போராட்டத்தை பயங்கரவாதமாக சித்திரிக்க முனைகின்றதா ஈழநாடு?

eeeee
eeeee

இக்கட்டுரைக்கு நுழையும் முன்னர் வாசிப்போரின் இலகுவுக்காக 26.05.2021 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில்  “அமெரிக்க பொய்களுக்கு பின்னால்” என்ற தலைப்பில் வெளியான ஆசிரியர் தலையங்கம் இது…

“அமெரிக்கா, தமிழ் மக்களின் உரிமையை அங்கிகரித்து தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதான செய்தியொன்றை, சில இணையத் தளங்களில் காணமுடிகின்றது. தமிழ் நாட்டை சேர்ந்த அரசியல்வாதியான பழ. நெடுமாறன், அமெரிக்க தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்திருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. அதில் நெடுமாறன்,அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு விடுதலை இயக்கமாக ஏற்றுக்கொண்டிருப்பதாக வேறு தெரிவித்திருக்கின்றார். இதேநெடுமாறன்தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், தன்னுடன் தொடர்புகொண்டதாகவும், விரைவில் அவர் வெளியில் வருவாரென்றும் கூறி, மக்களை ஏமாற்றியவர். இதற்கிடையில் காசி ஆனந்தன், அமெரிக்கா விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டுவிட்டது, எனவே, இதனை கருத்தில்கொண்டு இந்தியாவும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

அமெரிக்க தீர்மானம் என்பது முற்றிலும் தவறான கருத்து. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் இணைந்து, காங்கிரஸில் ஒரு பிரேரணையை முன்வைத்திருக்கின்றனர். இவ்வாறான பிரேரணைகள் இதற்கு முன்னரும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டும் இவ்வாறானதொரு பிரேரணையை, வேறு சில காங்கிரஸ் பிரதிநிதிகள் இணைந்து முன்வைத்திருந்தனர். இலங்கை தொடர்பாக மட்டுமல்ல, ஏனைய நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பிலும் இவ்வாறான பிரேரணைகள் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட் டிருக்கின்றன. 2019 பிரேரணையில் எவ்வாறான விடயங்கள் முன்வைப்பட்டிருந்தனவோ, அவ்வாறான விடயங்களே தற்போதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, யுத்தம் முடிவுற்று 12 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்கூட, இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையில், இலங்கையின் பொறுப்புகூறல் தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் விடையங்களை அரசாங்கம் நிறைவேற்றும் வகையில், சர்வதேச சமூகம் தொடர்ந்தும் இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் வகையில், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடனும், ஐ. நா. பொதுச் சபையுடனும், ஐ. நா. பாதுகாப்பு பேரவையுடனும், அமெரிக்கா, இணைந்து செயற்படவேண்டுமென்றும் குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்த பிரேரணையில், ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் சுதந்திர அமைப்புக்களுக்கும் இடையில் இடம்பெற்ற ஆயுதமோதல் என்று சுட்டிக்காட்டுமிடத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளடங்கலாக – என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனையே அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாக நெடுமாறன் கண்டுபிடித்திருக்கின்றார். இந்த வாதம் சரியென்றால், ஒட்டுக்குழுக்கள், மண்டையன் குழு என்று, இப்போதும்கூட சிலரால் விமர்சிக்கப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய ஆயுத இயக்கங்களையுமல்லவா அமெரிக்கா, விடுதலை அமைப்புக்களாக அங்கிகரித்திருக்கின்றது!

உண்மையில், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ கொள்கை நிலைப்பாட்டுக்கும் மேற்படி காங்கிரஸ் பிரதிநிதிகளின் தீர்மானத்திற்குமிடையில், எவ்வித தொடர்புமில்லை. இது, சாதாரணமான ஒன்று. காங்கிரஸில் முன்வைக்கப்படும் இவ்வாறான பிரேரணைகள், அமெரிக்க வெளிவிவகார குழுவின் பார்வைக்கு பரிந்துரைக்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறு பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றது. அமெரிக்கா 1997ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம், ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடுவதுண்டு. யுத்தம் நிறைவுற்று 12 வருடங்கள் சென்ற பின்னரும்கூட, இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகவே அமெரிக்கா பட்டியல்படுத்தி வருகின்றது.”

இவ்வாறு தனது ஆசிரிய தலையங்கத்தில் ஈழநாடு கூறியிருக்கின்றது. இவ்வாசிரிய தலையங்கம் மூலம் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்னும் பதிவை அமெரிக்காவின் கருத்தாகக் காட்டியவாறு வாசகர்களுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி இறுதியில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென சித்திரிக்க முயல்கின்றது. இன்றைய ஈழநாடு பத்திரிகை இந்த ஆசிரிய தலையங்கத்தில் மட்டுமல்ல அடிக்கடி இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் அதிலும் வட மாகாண மக்களின் வாழ்வியலோடு ஒரு காலத்தில் பின்னிப்பிணைந்திருந்தது ஈழநாடு நாளிதழ். மூன்று தசாப்த காலத்துக்கும் மேல், ஒரு தலைமுறை காலம் தொடர்ச்சியாக வெளிவந்திருந்த ஈழநாடு பத்திரிகைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்ததும், அது வளர்ந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த வரலாறும் நன்றாகவே தெரிந்தது. ஈழத்தில் தமிழ்த் தேசிய சிந்தனையை உருவாக்கியதில் அதனை வளர்த்தெடுத்ததில் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பும் மிகக்காத்திரமானது என்பதை அனைவரும் நன்கறிவர்.

அன்றைய ஈழநாடு நாளிதழின் தொடர்ச்சியாக தன்னை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு முதல் ஈழநாடு பத்திரிகை மீண்டும் வெளிவருகின்றது. அன்றைய ஈழநாடு பண்ணையில் வளர்ந்தவர் என்று அறியப்படுபவரே இன்றைய ஈழநாடு நாளிதழையும் வெளியிடுகிறார். ஆனால், இன்றைய பத்திரிகை தமிழ் மக்களுக்கு என்ன கூறவருகின்றது?, தமிழ் மக்களை எதை நோக்கி அழைத்துச் செல்ல முனைகின்றது என்பது இப்போது சிந்தனைக்கு உரியதாக மாறியுள்ளது.

26.05.2021 புதன்கிழமை வெளியான அதன் ஆசிரியர் தலையங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக உருவகப்படுத்துகின்றதன் மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் நோக்கிலாக ஈழநாடு அதன் ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையைக் கொண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாதத் தடையை நீக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் இந்திய அரசாங்கத்தை கோரியிருந்தனர். இந்தக் கோரிக்கையை தவறென அர்த்தம் தொனிக்க ஈழநாடு தனது ஆசிரிய  தலையங்கத்தை தீட்டியுள்ளது.  

அமெரிக்க காங்கிரஸின் அறிக்கைக்கும் அமெரிக்கா வருடாந்தம் அறிவிக்கும் பயங்கரவாத அமைப்புகளின் தடைப்பட்டியலுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென ஈழநாடு கூறவருகின்றதா என்றால், அதனையும் அது கூறவில்லை. மாறாக அதன் ஆசிரியர் தலையங்கத்தில் இந்தியாவில் தடை தொடரவேண்டும் என்று தொனிக்கும்படியாகவிட்டு அமெரிக்காவின் காங்கிரஸ் விவகாரத்துக்குள் நுழைந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியம் என்று அரிதாரம் பூசிக் கொண்டு இன்று நடைபயிலும் ஈழநாடு பத்திரிகை இன்று தனது அரசாங்க விசுவாசத்தை ஏரிக்கரை பத்திரிகைகளையும் விட அதிகமாகவே வெளிப்படுத்துகின்றது. பதின்மூன்றாவது திருத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்காதது தவறு என்று வலியுறுத்தி வரும் ஈழநாடு. இன்று அதன் அடுத்த பரிணாமமாக தமிழ் மக்களின் போராட்டத்தை தவறு என்று வெளிப்படுத்துகின்றது. ஆசிரிய தலையங்கத்தை தீட்டிய ஆசிரியர் ஒன்றை மறந்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியல் அமைப்பாக அறிவிக்கப்படுவதற்கு அந்நாட்டில் நிதி மற்றும் இதர செயற்பாடுகளை தடுப்பதற்கான நோக்கமேயன்றி வேறில்லை.

ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் பதவி என்பது மிகவும் கனமானது, அதற்கான மதிப்பும் அதிகமானது. மிகுந்த பொறுப்புடைய பதவியில் இருக்கின்றோம் என்பதையும் – ஈழத் தமிழ் மக்களை அறிவு வழி நடத்திச் செல்கின்ற பெரும் பொறுப்பில் அமர்ந்து பணி செய்ய வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அக்காலத்தில் அரச படைகளின் இன்னல்களுக்கு மத்தியில் அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை “வன்செவியோ நின்செவிதான்” என மிகத் தைரியமாக சுட்டிக்காட்டியவர் அன்றைய ஆசிரியர் ந. சபாரத்தினம்.

ந. சபாரத்தினம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூியின் அதிபராக இருந்து சேவையாற்றி ஓய்வுபெற்ற அவர், 1984.04.17 அன்று ஆசிரிய தலையங்கத்தை தீட்டியிருந்தார். “அமைதி ஏற்பட இராணுவத்தை அகற்றுக” என அமைந்த அந்த ஆசிரிய தலையங்கத்தில் “பயங்கரவாதிகள் யார்? அவர்களை வென்று அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பது எவ்விதமென்பதை கடந்த பத்து வருடங்களில் புரிய முடியாத தமிழ் மக்கள் எங்கும் உண்டா? நிச்சயம் யாழ்ப்பாணத்தில் எவருமிலர். அமைதியை நிலைநாட்ட அரசு விரும்பினால் உடனடியாக இராணுவத்தை அங்கிருந்து அகற்றட்டும்” என மிகத் துணிச்சலுடன் கூறியிருந்தார்.

இதே ஈழநாட்டின் ஆசிரியராகவும் இருந்த
எஸ்.எம்.கோபாலரத்தினம் (கோபு) இந்திய அமைதிப் படையின் காலத்தில் சிறையிருந்தும், போராட்ட காலத்தில் அவரின் மதிப்பான பத்திரிகை செயற்பாடுகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய பத்திரிகை ஆசிரியர்கள் அலங்கரித்த கதிரையில் உட்கார்ந்து “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில்” என்றவாறாக தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தமிழ் மக்களின் போராட்டத்தையும் – தமிழ் மக்களுக்காக போராடியவர்களையும் தவறானவர்களாக – பயங்கரவாதிகளாக சித்திரிக்கின்றார் ஈழநாடு ஆசிரியர். அவர் தான் அமர்ந்துள்ள ஈழநாடு ஆசிரியர் என்ற பெரும்பொறுப்பை இனியாவது உணர்ந்து செயற்பட வேண்டும். 

– தமிழ்க்குரலுக்காக குமரன்