தமிழர்களும் புதிய அரசியல் அமைப்பும்

ko

கொரோனா பிரச்சனைக்கும் மத்தியிலும் இலங்கையின் அரசியல் அரங்கிலே புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தைத்தயாரிப்பதற்கு நீதி அமைச்சு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ளது. சுருக்கமான கருத்துகளையும் யோசனைகளையும் நிபுணர்குழு வரவேற்பதாகவும், மக்கள் தமது கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பதிவுத்தபால்மற்றும் expertscommpublic@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றினூடாக அனுப்பி வைக்க முடியுமென்றும், இது சம்பந்தமாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு சம்பந்தமான வரலாறுகளைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆங்கிலேய ஆட்சியினால் அறிமுகம் செய்யப் பெற்றசோல்பரி அரசியலமைப்பின் கீழேயே இலங்கைக்குச் சுதந்திரம்கிடைத்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற 1947 லிருந்து 1972 வரை கால்நூற்றாண்டுகாலம் இலங்கை இந்தச் சோல்பரிஅரசியலமைப்பின் கீழேயே நிர்வகிக்கப்பெற்றது.


இலங்கையின் சிறுபான்மையினங்களின் சட்டப்பாதுகாப்பிற்காகச் சோல்பரி அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 29 ஆவது ஷரத்து நடைமுறையில் இருந்த வேளையில் தான் மலையகத்தமிழர்கள் பத்துலட்சம் பேரை நாடற்றவர்களாக்கிய இலங்கைக் குடியுரிமைச்சட்டமும்(1948) இலங்கையின் அரச கரும மொழியாகச் சிங்களத்தைப் பிரகடனப்படுத்திய அரசகருமமொழிச்சட்டமும் (1956) இலங்கைப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பெற்றன.

ஆக சோல்பரி அரசியலமைப்பு தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றே கூறலாம்.
பின்னர் 1970 இல் பதவியேற்ற பிரதமர் காலஞ்சென்ற சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலானஅரசாங்கம் 1972 மே 22 ம் திகதி புதியகுடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது. 1970இல் தெரிவு செய்யப் பெற்ற பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாகவும் மாறி பாராளுமன்றத்திற்கு வெளியே கொழும்பு றோயல்கல்லூரி நவரங்கஹலா மண்டபத்தில் அரசியலமைப்பு நிர்ணயசபை கூட்டங்களை நடத்திய காலத்தில் அரசாங்கத்திடம் தமிழர்தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு அம்சக்கோரிக்கையும் அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்களின் போது தமிழர் தரப்பில் அன்றைய தமிழரசுக்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சகல முன்மொழிவுகளும் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே இக்குடியரசு அரசியலமைப்பு (முதலாவதுகுடியரசுஅரசியலமைபு) நிறைவேற்றப்பெற்றது.

தமிழரசுக்கட்சி இக் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்து அரசியலமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறியது. தமிழரசுக்கட்சியினால் ‘தமிழர்களின்அடிமைச்சாசனம்’ என வர்ணிக்கப்பட்ட இக் குடியரசு அரசியலமைப்பின் பிரதியைத் தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வ நாயகம் அவர்கள் யாழ் முற்ற வெளியில் வைத்துப் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தி தமிழர்களின்எதிர்ப்பைவெளிப்படுத்தினார்.

பின்னர் தனது காங்கேசன் துறைத் தொகுதிப் பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமாச் செய்து மீண்டும் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தான் தோற்றால் தமிழர்கள் இக் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் மீண்டும் தான் வெற்றி பெற்றால் இக் குடியரசு அரசியலமைப்பைத் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் என்றும் அர்த்தமெனக் கூறி அரசாங்கத்திற்குச் சவால்விடுத்து 1974இல் நடைபெற்ற காங்கேசன் துறைத்தொகுதி இடைத் தேர்தலில் நின்று மீண்டும் வெற்றிபெற்றார்.

ஆக 1972 இல் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், 1977 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து அறுதிப் பெரும்பான்மையுடன்வெற்றியீட்டியபிரதமர்ஜே. ஆர். ஜெவர்த்தனா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தது. ஜே.ஆர். 1978இல் தற்போது நடைமுறையிலுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பை அதாவது இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பை உருவாக்கி இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியானார்.

இவ் அரசியலமைப்பையும் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் எனப் பிரகடனம் செய்து, காலஞ்சென்ற அ. அமிர்தலிங்கத்தைச் செயலாளர் நாயகமாகக் கொண்டிருந்த அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணி இப் புதிய அரசியலமைப்பு மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பெற்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியால் முன் மொழியப்பட்ட திருத்தங்கள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீண்ட விளக்க உரையொன்றினை ஆற்றிய பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளிநடப்புச்செய்தது. ஆக 1978 இல் நிறைவேற்றப்பட்ட இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பையும் அதாவது இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.


பின்னர், 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலின் பின் நிறுவப்பெற்ற ‘நல்லாட்சி’ அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு விவகாரம் எழுந்தது.2015 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ‘தேர்தலின் பின் அமையப்போவதாக எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக ‘சமஸ்டி’ அடிப்படையில்அமைந்தஅதிகாரப்பகிர்வுக்கானசுயாட்சியை, இணைந்தவடக்குக்கிழக்கில் 2016இல் ஏற்படுத்துவோம்’ என்று வாக்குறுதி அளித்துத்தான் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டது. இதனை நம்பியே அது வரை காலமும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருந்த தமிழ் மக்கள் இத் தேர்தல் மூலம் இறுதிச் சந்தர்ப்பமொன்றினை வழங்கு முகமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.

ஆனால் ‘நல்லாட்சி’ அரசாங்ககாலத்தில் (2015–2019) ‘எக்கராஜ்ஜிய’ என்ற சிங்களப் பதத்திற்கு சுமந்திரன் கொடுத்த விளக்கமும் புதிய அரசியலமைப்புக் குறித்த இடைக்கால அறிக்கையையும் தான் தமிழர்களுக்கு எஞ்சியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தீர்வுதைப் பொங்கலுக்கு வரும்! தீபாவளிக்குவரும்! எனக் குடுகுடுப்பைச் சாத்திரிபோல ஆரூடம் சொல்லி வந்த புதிய அரசியலமைப்பு ‘புஷ்பவாணம்’ ஆகி மீண்டும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏமாற்றத்திற்குள்ளாக்கப்பட்டனர். இப்போது ராஜபக்ஷாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் புதிய அரசியலமைப்புப்பற்றி மீண்டும் பிரஸ்தாபிக்கப்படுகிறது. ‘நல்லாட்சி’ அரசாங்ககாலத்தில் பேசப்பட்ட உத்தேச புதிய அரசியலமைப்பின் நீட்சியல்ல இப்போது வரப்போகின்ற புதிய அரசியலமைப்பு. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் ‘சூடுகண்டபூனையாட்டம்‘ இப்போது புதிய அரசியலமைப்புக் குறித்து அடக்கியே வாசித்தாலும்கூட , ‘மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல்‘ அவ்வப் போது அது பற்றி உச்சரித்து ஊறுகாயைப் போல் தொட்டுக்கொள்ளுகிறது.

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதற்காக த்தேர்தல் அரசியலைக் கொண்டு நடத்த ‘களிம்பு ஏறிய செம்பு’ போல் ஏதாவது ‘துரும்பு’ அவர்களுக்கு வேண்டும்தானே.
தமிழ்மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வானது இலங்கைத் தமிழ்த்தேசிய இனம் தனது சமூக பொருளாதார அரசியல் இருப்பைத் தக்கவைத்துப் பேணிவளர்த்தெடுக்கும் வகையில் அதனுடைய தேசிய வாழ்வும் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பும் பொருளாதார மற்றும் சமூகக்கட்டமைப்பும் குடிப்பரம்பலும் இயற்கைவளங்களும் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாதவாறு உறுதிப்படுத்தப்பெற்ற ஒருசுதந்திரமான சூழலுக்கு வழிவகுக்கும் போதே அது நிரந்தரத்தீர்வாக அமையும்.


இதனடிப்படையில் அதி குறைந்த பட்சம் மதச்சார்பற்றதும் இந்திய மொழிவாரி மாநிலங்களுக்குச்சமமான அதிகாரங்களுடன் வடக்குக்கிழக்கு இணைந்ததோர் ஒற்றை மொழிவாரி அதிகாரப்பகிர்வு அலகை உள்ளடக்கியதுமான ஓர் அரசியலமைப்பே இதனைச் சாத்தியப்படுத்தும். ஆனால் இப்படியான தொரு அரசியலமைப்பு ராஜபக்ஷாக்களின் காலத்திலும் வருவதற்கான வாய்ப்பேஇல்லை.

எனவே இப்போது பேசப்படும் உத்தேச புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு வருமென்று தமிழர்கள் எதிர்பார்த்தால் அது ‘இலவு காத்தகிளி‘ யின் கதையாகத்தான் முடியும். இந்த இக்கட்டான நிலையில் தமிழர் தம் அரசியல் தலைமைகள் இப்போது செய்ய வேண்டியது தான் என்ன?
தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘நாளை வரும் பலாக்காயிலும் பார்க்க இன்று வரும் கிளாக்காய் நன்று‘ என்று. அதுபோல்தான் ‘அரசனை நம்பி புருஷனைக் கை விடலாகாது’ என்ற சொற்றொடரும் அதே அர்த்தத்தையே தருகிறது .

இன்று தமிழ் மக்களின் கைகளில் இருப்பது ‘இந்திய –இலங்கைச் சமாதான ஒப்பந்தமும்’ அதன் வாயிலாகக் கொண்டுவரப்பட்ட ‘பதின் மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தமும் ‘தான்.எனவே சகல தமிழ் அரசியல் கட்சிகளும் தத்தம்கட்சி அரசியலைக் கைவிட்டு மக்களுக்காக ஒன்றுபட்ட ‘தமிழர் தரப்பு’ ஆக இணைந்து பதின் மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை வேண்டி அவ்வொப்பந்தத்தின் கைச்சாத்திகளான இலங்கை அரசாங்கத்தின் மீதும்இந்திய அரசாங்கத்தின் மீதும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் தமிழ்மக்களைத் திரட்டி வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாது முன்னெடுக்கவேண்டும்.

தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.