பெறுமதியற்றுப்போன தமிழ் வாக்குகள்!

ddddddddddddddddd 6
ddddddddddddddddd 6

தேர்தல் தொடர்பான தமிழ் ஆருடங்கள் அனைத்தும் தோற்றுப் போய்விட்டன. தமிழ்ச் சூழலில் சஜித் பிரேமதாசவின் வெற்றி தொடர்பிலேயே பலரும் ஆருடங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். சஜித் வென்றுவிடுவார் என்பதே தமிழ் மக்களது எதிர்பார்ப்பாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது.

இதில் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவொரு தடுமாற்றமும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கண்ணும் கருத்துமாக இருந்தது. உண்மையில் கோட்டபாய வென்றுவிடுவார் என்னும் எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் பரவியிருந்தால் நிச்சயமாக இந்தளவிற்கு வாக்களிப்பு நிகழ்ந்திருக்காது. ஏனெனில் கோட்டாவின் வெற்றியின் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு காரணம் தாங்கள் முழுமையாக எதிர்த்து வாக்களித்தவர் வென்றுவிட்டாரே – அவர் ஒருவேளை எங்களை பழிவாங்கிவிடுவாரோ என்று பலரும் ரகசியமாக மற்றவர்களின் காதுகளுக்குள் கூறிக்கொள்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் கோட்டபாய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே அவரது வெற்றியும் உறுதியாவிட்டது என்பதுதான் உண்மை. ஏனெனில் கோட்டபாய இந்த வெற்றியை சாதாரணமாகத் தொடவில்லை. இதுவரை இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களை விடவும் இது சற்று வித்தியாசமானதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவுமே இருந்தது.

கோட்டபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைவருமே அவரைப் பார்த்து பயந்தனர். ஏதாவது ஒரு காரணத்தின் மூலம் அவரை தேர்தல் அரங்கிலிருந்து அகற்றிவிட வேண்டுமென்னும் முயற்சிகள் பல பக்கங்களிலும் இடம்பெற்றது. அவரது குடியுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரது குடியுரிமை நீக்கல் கோரிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இரட்டை குடியுரிமை பெற்றுக்கொண்ட முறை தவறானது என்னும் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும் இவை அனைத்திலும் கோட்டபாயவே வெற்றிபெற்றார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் வெற்றிகரமாக தாண்டினார். இந்தளவு சிக்கல்களை எதிர்கொண்டு எவருமே இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. கோட்டபாயவிற்கு நெருக்கடிகளை எதிர்தரப்பினர் எந்தளவிற்கு கொடுத்ததார்களோ அந்தளவிற்கு அவர் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருந்தார்.

கோட்டபாய 69 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். மொத்த வாக்குகளில் 52 வீதத்தை பெற்றிருக்கின்றார். இதில் சிங்களவர்கள் அல்லாதவர்களின் வாக்குகள் சொற்ப அளவே. அப்படிப் பார்த்தால் சிங்களவர்களின் வாக்குகளிலேயே அவரால் வெற்றிபெற முடிந்திருக்கின்றது. அவ்வாறானதொரு வெற்றி தனக்கு சாத்தியம் என்பதை ஏற்கனவே கோட்டபாய கூறியுமிருக்கின்றார். அவர் எதிர்பார்த்தது போன்றே வெற்றிபெற்றிருக்கின்றார்.

கோட்டாவின் வெற்றி எவ்வாறு சாத்தியப்பட்டது? அதிலும் குறிப்பாக தனிச்சிங்கள வாக்குகளில் அவரால் எவ்வாறு வெற்றிபெற முடிந்தது. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் யுத்த வெற்றிவாதமே கோட்டாவை வெற்றிபெறச் செய்ததான ஒரு அபிப்பிராயமே காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு பகுதியளவு உண்மை மட்டுமே. இன்னொரு பகுதி உண்மையும் உண்டு.

அதாவது, மூன்று பிரதான விடயங்களை கோட்டாவின் வெற்றியை தீர்மானித்தது. ஒன்று, யுத்த வெற்றியின் சொந்தக் காரரான கோட்டபாய ராஜபக்ச பத்து வருடங்களின் பின்னர் ஒரு தேர்தலில் போட்டியிடுகின்றார். சிங்கள மக்களின் வாக்குகளை கேட்டு அவர்களது கதவை தட்டுகின்றார். இது ஒரு தொகுதி சிங்கள மக்களை நிச்சயம் நெகிழவைத்திருக்கும் என்பதில் ஜயமில்லை. விடுதலைப் புலிகளை வீழத்துவதற்கு தலைமை தாங்கிய ஒரு மனிதர், தங்களிடம் வாக்குளை கேட்கும் போது அவருக்கு வாக்களிக்க வேண்டியது சிங்களவர்களின் நன்றியுனர்வு சார்ந்த பிரச்சினை. எனவே அவர்கள் அவரை ஆதரித்தனர்.

இரண்டு, ஈஸ்டர் தாக்குதல் சிங்கள வெகுசன பரப்பில் ஏற்படுத்தியிருந்த அச்ச மனநிலை. பத்துவருடங்களாக வெடிகுண்டு, அழிவு என்பவற்றை மறந்திருந்த சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்னும் புதிய அச்சம் தொற்றிக்கொண்டது. இதிலிருந்து தங்களை மீட்கக் கூடியவர் யாரென்று அவர்கள் சிநத்தித்த போது, ஒரு தொகுதி சிங்கள மக்கள் மத்தியில் கோட்டாவே தெரிந்தார். இதன் காரணமாகவே இம்முறை வழமையாக ஜக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கும் சிங்கள மத்தியதர வர்க்கத்தினர் கூட, கோட்டபாயவிற்கே வாக்களித்திருக்கின்றனர்.

மூன்றாவது கடந்த ஜந்துவருட கால ஆட்சி. தேசிய அரசாங்கத்தின் மீது சிங்கள மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை நல்லாட்சி அரசாங்கம் காப்பாற்றவில்லை. இதனால் ஒரு தொகுதி சிங்கள மக்கள் வெறுப்புற்றனர். அவர்கள் ஒரு மாற்றத்தை விரும்பினர். அவர்களுக்கு முன்னாலும் கோட்டாவே தெரிந்தார். மேற்படி மூன்று காரணங்களும் கோட்டாவை நோக்கி சிங்கள மக்களை கொண்டுசென்றது. அவரது வெற்றியும் இலகுவானது.

மறுபுறத்தில் சஜித்பிரேமதாசவிற்கோ எந்தவொரு சாதகமான காரணிகளும் இருக்கவில்லை. உண்மையில் கோட்டாவை எதிர்கொள்ளக் கூடிய ஒரு வேட்பாளராக சஜித் இருக்கவுமில்லை. இந்த நிலையில்தான் தமிழ் மக்களின் வாக்குகள் தோல்வியின் பக்கமாக சென்றதால் அதற்கு எந்தவொரு பெறுமதியும் இல்லாமல் போhனது. மேலும் 2015இல் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை உந்தித்தள்ளுவதில் பின்நின்ற வெளிநாட்டு தரப்புக்கள் அனைத்தும் இம்முறை வெறும் பார்வையாளராகவே இருந்தனர்.

தமிழ் மக்கள் சஜித்பிரேமதாசவை ஆதிரித்தமையின் பின்னால் இரண்டு பிரதான காரணங்கள் இருந்தன. ஜனாதிபதி தேர்தல்களின் போது, தமிழ் மக்கள் ஜக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் ஒரு பழக்கம் இருக்கின்றது என்பது உண்மைதான், ஆனாலும் அதனையும் தாண்டி அதிகப்படியான மக்கள் ஆர்வமாக வாக்களிப்பில் கலந்துகொண்டதற்கு பின்னால் மேற்படி காரணங்களே இருக்கின்றன. ஏனெனில் ஆரம்பத்தில் ஒரு பார்வை இருந்தது. ஒரு குறிப்பிட்ட தொகை தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். அதே போன்று ஒரு குறிப்பிட்ட மக்கள் சிவாஜிலிங்கத்தை இம்முறை ஆதிரிக்கக் கூடும். ஆனால் அவை எதுவும் நிகழவில்லை மாறாக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதும் சஜித்பிரேமதாசவையே ஆதரித்தனர்.

இதற்கான முதலாவது காரணம், கோட்டா என்னும் அச்சம் தமிழ் மக்களை பற்றிக்கொண்டது. அந்த அச்சத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் சஜித்தின் வெற்றி தேவைப்பட்டது. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் சஜித்தை ஆதரித்தனர். கூட்டமைப்பும் கோட்டா தொடர்பான அச்சத்தை பெருப்பித்தது. கோட்டா வந்தால் வெள்ளை வேன் வரும் என்றவாறான போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு தமிழ் மக்களை அச்சமூட்டியது. கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வீடுவிடாக இந்த அச்சத்தை விதைத்தனர் இதனால் தமிழ் மக்கள் மிரண்டனர்.

இரண்டாவது முக்கிய காரணம் – தமிழ் மக்கள் வெற்றிபெறப் போவது சஜித் பிரேமதாசதான் என்று உண்மையிலேயே நம்பினர். கூட்டமைப்பினரும் அவ்வாறானதொரு நம்பிக்கையே தமிழ் மக்களுக்கு கொடுத்தனர். கோட்டாவின் வெற்றியை தெளிவாக உணரக் கூடிய நிலைமை இருந்தும் மக்களுக்கு தவறான பார்வையே கூட்டமைப்பு கொடுத்தது. அதன் விளைவு தமிழ் மக்களின் வாக்குகள் செல்லாக் காசாகியிருக்கின்றன.

உண்மையில் இந்தத் தேர்தலை வேறு விதமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். ஒன்றில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிக்கும் நிலைமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது சாத்தியப்படாத பட்சத்தில் பக்கம் சாயாத முடிவை எடுத்திருக்க வேண்டும். அந்த வகையில் நோக்கினால் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனின் முடிவு தந்திரோபாயம் சார்ந்து சரியானதே! ஒரு தலைமை என்னும் வகையில், மக்களை முடிவெடுக்குமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, ஒரு நெருக்கடியான சூழலில் பக்கம் சாய்வதன் மூலம் ஏற்படப் போகும் சிக்கல்களை தவிர்த்துக்கொள்ளல் என்னும் வகையில் நோக்கினால் அந்த முடிவு சரியானதே!

கோட்டாவின் வெற்றி ஒரு சில தெளிவான செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குள் இலங்கையின் அரசியலில் தீர்மானகரமான வாக்குகள் அல்லது அதாவது தமிழ் மக்கள் ஒரு தீர்மானிக்கும் சக்தியல்ல என்பது இன்று நிரூபனமாகியிருக்கின்றது.

2015இல் கிடைத்த தேர்தல் வெற்றியை வைத்துக் கொண்டு அவ்வாறானதொரு பார்வையே தமிழ்ச் சூழலில் மேலோங்கியிருந்தது. நிலாந்தன் போன்ற ஆய்வாளர்கள் இதற்கும் அப்பால் சென்று, தமிழ் மக்களின் வாக்குகள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த வாக்குள் என்றெல்லாம் வர்ணித்திருந்தனர் ஆனால் அவை அனைத்தும் தவறான பார்வைகள் என்பதை கோட்டாவின் வெற்றி நிரூபித்திருக்கின்றது. தென்னிலங்கையில் சமநிலையான போட்டி நிலவும் போது மட்டும்தான் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு பெறுமதியிருக்கும்.

சிங்களவர்கள் விழித்துக்கொண்டால் தமிழ் வாக்குகளுக்கு எந்தவொரு பெறுமதியும் இருக்கப் போவதில்லை. இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு எந்தவொரு பெறுமதியும் இல்லை. தலைமைகளின் சுயநல அரசியலால் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்ற வாக்குகளாகியிருகின்றன.

கரிகாலன்

( பொறுப்பு திறத்தல்: இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )