வடக்கு முதலமைச்சர் நாற்காலியில் அமரும் தகுதி மாவைக்கு உண்டா…?

.jpg
.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராஜா தகுதியற்றவர்”, என்று முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் கொளுத்திப் போட்ட விடயம்  வடக்கு அரசியல் பரப்பில் சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியது.

விக்னேஸ்வரனின் கருத்துக்கு அவரின் கூட்டணிக்குள் இருந்தே எதிர்ப்பு கருத்துக்கள் தோன்றின. ஆனாலும், ஒரு வாரம் கழிந்த நிலையில், மாவை சேனாதிராஜாவும் தன் பங்குக்கு கருத்தை  வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சொந்தக் கூட்டணிக்குள்ளேயே குழப்பத்தை – கோபத்தை ஏற்படுத்திய இத்தகைய கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியிருப்பது அவசியமா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

தமிழினத்தின் விடுதலை போராட்டம் ஆரம்பமான காலம் தொட்டு அரசியல் பாதையில் தொடர்ந்து பயணிப்பவர்கள் மூவர் மட்டுமே. ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மற்றவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராசா ஆகியோர். எனினும், சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகிய தலைவர்களுக்கு இல்லாத பெருமையும் – போராட்ட வரலாறும் மாவை சேனாதிராஜாவுக்கு உண்டு.

நெடிய – வலி நிறைந்த போராட்டம் நிறைந்தது அவரின் ஆரம்ப அரசியல் வாழ்வு. போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே சிறைகளில் கொடிய சித்திரவதைகளை அனுபவித்தவர் மாவை சேனாதிராஜா. தந்தை செல்வநாயகம் முதல் கொண்டு அமிர்தலிங்கம் – சிவசிதம்பரம் போன்றவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர் அவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகரனின் தலைமையையும் ஏற்று அவரின் கீழ் அரசியல் களத்தில் நின்றவர். இத்தகைய பெரும் அனுபவம் நிறைந்த மாவை சேனாதிராஜாவை விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் என சாதாரணமாகக் கூறியமை பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.

தமிழரின் விடுதலை போராட்டத்துக்கான முதல் புள்ளிகளில் ஒன்றாக அமைந்தது 1961 சத்தியாகிரக போராட்டம். இந்தப் போராட்டத்திலிருந்து மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணமும் – போராட்ட வரலாறும் ஆரம்பமாகிறது.  ஈழத் தமிழ் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக இருந்த அவர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். இதற்காக 1966இல் கைது செய்யப்பட்டு 1969இல் விடுதலையானார். இதன் பின்னரும்கூட தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுத வழியில் ஆரம்பிக்கும் காலம் வரை மாவை சேனாதிராசாவின் போராட்டங்கள் தொடர்ந்தன. இதற்காக அவர் பல தடவைகள்  கைதுகளுக்கும் உள்ளாகியிருந்தார்.

போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்ற காலத்தில் அவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலும், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இணைந்து இயங்கியிருந்தார். இதனால், 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். ஆனால், அதே ஆண்டு கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் கொலையானார். அவரின் இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கிய அவரின் நாடாளுமன்ற பயணம் 2020 தேர்தல் வரை தொடர்ந்தது.

7 தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து விட்ட மாவை சேனாதிராஜா அரசியல் ரீதியாக நீண்ட அனுபவம் கொண்டவர். இத்தகைய அனுபவம் கொண்டவர் – தற்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுள் நீண்ட நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர் முதலமைச்சர் பதவியில் அமரத் தகுதியற்றவர் என்று கூறுவது ஆச்சரியத்தை தருவதில் வியப்பிருக்காது.

வடக்கு மாகாண சபைக்கு 2013இல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தொகுதி கிளையினர் மாவை சேனாதிராஜாவையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தியிருந்தன என்று மாவை சேனாதிராஜா கூறியிருந்தார். அது உண்மையும்கூட, இதற்காக நாடாளுமன்ற உறுப்புரிமையையும் துறப்பதற்கு அவர் தயாராக இருந்தார். ஆனால், முதன்முதலாக வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்தத் தேர்தல் மூலம் முழு இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் மிகப்பெரிய செய்தி ஒன்றை உணர்த்த விரும்பியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

தமிழர்கள் தனித் தேசத்துக்கு உரியவர்கள் – அவர்கள் தங்களை தாங்களே ஆளும் உரிமையையே விரும்புகின்றனர். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி ஒன்றைப் பெறுவதன் மூலம் அந்த செய்தியை அனைத்துத் தரப்பினருக்கும் புரிய வைக்க முடியும் என்பது இதன் பிரதான நோக்கமாக இருந்தது.

இதேபோன்று, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி என்பது தமிழ் மக்களின் ஜனநாயக தலைமை என்ற குறியீட்டுக்கான பதவியாகக் கருதப்பட்டது. அதனால், முதலமைச்சர் பதவியில் அமருபவர் அரசியல் அனுபவங்களுக்கு அப்பால், தலைமை பண்பும் – ஆளுமை திறனும் கொண்டவராக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவாகும் ஜனநாயக தலைமை தமிழ் மக்களின் விடயங்கள் – அபிலாஷைகள் குறித்து இந்தியாவின் – சர்வதேசத்தின் தலைமைகளுடன் சமதையாக அமர்ந்து உரையாட வல்லவராக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. எனவே அவ்வாறான பதவிக்கு உரிய ஒருவரே தேவைப்பட்டார்.

மேலும், போரால் அழிவுகளை சந்தித்து நின்ற இனம், 2010 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பில் பெரிதும் அக்கறை காட்டாத மக்கள் கூட்டத்தை பெருவாரியாக வாக்களிக்கச் செய்ய வேண்டுமானால் – அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவல்ல – ஈர்ப்புமிக்க வேட்பாளர் ஒருவர் தேவை. அத்தகைய சிறந்த வேட்பாளரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தேடியது.

இந்நிலையிலேயே, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை தன்வசமாக்கிய மாவை சேனாதிராஜா அந்தப் பலத்தின் மூலம் கூட்டமைப்பு தலைமையை குழப்பத்தில் தள்ளினார்.

இது  ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தொட்டு அதன் வளர்ச்சியில் அதீத செல்வாக்கு செலுத்திய பிரபல பத்திரிகையாளர் ந. வித்தியாதரனும் முதலமைச்சர் வேட்பாளருக்கான பந்தயத்தில் இருந்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவராகவும் செயலாளராகவும் – இரா. சம்பந்தனின் முக்கிய உரைகள் ஆற்றும்போது அது தொடர்பில் ஆலோசனைகளை வழங்குபவராகவும் செயல்பட்டவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பியது. இதனாலேயே, அன்றைய  வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் பந்தயத்தில் அவரின் பெயரும் இருந்தது.

ஆனால், கூட்டமைப்பின் தலைமை,  முதலமைச்சர் தெரிவு விடயத்தில் தெளிவாக இருந்தது. முதலமைச்சர் வேட்பாளர் பந்தயத்தில் சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் “நான் வெறுமனே முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை தேடவில்லை. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவோடும், இந்தியப் பிரதமர் மோடியுடனும் உட்கார்ந்து பேசவல்ல ஒருவரையே தேடுகிறேன்”, என்று பதிலளித்திருந்தார்.

அவரின் இந்தப் பதில் முதலமைச்சர் வேட்பாளர் பந்தயத்தில் இருந்த இருவரையும் மௌனிக்க செய்தது. ஏனெனில், அவர் குறிப்பிட்ட தமிழினத்தின் ஜனநாயகத் தலைமை என்ற பதவிக்கு இருவரும் தகுதியற்றவர்கள் என்பதை அந்தப் பதிலின் மூலம் இருவருக்கும் உணர்த்தியிருந்தார். இதன் மூலம், மாவை சேனாதிராஜாவுக்கு முதலமைச்சர் பதவிக்கான தகுதியில்லை என்பதை அவரின் தலைமையே உறுதியாகக் கூறிவிட்டது.

இது ஒருபுறமிருக்க, 2009 இல் தலைமையை தமிழினம் இழந்த பின்னர், ஜனநாயக வழித் தலைமைகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளி வந்தார்கள். சர்வதேச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளாகட்டும் – ஐ.நா. உயர் அதிகாரிகளுடனான உரையாடல்களாகட்டும் – இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களாகட்டும் இவற்றில் எதையும் மாவை சேனாதிராஜாவால் தனித்து செய்ய முடியாத நிலைமையே இருந்தது. இந்த உயர் அதிகாரிகளை – இராஜதந்திரிகளை கையாள்வதற்கு அவருக்கு இன்னொருவரின் உதவி – அவரின் இராஜதந்திர தொடர்பாடல் திறன் – மொழி – ஆளுமை திறன் என்பன தேவைப்பட்டன. இதனாலேயே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையை மெல்ல மெல்ல இழக்க நேரிட்டது. அத்தகைய ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமரத் தகுதியற்றவராகவே கட்சித் தலைமை கருதியது.

வடக்கின் முதலமைச்சர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் – மாகாண அரசுக்கும் இடையிலான பிரச்னைகள் மிக முக்கியமானவை. ஆனால், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதில் உயர் நீதிமன்றின் நீதியரசராக இருந்த ஒருவரையே குழப்பத்தில் தள்ளியது. மாவை சேனாதிராஜா போன்றவர்கள் அந்தப் பதவியில் உட்கார்ந்து மத்திய – மாகாண அரசுகளின் போரை நடத்துவது என்பது சுலபமானதல்ல. வெறுமனே வெற்றுக் கோது அதிகாரத்தைக் கொண்டுள்ள மாகாண சபை ஆட்சியை அவர்களால் முழுமையாக நடத்த முடியாத நிலைமையே உருவாகியிருக்கும்.

இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் 2013இல் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையை விட்டுக் கொடுத்தேன் என்றும் வாக்குகள் சிதறாமல் தடுக்கவே தான் போட்டியிட வேண்டும் என்றும் கூறினார். ஆனால், அவர் இன்னமும் யதார்த்தத்தை உணரவில்லை.

முதலமைச்சர் பதவி என்பது அவருக்கு மட்டுமே உரித்தான பதவி என்பது போன்ற அவர் கருத்தை வெளியிட்டிருந்தார். 2013இல் அந்த சந்தர்ப்பத்தை தியாகம் செய்தார் என்றும், இனி அதனை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது போன்றும் அவரின் கருத்து இருந்தது. இதன் மூலம் கட்சி தலைமைக்கே தனது இறுக்கமான நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

ஆனால், அவர் கூறுவது போன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைமை முன்னர் போன்று கட்டுக்கோப்பாக மக்கள் செல்வாக்குப் பெற்றதாக இல்லை என்பதே யதார்த்தம். மாவை சேனாதிராஜா தலைவரான காலம் தொட்டு கட்சியின் கட்டுக்கோப்பும் – அதன் செல்வாக்கும்  சரிந்து கொண்டு வருவதே உண்மை. இதுவே, அவரின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் வழிவகுத்தது.

கட்சியை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற மாவை சேனாதிராஜாவின் ஆளுமை, போரால் பாதிக்கப்பட்டு – பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் தமிழ் மக்களின் வாழ்வை மீட்டெடுக்க கைவசம் வைத்திருக்கும் வழிதான் என்ன?

சுமார் 30 வருட கால நாடாளுமன்ற அனுபவ காலத்தில் தமிழ் மக்களுக்காக மாவை சேனாதிராஜா ஆற்றிய மகத்தான பணி அல்லது அல்லல்படும் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தார் என்ற கேள்விக்கு அவரிடம் உள்ள பதில்தான் என்ன?

ஆனால், அவரை நோக்கி எழுப்பப்படும் இந்த இரு கேள்விகளுக்கும் தமிழ் மக்களிடம் உள்ள பதில் “ஒன்றுமில்லை” என்பதுதான்.

தொடர்ச்சியாக சுமார் 22 ஆண்டுகால அவரின் நாடாளுமன்ற சொகுசு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்த பின்னர்தான், 1983இற்கு முன்னர் தமிழ் மக்களுக்காக பணியாற்றிய அரசியல் போராளி மாவை சேனாதிராஜா வெளிவந்தார். தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்கினார். அதை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்லவும் முயன்றார். ஆனால், அதுவும் இப்போது சேடம் இழுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தோல்விக்கு மேல் தோல்வியடைந்த மாவை சேனாதிராஜா தனது இறுதி அஸ்திரமாக 2013இல் எவ்வாறான தந்திரத்தை – பழைய உலுத்துப்போன உத்தியை – அதனையே இப்போதும் பின்பற்றுகிறார். கட்சி தலைமை என்ற பிடியை வைத்துக் கொண்டு தொகுதி கிளைகள் மூலம் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுவிடத் துடிக்கிறார். அவருக்கு இப்போது இருக்கும் ஒரே பலம், பங்காளிக் கட்சிகளின் ஆதரவு ஒன்றே. அதுவும் அவரது ஆளுமை திறனுக்கானதல்ல. அது அவர் மீதான இரக்கத்தின் மீதானது…!

ஆக, முன்னாள் முதலமைச்சரும் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் கூறியது போல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூறியது போல்… மாவை சேனாதிராஜா முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்பதே உண்மையும் யதார்த்தமுமாகும். 

– தமிழ்க்குரலுக்காக குமரன்