புலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா?

ampika
ampika

தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களும் – தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களில் இருந்து தப்புவதற்கு தாம் நகர்த்திய இராஜதந்திர காய்கள் வெற்றியை தந்து விடதா? என்ற அங்கலாய்ப்புடன் இலங்கை அரசும் உள்ளன.


இந்த வேளையில் தனது நிறைவேறாத அரசியல் கனவின் காழ்ப்புணர்வை 15 சுட்டுரை (twitter) பதிவுகள் மூலம் தீர்த்துள்ளார் திருமதி அம்பிகா சற்குணநாதன்.


திருமதி அம்பிகா சற்குணநாதனுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. போர் காலத்தில் ஐ.நா. அறிக்கையாளர்களில் ஒருவர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராகக் களமிறக்க நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனால் முயற்சிக்கப்பட்டவர். அவரின் இந்த முயற்சிக்கு கட்சிக்குள்ளும் – மக்கள் மத்தியில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் தோன்றவே அவரை வேட்பாளராக்கும் முயற்சி கைவிடப்பட்டது.


ஆனால், சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் அம்பிகா சற்குணநாதனை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு சுமந்திரன் பகீரதப் பிரயத்தனங்களை செய்தார். இதனால், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பட்டியலில் முதலிடத்தில் அவரின் பெயர் இடம்பெற்றது.


தனது இந்த முயற்சிக்கெல்லாம், அம்பிகா சற்குணநாதன் மனித உரிமைகள் செயல்பாட்டாளராக இருந்து ஐ.நாவுக்கு சமர்ப்பித்த அறிக்கைகள் – தமிழ் மக்களின் துன்பியல்களை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டின. இதனால் அரசு அவருக்கு பலத்த நெருக்கடிகளை கொடுத்தது. ஆகையால் தமிழ் மக்களுக்காக செயற்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளரை தங்கள் பிரதிநிதியாக்கி, அவர் தொடர்ந்தும் செயற்பட – நீதிக்கான உரிமை கோரலில் தொடர்ந்தும் முன்னோக்கி நடக்க தமிழ் மக்கள் வழி செய்ய  வேண்டும் என்று விளக்கமளித்திருந்தார்.


ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்த வியாக்கியானங்கள் எல்லாம் வெறுமனே – தேர்தல் கால பசப்பு வார்த்தைகளே என்பதை திருமதி அம்பிகா சற்குணநாதன் தனது சுட்டுரை பதிவுகள் மூலம் இப்போது நிரூபித்திருக்கிறார்.
அவரின் 15 சுட்டுரை பதிவுகளில் இடம்பிடித்த முக்கிய அம்சங்கள் இவைதான்.


1. ஐ.நா., மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகளையும் பதிவு செய்துள்ளன.
2. 2009 பெப்ரவரி – போர் வலயத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் புலிகளால் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். – இறுதிப் போரில் பொதுமக்கள் இறப்பு கணிசமாக அதிகரிக்க இதுவும் காரணம்.
3. இரக்கமற்ற இராணுவ அமைப்பாக புலிகள் இருநு்தனர். சிங்கள – முஸ்லிம் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து விரட்டினர்.
4. இராணுவ இலக்குகளை குறிவைத்த புலிகள், பொது மக்களையும் இலக்கு வைத்து தாக்கினர். 
5. அரசியல் படுகொலைகளை நிகழ்த்தினர்.
6. மட்டக்களப்பில் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை சுட்டுக் கொன்றனர்.
7. போர் நிறுத்த காலத்தில் புலிகள் 3,800 மீறல்களை செய்துள்ளனர். அரசாங்கம் 350 மீறல்களையே செய்தது.
8. மக்களை மிரட்டி கப்பம் பெற்றனர்.
9. சிறுவர்களை படைக்கு சேர்த்தல், பலவந்தமான ஆட்சேர்ப்பில் புலிகள் புலிகள் ஈடுபட்டனர்.
10. வலைஞர்மடத்தில் சென். மேரிஸ் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் – இளைஞர்கள் பலவந்தமாக ஆட்சேர்ப்பு சேர்க்கப்பட்டனர். 
11. 2689 சிறுமிகளும், 6905 சிறுவர்களும் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர் என்று ஐ.நா. சிறுவர் நிதியமான யுனிசெவ் அறிக்கையிட்டுள்ளது.

12. 2002 போர் நிறுத்தத்தில் தமிழர்களுக்கு கிடைத்த ஒரே சிறுநன்மை சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தவிர்க்கப்பட்டதே.
இந்த அம்சங்களையே அம்பிகா தனது சுட்டுரை பதிவில் சர்வதேசத்துக்கு புரியும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.


முன்னாள் ஐ.நா. அறிக்கையாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் தமிழ் மக்களின் பேராதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்ட ஒருவர் இந்தக் கருத்துக்களை – அதுவும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடக்கும் நேரத்தில் பதிவிட்டிருப்பது சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் வழி. இவ்வாறான ஒருவரின் கருத்து  விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகின்றனர் என்று கருதப்பட முடியும்.


ஆக, இங்கு புலிகள் தவறு செய்யவில்லையா? அவர்களின் குற்றங்களுக்கு தண்டனை இல்லையா என்று ஒரு சாரார் கிளர்ந்தெழக் கூடும். ஆனால், இங்குள்ள சிக்கல் அதுவல்ல. அப்படியே புலிகள் மீதான குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதாக இருந்தாலும் அழிக்கப்பட்ட இயக்கத்தை தண்டிப்பது எங்ஙனம் சாத்தியம். தவிர குற்றம் செய்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்த கருணா போன்றவர்கள் இன்றும் இலங்கை அரசின் தயவிலேயே உள்ளனர். இவை எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகள் அமைப்பு ஐ. நாவின் மனித உரிமைகளை ஏற்று – அதை ஒழுகுவதற்கான கட்டமைக்கப்பட்ட ஓர் அரசாங்கம் அல்ல. மாறாக அது தனது கொள்கைகளில் தீவிரமாக செயற்பட்ட – அதை அடைவதற்காக செயற்பட்ட தீவிரவாத அமைப்பு மட்டுமே.

ஆனால், அம்பிகா சற்குணநாதனின் பதிவின் நோக்கம் புலிகளை தண்டிப்பதோ அல்லது அரசின் தயவில் இருப்பவர்களை தண்டிக்கக் கோருவதாகவோ நிச்சயம் இல்லை. மாறாக புலிகள் குற்றவாளிகள் – அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் இலங்கை அரசின் மீது – அதாவது தற்போதைய ஆட்சியாளர்கள் – படைப் பிரதானிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது அல்லது இந்த முயற்சி தேவையற்றது என்ற விதமான வியாக்கியானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதேநேரத்தில், போராட்ட அமைப்பான – அம்பிகா போன்றவர்களின் வார்த்தையில் சொல்வதானால் தீவிரவாத – பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளும் – இலங்கை அரசாங்கத்தையும் ஒரே தராசில் நிறுத்தி சமப்படுத்தி, இலங்கை அரசாங்கத்தின் போர் குற்றம் – மனித குல விரோத செயல்பாடுகளிலிருந்து அதற்கு விலக்களிக்கும் செயலையே அம்பிகா சற்குணநாதன் தற்போது தூண்ட முயல்கிறார்.


ஆனால், அவர் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள மறந்துள்ளார். அது ஒரு போராட்ட அமைப்பையும் – பொறுப்புக் கூற வேண்டிய – கடப்பாடுகள் நிறைந்த அரசாங்கத்தையும் ஒரே தராசில் நிறுத்த முடியாது என்பதே. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று மனித உரிமைகளை நிலைநிறுத்துவோம் என்று நாட்டு மக்களுக்கும் – சர்வதேசத்துக்கும் உறுதியளித்த ஓர் அரசும் அதன் படைகளும், ஒரு போராட்ட அமைப்பு போன்று நடக்க முடியாது என்பதே உண்மை. 
தவிர, போர் முடிந்து 11 ஆண்டுகள் கடக்கும் நிலையில், இங்கு நடந்தவற்றை மீள நிகழாமையை உறுதிப்படுத்த முடியாததாக – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முடியாத ஓர் அரசாக உள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத அரசாகவே இன்னமும் உள்ளது. முக்கியமாக இந்த அரசின் காலத்தில் சிறுபான்மை இனங்கள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்கிறார்கள். இவ்வாறான நிலையிலேயே இலங்கை அரசின் கடந்த கால குற்றச் செயல்களுக்கு விலக்களிப்பு கோரும் விதத்தில் பதிவுகள் அமைந்துள்ளன.

மிகச் சொற்பமான மக்களே இறுதிப் போரில் கொல்லப்பட்டனர் என்று அரசாங்கம் வாதிட்டுவரும் சூழலில் கணிசமான உயிரிழப்புக்கு புலிகளே காரணம் என்று கூறி, அரசின் வாதத்துக்கு வலுச் சேர்க்கிறாரோ என்ற ஐயம் எழுந்துள்ளது. தவிர, தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ள இந்தத் தருணத்தில், புலிகள் இழைத்தவை என்று கூறப்படும் குற்றங்களின் பட்டியலை வரிசைப்படுத்தியதன் மூலம், புலிகள் இயக்கத்தின் குற்றங்கள் மறக்கப்பட்டமை – மன்னிக்கப்பட்டமை போன்று, இலங்கை அரசின் மீதான குற்றங்களை மறக்கவும் – மன்னிக்கவும் – பொறுப்புக் கூறலில் இருந்து விடுவிக்கவும் வலியுறுத்த விரும்புகிறார் என்றே கருத முடியும்