ஆடைத் தொழிற்சாலைகளை முடக்குவதே கொத்தணியை தடுக்க வழி!

sama aadai
sama aadai

எதிரி வரும்போது தலைவாசலை அகலத் திறந்து வைத்துக் கொண்டு யன்னலை மூடி வைத்ததுபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கொரோனா தொற்று தடுப்பு விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு உள்ளது.

இலங்கையை கொரோனா தொற்று மூன்று அலைகளாக தாக்கியது. முதல் இரண்டு அலைகளிலும் மேல் மாகாணத்திலேயே தொற்றுப் பரவல் உச்சமடைந்திருந்தது. வடக்கு மாகாணத்தில் தொற்றுப் பரவல் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தது. அதிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே கொரோனா தொற்று ஆரம்பம் தொட்டு பரவியது. ஆனால், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர்.

நாட்டில் இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மூலமே கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் பரவ ஆரம்பித்தது. இந்தக் கொத்தணியின் தொடர்ச்சியாக  தமிழ் – சிங்கள புதுவருட பிறப்பு கொண்டாட்டத்தை தொடர்ந்து தொற்றுப் பரவல் அதிகரித்தது. இரண்டாவது அலையின் தாக்கம் – வீரியம் குறையும் முன்னரே மூன்றாவது அலை தாக்கத்தை நாடு இப்போது அனுபவிக்கிறது என்பதே உண்மை நிலை.

முதல் இரு அலைகளின் தாக்கத்தின்போதும் சில பத்து தொற்றாளர்களே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டனர். ஆனால், மூன்றாவது அலை தாக்கத்தில் – வடக்கில் அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டங்களில் பல நூறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். புதுவருடப் பிறப்பு கொண்டாட்டம் களை கட்டாத நிலையில் தொற்றுப் பரவலுக்கு இங்கு இயங்கும் ஆடைத் தொழிற்சாலைகளே வழிவகுத்தன.

நாடு முழுவதும் பயணத் தடை நடைமுறையில் இருந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் ஆடைத் தொழிற்சாலைகள் முடக்கப்படவில்லை. அவை முடக்கப்படவில்லை என்பதை விட சுமார் இரண்டாயிரம் பேருக்கு மேல் பணியாற்றும் இந்தத் தொழிற்சாலைகளில் சுகாதார விதிகள் பின்பற்றப்படுகின்றனவா –  தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றனவா என்பதைக்கூட அந்த மாவட்டங்களின் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலணி குழுவால் குறைந்தபட்ச கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவில்லை என்பதே உண்மை நிலை. இதே நிலைமையே, முல்லைத்தீவிலும்.

ஆனாலும், புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த ஆடைத் தொழிற்சாலை முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆனாலும், முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையை மீளவும் திறப்பதற்கு பகீரத பிரயத்தனங்கள் நடக்கின்றன. இதற்கு அப்பகுதி மக்கள், அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதிலும், இந்த வாரத்தில் அந்த ஆடைத் தொழிற்சாலை திறக்கப்படலாம். ஆனால், இது மேலுமொரு கொத்தணிக்கு வழிவகுக்கலாம் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது – இதுவே யதார்த்த நிலையும்கூட.

இதுதவிர, கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் மே மாத முற்பகுதியில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். ஆனால், அந்தத் தொற்றாளரை மட்டும் தனிமைப்படுத்தி அவருடன் தொடர்புடைய ஏனைய தொழிலாளர்களை பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள அனுமதி மறுத்துவிட்டது. இதனால், தொற்றுக்கு இலக்கானவர்கள்கூட தொற்றுடனே பணியில் ஈடுபட்டனர். இந்நிலை ஒரு தொழிற்சாலையில் மட்டுமல்ல, கிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடை தொழிற்சாலைகளிலும் – முல்லைத்தீவில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் இதே நிலைமை தொடர்ந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நிலைமை சற்று மோசமடைய ஆரம்பித்த பின்னர்தான் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவு ஆடைத் தொழிற்சாலைகள் மீது சற்று இறுக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை அங்கேயே தங்கியிருந்து பணியில் ஈடுபட வற்புறுத்தின. மறுப்பவர்களுக்கு தொழில் வாய்ப்பையும் அந்த நிறுவனம் மறுத்தது. ஏற்கனவே யுத்ததால் அனைத்தையும் இழந்து – வறுமையில் சிக்கிய இந்தப் பணியாளர்களுக்கு வருமானத்துக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை.

ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் 226 தொற்றாளர்களும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் 263 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டனர். இந்த இரு மாவட்டங்களிலும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியவர்களாவர். அதுமட்டுமின்றி ஏனைய தொற்றாளர்களிலும் பெரும்பங்கினர் இவர்களின் குடும்ப – நெருங்கிய உறவினர்களாவர்.

மூன்றாவது அலை பரவலின்போது கிளிநொச்சியில 671 பேரும், முல்லைத்தீவில் 644 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒரு சில டசின்கணக்கானவர்களை தவிர ஏனையோர் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டமைக்கு வழி சமைத்தது இந்தப் பகுதிகளில் இயங்கும் ஆடைத் தொழிற்சாலைகளே. நிலைமை இவ்வாறிருக்க, தொற்றாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை முடக்கிவிட்டு தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளின் ஊழியர்கள் மூலம் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

போர் காலத்தில் அழிந்துபோன பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு வழிதெரியாமல் வெளிநாட்டு கடன்களை வாங்கிக் குவித்தன மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள். போர் காலத்தில் அளவுக்குமீறி பெருப்பிக்கப்பட்ட இராணுவத்திற்கான செலவீனம் உச்சம் பெற்ற நிலையில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரால் வரவு – செலவு திட்டத்தில் தொடர்ச்சியாக பாதுகாப்புத் துறைக்கே செலவிடப்படுகின்றது. இதிலும் பெரும்பங்கு மீண்டுவரும் செலவினமாகவே உள்ளது. பெருகிப்போன இராணுவத்தை குறைக்கவும் அதைப் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் மார்க்கமும் தெரியாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத நிலையில் அரசாங்கங்கள் திணறிய நிலையில், மீண்டும் தேசிய பாதுகாப்பு கோஷத்தை முன்வைத்து – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை சாதகமாக்கி பேரினவாத சிந்தனையில் ஊறித் திளைத்த ராஜபக்ச குடும்பம் ஆட்சியை பிடித்தது.

அவர்களின் சீன ஆதரவு போக்கு – தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கை – புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வாயிலாகவும் தற்போதைய பூகோள அரசியல்போக்கு நிலையாலும், ராஜபக்ச அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை உலகநாடுகள் எடுத்தன. நலிந்த பொருளாதாரம் – அதீத கடன் சுமைக்கு மத்தியில் ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்ற ராஜபக்ச அரசு பொறுப்பேற்ற நிலையிலேயே கொரோனா பேரிடர் நெருங்கியது. இதனால், பொருளாதார நிலையில் இலங்கை அதலபாதாளத்திற்குள் வீழும் நிலை எழுந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த தேயிலைக்கு சர்வதேச சந்தையில் மதிப்பு குறைந்தமையால், தைத்த ஆடைகள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலேயே அரசாங்கம் அதீத அக்கறையாக உள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து அதீத இலாபம் பெறும் நோக்கில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது நகர்ந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகள், தமிழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் உழைப்பை அதீதமாகவே சுரண்டுகின்றன.

8 மணி நேர வேலை – வேலைக்கு தகுந்த ஊதியம் – என்பன இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. அத்துடன், ஊழியர்கள் அனைவரும் கட்டாய மேலதிக நேர வேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதற்கான ஊதியமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் ஆடைத் தொழிற்சாலைகள் மிக மோசமான தரத்தை கொண்டுள்ளன என்பதை இந்தப் பேரிடர் காலம் உணர்த்தியுள்ளது. தொற்றுக்கு இலக்கானவர்களும் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதன் விளைவே ஏனைய ஊழியர்களுக்கும் தொற்று பரவியது.

எனவே, ஆடைத் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டு அனைத்து தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் காலத்தில் அந்த ஊழியர்களுக்கான கொடுப்பனவு (அரச நியமப்படி) நிறுவனங்கள் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபட்ட பின்னர் – ஆடைத் தொழிற்சாலைகளால் சமூகத்தில் தொற்றுப் பாதிப்பு ஏற்படாது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறையான விதிகளுக்கும் – கண்காணிப்புக்கும் உட்பட்டு ஆடைத் தொழிற்சாலைகள் இயக்கப்பட அனுமதி வழங்கலாம்.

தவிர, ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட கொத்தணிகளால் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் முடக்கப்பட்ட கிராமங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உழைப்பை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு பொருத்தமான நட்டஈடு அல்லது நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியம். இது விடயத்திலும் தீர்வு எட்டப்பட்ட பின்னரே ஆடைத் தொழிற்சாலைகளை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். 

தமிழ்க்குரலுக்காக -குமரன்