எழுக தமிழை எதிர்ப்பவர்களும் அதன் பின்னணியும்

img 20161201 101449
img 20161201 101449

தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 2016 ஆம் ஆண்டு இது போன்றதொரு எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை வடக்கிலும் கிழக்கிலும் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. 2016இல் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. அவ்வாறானதொரு சூழலிலும் கூட, எழுக தமிழ் நிகழ்வுகளை பேரவை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. ஆனால் இம்முறை எழுக தமிழ் நிகழ்வுகள் தொடர்பாக சில தரப்புக்கள் சந்தேகங்களையும் அவதூறுகளையும் பரப்பிவருகின்றது. முக்கியமாக தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்துவம் வகித்த அரசியல் கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எழுக தமிழ் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது. காங்கிரசின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களின் வழியாக, இவ்வாறான அவதூறுகளை பரப்பிவருகின்றனர். இது விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கம் கொண்டது என்பதே அவர்களது பிரச்சாரங்களின் சாரம்சமாகும். அது உண்மைதானா?

கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகள் தவறான பாதையில் பயணிக்கின்றது என்னும் விமர்சனங்கள் மேலோங்கிய ஒரு சூழலில்தான், மாற்றுத் தலைமை தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஒரு மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அதன் இணைத்தலைவராக அப்போது வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த, சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். உண்மையில் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்பதை விடவும், அவரை மையப்படுத்தித்தான் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. இதில் அங்கத்துவ கட்சிகளாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக விடுதலை முன்னணி (புளொட்) ஆகியயை இணைந்துகொண்டன.

பேரவை ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்பிற்கு எதிரான அமைப்பாக தங்களை அடையாளப்படுத்தவில்லை ஏனெனில், பேரவையின் இணைத்தலைவராக இருந்த விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் சார்பிலான வடக்கு மாகாண முதலமைச்சராகவே இருந்தார். அதே போன்று ஈ.பிஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகியவை பேரவையில் இணையும் போது, கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகவே இருந்தன. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதுதான் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிற்கு வெளியில் சென்று பிறிதொரு கூட்டில் போட்டியிட்டிருந்தார். இந்த பின்புலத்தில் நோக்கினால், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த விக்கினேஸ்வரனுடனும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடன்தான் கஜேந்திரகுமார் இணைந்திருந்தார். அவர்களுடன் இணைந்துதான் 2016இல் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுகளில் பங்குகொண்டிருந்தார். அப்போது கஜேந்திரகுமாருக்கு கொள்கை ஒரு பிரச்சினையாக இருந்திருக்கவில்லை. உண்மையில் அவர் அடிக்கடி கூறுவது போன்று தாங்கள் கொள்கை வழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது உண்மையானால், அவர் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுடனும் கூட்டமைப்பின் முதலமைச்சரோடும் இணைந்து செயற்பட்டிருக்க முடியாது. 2016 – எழுக தமிழ் மேடையில் வைத்து, விக்கினேஸ்வரனை தமிழினத்தின் தலைவர் என்று கஜேந்திரகுமார் விழித்திருந்தார். இன்று கஜேந்திரகுமாரின் பேச்சாளராக தன்னை முன்னிறுத்திவரும் சட்டத்தரணி காண்டீபன், எழுக தமிழ் மேடைக்கு அருகில் நின்றவாறு தலைவா – தலைவா என்று தனது தொழிலையும் மறந்து விக்கினேஸ்வரனின் ஒரு அடிமட்ட தொண்டன் போன்று, சத்தமிட்டுக் கொண்டிருந்தார். அன்று போற்றப்பட்ட, கொண்டாடப்பட்ட விக்கினேஸ்வரன் இப்போது ஏன் தூற்றப்படுகின்றார்? அன்று கேட்கப்படாத சந்தேகக் கேள்விகள் ஏன் இப்போது கேட்கப்படுகின்றன? இதன் உண்மையான பின்னணி என்ன?

2016இல் எந்த விக்கினேஸ்வரன் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினாரோ, அதே விக்கினேஸ்வரன்தான் 2019 எழுக தமிழக்கும் தலைமை தாங்குகின்றார்? அப்போது சரியான நிகழ்வாகத் தெரிந்த எழுக தமிழ் இப்போது எப்படி தவறான ஒன்றாகத் தெரிய முடியும்? மக்கள் அனைத்து விடயங்களையும் கேள்விகளின் ஊடாக அணுகப் பழக வேண்டும். ஒவ்வொரு அரசியல் தரப்பினரும் முன்வைக்கும் வாதங்களிலுள்ள தர்க்கரீதியான பலவீனங்களில் அவதானம் செலுத்த வேண்டும். ஏன் இந்த எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது? அது மக்கள் நலன் சார்ந்ததா அல்லது கட்சி நலன் சார்ந்ததா?

இன்றைய நிலையில் – இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், கஜேந்திரகுமார் தரப்பினரை தவிர, வேறு எவரும் எழுக தமிழ் நிகழ்வை எதிர்க்கவில்லை. கூட்டமைப்புக் கூட எதிர்க்கவில்லை. காங்கிரஸ் இதனை எதிர்ப்பது மக்கள் நலன் சார்ந்த ஒன்றா? நிச்சயமாக இல்லை. இதனை புரிந்துகொள்வதற்கு, கடந்த ஒரு சிலமாதங்களாக என்ன நடந்தது என்பதை மிகவும் சுருக்கமாக பார்ப்போம். கஜேந்திரகுமார் பேரவையில் இணையும் போதே ஒரு திட்டத்துடனேயே இணைந்திருந்தார். அதாவது, விக்கினேஸ்வரனை எப்படியாயினும் காங்கிரஸில் இணைக்க வேண்டும். இதன் மூலம் காங்கிரஸை தமிழரசுக் கட்சிக்கு மாற்றான ஒரு கட்சியாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதுதான் அவரது உண்மையான இலக்கு. ஆனால் விக்கினேஸ்வரனோ கஜனின் திட்டத்துக்குள் அகப்படாமல் தனக்கென்று ஒரு கட்சியை அறிவித்தார். இந்தப் பின்புலத்தில்தான் விக்கினேஸ்வரன் தொடர்பிலான முதலாவது வெறுப்பு கஜேந்திரகுமார் தரப்புக்குள் ஏற்பட்டது. விக்கினேஸ்வரன் கட்சியை அறிவித்ததிலிருந்து அவர் தொடர்பில் ஆங்காங்கே சில விமர்சனங்களை மெதுவாக காங்கிஸசின் செயலாளர் செ.கஜேந்திரன் முன்வைத்துவந்தார்.

ஆனால் விக்கினேஸ்வரன் கட்சியை அறிவித்த பின்னரும் கூட, அவரை எவ்வாறாவது காங்கிரஸ் கூடாரத்திற்குள் கொண்டுவர வேண்டுமென்று முயற்சித்தனர். அதற்கான ஒரு சில பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டனர். ஆனால் அதற்கும் விக்கினேஸ்வரன் இணங்கவில்லை. இவ்வாறனதொரு பின்புலத்தில்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் இல்லாத, ஒரு கூட்டுக்குள் தாங்கள் வரத் தயார் என்று அறிவித்தனர். ஆனால் அந்த நிபந்தனையும் விக்கினேஸ்வரன் நிராகரித்துவிட்டார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பேரவையின் கூட்டங்களை கஜேந்திரகுமார் புறக்கணித்திருந்தார். ஆனாலும் தனது ஒரு சில ஆதரவாளர்களை பேரவைக்குள் வைத்துக் கொண்டார். அவர்கள் அவ்வப்போது, விக்கினேஸ்வரன் இணைத்தலைவர் பதவியில் இருப்பது பொருத்தமில்லை ஏனெனில் அவர் தற்போது ஒரு கட்சியின் தலைவர் – என்றவாறு குரலெழுப்பி வந்தனர். இவ்வாறானதொரு சூழலில்தான் பேரவையின் தலைமையில் மீண்டுமொரு எழுக தமிழ் நிகழ்வை முன்னெடுப்பதற்கான யோசனையை விக்கினேஸ்வரன் முன்வைத்திருந்தார். இந்த எழுக தமிழ் முயற்சியை எவ்வாறாயினும் பலவீனப்படுத்த வேண்டுமென்பததான் கஜேந்திரகுமாரின் இலக்காக இருக்கிறது.

சரியான அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்து மக்களை அணிதிரட்டும், ஓன்றுபடுத்தும் முயற்சிகளை எவர் முன்னெடுத்ததாலும் அது ஆதிரிக்கப்பட வேண்டிய ஒன்று எண்ணும் வரலாற்று புரிதலின் அடிப்படையில்தான் ஒவ்வொரு விடயங்களையும் நாம் நோக்க வேண்டும். அந்த அடிப்படையில் எழுக தமிழ் நிகழ்வுகளை யார் முன்னெடுக்கின்றனர் – அதனால் எந்த கட்சிகள் பயனடையும் என்பதெல்லாம் அபத்தமான கேள்விகள். கஜேந்திரகுமார் ஆரம்பத்திலிருந்தே பேரவையை தனது கட்சி நலன்களுக்கே பயன்படுத்தி வந்தார். அப்போதெல்லாம் விக்கினேஸ்வரனோ பேரவையின் ஏனைய கட்சிகளோ அது தொடர்ப்பில் விமர்சிக்கவில்லை – கேள்வி தொடுக்கவில்லை. அவர்கள் தமிழ்த் தேசியத்தை முன்வைத்து அமைதிகாத்தனர். உதாரணமாக கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, கஜேந்திரகுமார் தனது கட்சியை ‘தமிழ்த் தேசிய பேரவை’ என்று பெயர் மாற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை முன்னெடுத்தார். பேரவை, விக்கினேஸ்வரன் அனைவருமே தனது கட்சியுடன்தான் இருக்கின்றனர் என்னும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். அதனடிப்படையில்தான் அவரது வாக்கு வங்கியும் அதிகரித்தது. ஆனால் பேரவையோ, விக்கினேஸ்வரனோ அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை இருந்தும் தேசியத்தை முன்னிறுத்திய பயணத்தில் ஒரு கட்சி நன்மையடைவது தொடர்பில் அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அன்று, தனது சுயநலனுக்காக பேரவையை பயன்படுத்தி கஜேந்திரகுமார்தான் இன்று எழுக தமிழ் நிகழ்வை, விக்கினேஸ்வரன் தனது கட்சிக்காக பயன்படுத்துவதாக சாடுகின்றார். இது முற்றிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்னும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்னும் சுயநல நோக்கிலிருந்து எழும் விமர்சனமாகும். அவ்வாறானதொரு விமர்சனத்தை முன்வைக்கும் தார்மீக தகுதி கஜேந்திரகுமார் தரப்பினருக்கு இல்லை. தான் பங்குகொள்ளாத எழுக தமிழ் வெற்றியளிக்காது என்பதை நிரூபிப்பதற்கே கஜேந்திரகுமார் முயற்சிக்கின்றார். இது ஒரு நேர்மையான அரசியல் அணுகுமுறையல்ல.

இங்கு எந்தவொரு தனிநபரும் அமைப்புக்களும் முக்கியமில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் முன்னெடுக்கப்படும் வரலாற்று நிகழ்வு என்னும் அடிப்படையில்தான் ஒவ்வொன்றையும் நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் எழுக தமிழ் நிகழ்விற்கு ஒரு தேசிய முக்கித்துவம் உண்டு. அந்த முக்கியத்துவத்திற்காக அதனை ஆதரிக்க வேண்டியது தமிழ் தேசியத்தை விசுவாசிக்கும் ஒவ்வொரு தமிழரதும் கடமையாகும். பேரவையின் எழுக தமிழில் மக்கள் திரளாக திரள வேண்டியது காலத்தின் தேவையாகும். தென்னிலங்கை தங்களுக்கான தலைவரை தேடும் கடும் முயற்சியில் இருக்கின்ற போது, வடக்கும் கிழக்கும் ஓரணியில் திரட்சி கொள்ள வேண்டியதும், நாம் எதையும் மறக்கவில்லை என்பதை உரத்துச் சொல்ல வேண்டியதும் ஒரு வரலாற்றுத்  தேவையாகும். அந்த வரலாற்றுத் தேவையை உணர்த்தும் ஒவ்வொரு நிகழ்வுகளும் போற்றப்பட வேண்டியவையே. இதில் கட்சிகளையும் நபர்களையும் மறப்போம். நாம் வரலாற்றின் கடமையை செய்வோம் அதன் பலன்களை வரலாற்றிடமே விட்டுவிடுவோம்.

-கரிகாலன்