுவிட்டோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னை அழைத்து கூறியதாக கிளிநொச்சி அரசியல்வாதி வெடித்துள்ளார்.

நீலன் திருச்செல்வத்தை இழந்துவிட்டு பின்னர் வருந்தியதைப் போல சுமந்திரனையும் அவசரப்பட்டு இழந்துவிடக்கூடாது என்றும் அவர் பல்வேறு விடயங்களையும் கையாளக்கூடிய இராஜதந்திரி என்றும் கிளிநொச்சி அரசியல்வாதி சுமந்திரனின் சர்ச்சைப் பேச்சுக்கு நியாயம் கற்பித்துள்ளாராம்.

தலைவர் பிரபாகரனே ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர்தான் சுமந்திரன் என்று தமிழ் மக்களை இன்னுமொரு அதிர்ச்சிக்கும் சீற்றத்திற்கும் தள்ளியுள்ளார் குறித்த அரசியல்வாதி. தனது அரசியல் இருப்பிற்காக சுமந்திரனை விஞ்சிய அரசியல்வாதியாக இவர் உருவெடுக்கிறார்.

புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஏற்க மாட்டேன், பிரபாகரனை ஏற்க மாட்டேன் என்று சுமந்திரன் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ள நிலையில், அதனை தாண்டி, புதுக்கதை ஒன்றை வெடித்து தலைவர் பிரபாகரனின் பெயரை சர்ச்சையில் தள்ளி, சுமந்திரன்மீதான தன் விசுவாசத்தை காட்டியுள்ளார் கிளிநொச்சியின் நடிப்புத் தமிழ் தேசிய அரசியல்வாதி.