வாக்குகளை வாங்கும் போட்டியில் தியேட்டர் – அமுல்பேபி அரசியல்வாதிகள்!

நாளை பாராளுமன்றத் தேர்தல். பிரசாரங்கள் அனைத்தும் கடந்த 2 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்து விட்டன. ஆனால், இதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் – தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதில் சில கட்சிகள் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றன.

இதில் அதிகம் ஈடுபடுவது அரச – அரசாங்கம் சார்ந்த கட்சிகள்தான். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளில் இருவர் அதிகமாக இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

அரசாங்கத்தின் தயவில் – அதிகாரிகளின் பக்கத்துணையுடனே அவர்கள் பணம் கொடுத்து வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். நேற்றும் இன்றும் தியேட்டர்காரர் குறித்தளவிலானோரை தியேட்டருக்கு வரவழைத்து வாக்குகளை வாங்கினார்.

ஒரு குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கியே இந்த வாக்கு வேட்டையை அவர் நடத்தினார். அவருக்கு செல்வாக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஊடாகவே, வாக்காளர்களை அவர் திரட்டியிருந்தார். இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தின் தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அவர்கள் தான் தியேட்டர்காரரின் அதிகாரத்துக்கு (?) கட்டுப்பட்டவர்களாயிற்றே. வழக்கம் போல தியேட்டர்காரருக்கு அறிவித்தார்கள். பின்னர் வாகனங்களை எடுத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்றார்கள். அதற்குள் சில வரிசைகளை காலியாக்கி விட்டார்கள். உள்ளே பேசினார்கள். பின்னர் அதுபற்றி தமது மேலிடத்துக்கு அறிவித்தார்கள்.

நடப்பது வாக்குக்கு பணம் வழங்கும் கூட்டம் அல்ல. அக்கட்சியின் சார்பில் தேர்தலில் பங்கேற்கவுள்ள முகவர்களுக்கான கூட்டம் என்று….! எப்படி இருக்கிறது நிலைமை.

இது ஒருபுறம் போக, யாழ்ப்பாணத்தின் ‘அமுல்பேபி’ அரசியல்வாதியும் இத்தகைய கூட்டம் ஒன்றை நடத்தி வாக்கு ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வாரி இறைத்திருக்கிறாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், தியேட்டர்காரர் தெரிவு செய்து பணம் வழங்கிய சிலரும் இதற்குள் அடக்கமாம்.

இப்போது பணம் வாங்கி வாக்குப் போடப் போகிறவர்கள் யாருக்கு போடப் போகிறார்கள்….? வழக்கம் போல் இரு இடத்திலும் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒரு கட்சிக்கா…? அல்லது வடிவேலுவின் படம் ஒன்றில் வருவது போன்று தியேட்டர்காரரிடம் வாங்கிய பணத்துக்கு அவரின் சின்னத்துக்கு ஒரு புள்ளடி. அமுல்பேபியிடம் வாங்கிய பணத்துக்கு அவரின் சின்னத்துக்கு ஒரு புள்ளடி என்று போடுகிறார்களோ தெரியாது…? பொறுத்திருந்து பார்ப்போம் நாளைய தேர்தல் முடிவுகளை…!