ஜனாதிபதி தேர்தல் தந்துள்ள வரலாற்றுச் சந்தர்ப்பம்!

ddddddddddddddddd 5
ddddddddddddddddd 5

பலரும் கணித்ததுபோல் பரபரப்பு – கடினம் – போட்டி இல்லாமலேயே தேர்தலில் வென்று, ஜனாதிபதி ஆகியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச. அவரின் இந்த வெற்றி – அவர் சார்ந்த சிங்கள – பௌத்தத்தின் வெற்றியாக மட்டுமே கருதப்படுகின்றது – கொண்டாடப்படுகிறது. இதுவே உண்மையும்கூட, தேர்தல் பிரசாரத்தின்போது, “தமிழர்களின் – சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றிபெறுவேன்”, என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கூற்று இன்று நிரூபணமாகியுள்ளது.

இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம், தென்னிலங்கையில் பலம் மிக்க – மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோட்டாபயவின் வெற்றியைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கக் கூடிய ஏதுநிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்றின் நான்கரை ஆண்டு காலம் வரும் பெப்ரவரி இறுதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர், புதிய நாடாளுமன்றுக்கான தேர்தலை நடத்தவும் திட்டமிடப்படுகின்றது. பெப்ரவரி இறுதியில் மார்ச் முற்பகுதியில் நாடு மற்றொரு தேர்தலை சந்தித்தே ஆகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டுக்கு – மக்களுக்கு உணர்த்திச் சென்றுள்ள இரு செய்திகள் குறித்துக் கவனம் செலுத்துவது அவசியம்.

ஒன்று, நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எப்போதும் சிங்கள – பௌத்தமே தீர்மானிக்கும். அதன் முடிவுகளுடன் சிறுபான்மை இனங்கள் உடன்பட்டுச் செல்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை. அதாவது பெரும்பான்மை சிறுபான்மை இனங்களின் விருப்பு என்பது இரு துருவமயப்பட்டது என்பது.

மற்றையது இந்நாட்டில், எப்போதும் பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் விருப்பமும் சிறுபான்மையினரான தமிழ்பேசும் மக்களின் விருப்பமும் ஒருபோதும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. குறிப்பாக, தமிழருக்கு அதிகாரப் பகிர்வை வழங்க சிங்கள – பௌத்த தலைவரே வழங்க விரும்பினாலும்கூட பெரும்பான்மை சிங்கள – பௌத்த மக்கள் ஒருபோதும் அதை ஏற்கவோ – சம்மதிக்கவோ போவதில்லை என்பதைத்தான்.

இந்த இரு செய்திகளில் இருந்தும் உலகுக்கு இலங்கை சொல்லும் செய்தி, இலங்கை போன்ற நாடுகளில் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதி ஆட்சி முறை என்பது சிறுபான்மை மக்களை ஒருபோதும் திருப்தி செய்யாது என்பதையே – அதாவது நாடு ஒன்றாக இருப்பினும் இங்கு வாழும் பெரும்பான்மை இனத்தவர்களும் – சிறுபான்மை இனத்தவர்களும் இரு துருவங்களாகவே உள்ளார்கள். ஒரு தரப்பின் விருப்பாக வரும் ஜனாதிபதி ஆட்சி முறை ஒருபோதும் மற்றைய இனத்தவர்களை திருப்தி செய்ய மாட்டார் – செய்யவும்முடியாது என்பதே.

ஆனால், இந்த ஜனாதிபதி தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு செய்தியை சிறுபான்மை இனங்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. அது, “இலங்கையின் சிறுபான்மை இனங்கள் இலங்கைத் தமிழர், இஸ்லாமியத் தமிழர், மலையகத் தமிழர் என இனத்தால் பிரிந்தாலும் – முக்கிய பிரச்சினைகளால் பிளவுண்டாலும் அவர்களின் இலக்கு – நோக்கம் என்பது ஒன்றே என்பதையே. அது, இந்நாட்டில் பெரும்பான்மை இனத்தவருக்கே உரித்தான, சரிநிகர் சமானமாக உரிமைகளுடன் வாழவேண்டும்” என்பதையே. இதற்கான ஒரே வழி – ஒரே தீர்வு அதிகாரப் பகிர்வே. ஆனால், அதிகாரப் பகிர்வை – இந்தத் தீர்வை ஒற்றையாட்சி மனநிலை கொண்ட சிங்கள – பௌத்தர்கள் சிறுபான்மையினருக்கு தரவோ – வழங்கவோ ஒருபோதும சம்மதிக்கப்போவதில்லை.

ஆனால், பெரும்பான்மைத் தலைவர்களை வழிக்கு – அல்லது இணக்கத்துக்குக் கொண்டுவர சிறுபான்மை இனங்களுக்கு உள்ள ஒரே வழி நாடாளுமன்றத் தேர்தல். இதில், சிறுபான்மை இனங்கள் ஓரணியில் – ஒரே கூட்டணியில் – திரண்டு சிறுபான்மையினரின் பலத்தை வெளிப்படுத்த வேண்டும். இரு பெரும் தேசிய கூட்டணிகள் கொண்ட நாட்டில் நிச்சயமாக ஒரு தரப்பால் மட்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதற்கு சிறுபான்மை இனங்களின் ஆதரவு – துணை அவசியம். அல்லது தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.

ஆனால், குறுகிய மனப்பாங்குகளுடன் சிந்திக்கும் சிறுபான்மை தலைமைகளும் இருக்கும் நிலையில் இது அசாத்தியமான – கற்பனைத்தனமான விடயமாகவே இருக்கும். சிறுபான்மை இனங்களுக்கு நன்மைகள் கிடைக்க வேண்டுமானால் – முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்சம் உடன்பாட்டளவிலாவது ஒற்றுமையாக – ஓரணியாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதே சிறுபான்மை மக்கள் ஜனாதிபதி தேர்தல் ஊடாக உணர்த்தியுள்ள விடயம்.

எனினும் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை என்பது புதிய விடயமே அல்ல என்பதயும் புரிந்துகொள்ளவும் – வரலாற்றில் இதற்கு முன்னர் நிகழ்ந்துள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்வது அவசியம்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் – அடக்குமுறைகள் கட்டவிழத் தொடங்கிய காலத்தில் இலங்கைத் தமிழர்களின் தலைமைகளும் – மலையகத் தமிழர்களின் தலைமையும் இணைந்து செயற்பட முன்வந்தார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், மலையகத் தமிழர்களின் செல்வாக்குப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை இணைந்து1972 இல் “தமிழர் விடுதலைக் கூட்டணியை உதயமானது.

ஆனால், இக்கூட்டணி நீண்டகாலம் நிலைக்கவில்லை. மொழியால், கலாசாரத்தால், மதத்தால் ஒன்றிணைந்தாலும் முதன்மை பிரச்சினைகளால் நாம் வெவ்வேறே எனக் கூறி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரிந்து சென்றுவிட்டது. ஏனெனில், அப்போது மலையகத் தமிழர்கள் அதிகாரப் பகிர்வைக் கோரவில்லை. இலங்கையர் என்ற அந்தஸ்தையே முக்கியமாக வலியுறுத்தி வந்தனர். இன்றும் சம்பளம், குடியிருப்பு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளையே அவர்களுக்குப் பிரதானமானதாக உள்ளது. அன்றைய கோரிக்கைகளில் பலவற்றையே இன்றும் உயர்த்திப் பிடித்து நிற்கிறார்கள் மலையகத் தமிழர்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே வழியும் அதிகாரப் பகிர்விலேயே உள்ளது.

இதேபோல, உரிமைகளுக்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது, இஸ்லாமியத் தமிழர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றார்கள். தனித்தனியே போராடிய இருவருக்கும் எதிரி பொதுவே, நாம் இணைந்தே போராட வேண்டும் என்பதை நன்குணர்ந்த தமிழீழ விடுதலை நாகங்கள் அமைப்பின் தலைவர் ஜூனைதீன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தனது அமைப்பை இணைத்துக் கொண்டார். பின்னாளில் கப்டன் ஜோன்சனாக 1985 இல் வீரச்சாவைத் தழுவியிருந்தார். உரிமைப் போராட்டத்தில் – விடுதலைப் புலிகள் சார்பில் முதல் வித்தான இஸ்லாமிய தமிழர் இவர்தான். அவரைத் தொடர்ந்து 42 முஸ்லிம்கள் மாவீரர்களானார்கள். இறுதிப் போர் சமயத்திலும்கூட இஸ்லாமியத் தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள்.

ஆனாலும், காலப் போக்கில் தமிழர்களும் – இஸ்லாமியத் தமிழர்களும் இணைந்து செயற்பட முடியாது என்ற நிலை உருவானது. அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் இரு இனங்களும் ஒன்றாக முடியவில்லை என்பது பலவீனம்தான். இலங்கைத் தமிழர்களும் -இஸ்லாமியத் தமிழர்களும் – இந்தியத் தமிழர்களும் – ஒற்றுமையாக – ஒன்றாக முடியவில்லை என்றபோதும், அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படாமல் இருக்கவில்லை. ஆனால், அது வெறுமனே மூன்று இனங்களின் மேடைப் பேச்சுக்களுடனே முடிந்து விட்டது என்பது துர்லபமே.

இப்போது – 2019 ஜனாதிபதி தேர்தல் உணர்த்திய – வராற்றுச் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது. விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாத – அதிகாரப் பகிர்வுக்கு சம்மதிக்காத ஒருவரை சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து எதிர்த்ததன் மூலம் – அடிப்படை அனைவருக்குமான பொதுத் தேவை அதிகாரப் பகிர்வு என்பதையே உணர்த்தியுள்ளது. எனவே, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் தலைமைகளும் தனி நலன்களைத் துறந்து ஒன்றிணைவதன் மூலம், அனைத்து இனங்களும் சரிநிகர் சமானமாக – உரிமைகள் பெற்றவர்களாக தலைநிமிர்ந்து வாழமுடியும்.

இதுபற்றி சாத்தியப்பாடுகள் – ஏற்பாடுகள் உடனடியாக நிகழ்ந்து விட முடியாது என்பது யதார்த்தம். ஆனால், இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் சிறுபான்மை இனங்கள் எவற்றுக்கும் தீர்வு என்பதே கிடையாது. அரசுக்கு முட்டுக் கொடுக்கும் இனங்கள் – தலைமைகள் சலுகைகளை – சுகபோகங்களை அனுபவிக்க முடியுமே தவிர உரிமைகளையோ – சுதந்திரத்தையோ அனுபவிக்க முடியாது.

இதேபோன்று, இலங்கைத் தமிழர்களுக்குள் கட்சி ரீதியாக பிரிந்தும் – முரண்பட்டும் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு படிப்பினை. சலுகைகளுக்கும் – சுகபோகங்களுக்கும் சோரம் போகாமல், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து – ஓரணியில் நிற்பது அவசியம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும்கூட. மீறி தனிக் கட்சி நலன்கள்தான் முக்கியம் என்று கருதி ஒன்றிணையவோ – இணைந்து செயற்படவோ மறந்தால் – அல்லது மறுத்தால் அடிமை வாழ்வும் – உரிமைகள் இல்லா வாழ்வும் – நிச்சயம்.

வரலாற்றுக் கடமையை சிறுபான்மை இனம் – தமிழினம் செய்து விட்டது. தமிழினம் ஏற்றிய இந்த சிறு தீயை அணையவிடாது எரிய வைத்து ஒளி கொடுப்பார்களா சிறுபான்மை – தமிழினத் தலைமைகள்…?

-தமிழ்க் குரலுக்காக செவ்வேள் –