ஈழத் தமிழர்களுக்கு யூலை மட்டுமல்ல யூனும் கறுப்பு மாதமே!

samam
samam

ஈழத் தமிழர்களுக்கு எதிராக முதன் முதலில் வன்முறைகள் சிங்களப் பேரினவாதத்தால் பற்ற வைக்கப்பட்ட மாதம் யூன் மாதமே. வரலாற்றில் தமிழர்கள் யூலை மாதத்தை கறுப்பு மாதமாக கடைப்பிடிக்கிறார்கள். ஏனெனில், 1983 யூலை 23ஆம் நாள் தொடங்கிய ஆடி கலவரத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெட்டியும் – கொத்தியும் – எரித்தும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் வயது வேறுபாடின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இலட்சக்கணக்கானோர் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் தென்னிலங்கை பகுதியில் இருந்து தமது தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு இடம்பெயர்ந்தார்கள் – வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டார்கள்.

இதே போன்று தமிழர்களின் வரலாற்றில் யூன் மாதமும் கறுப்புத்தான். தமிழர்களுக்கு எதிராக முதன் முதலாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது 1956 யூன் 10ஆம் நாள்தான்.

1956 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய பிரதமர் எஸ்.டபிள்யூ. பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் என்ற அவரின் கோஷத்தை சட்டமாக்கினர். இதற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் கொழும்பில் திரண்டு போராட்டங்களை முன்னெடுத்தனர். இதை அடக்குவதற்காக அரசாங்கம் சிங்களக் காடையர்களை களமிறக்கியது.

இதனிடையே தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மையினராக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தை சிங்கள மாவட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கிய அரசு, கல்லோயா குடியேற்றத் திட்டத்தைத் தொடங்கியிருந்தது. தமிழர்களின் விகிதாசாரத்தை ஒரே தடவையில் குறைத்துவிடும் அளவுக்கு குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமிழர்களை வெளியேற்றுவதற்காக வன்முறைகளை தூண்டினர். இதனால், சிறு சிறு மோதல்களாக தொடங்கிய இவ் வன்முறை பெரும் கலவரமாக வெடித்து நாடு முழுவதும் பரவியது. இக்கலவரத்தில் சுமார் 150 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலநூறு பேர் காயமடைந்தனர்.

ஆனால், இவ் வன்முறைகளின் போதான உயிரிழப்புக்கள் சரியாக பதியடப்படவில்லை. உண்மையில், உயிரிழப்புக்கள் கூறப்பட்ட எண்ணிக்கையிலும் பல மடங்கு இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தமிழர்களின் சொத்துக்களை சிங்களக் காடையர்கள் சூறையாடிச் சென்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டியகாவற்துறையினரும் இராணுவத்தினரும் தடுக்காமல் வன்முறைகளை தொடரும் காடையர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தனர். 5 நாட்களுக்கு இக்கலவரம் நீடித்திருந்தது.

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட முதல் வன்முறை இதுதான், பின்னாள்களில் இது விரிந்துகொண்டே சென்றது. இரு ஆண்டுகளில் – 1958இல் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தந்தை செல்வா – பண்டா ஒப்பந்தத்துக்கு எதிராகவே வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இக்கலவரத்தின் பின்னால், ஐக்கிய தேசிய கட்சியும் – அதன் அப்போதைய தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுமே இருந்தனர் என அப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மே 22 ஆம் திகதி தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான கலவரம் 5 நாட்கள் தொடர்ந்தது. நாடு முழுவதும் வன்முறைகள் பரவிய நிலையில் அவசரகால சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் மரணங்கள் தொடர்ந்தன. உண்மையில் இக்கலவரம் யூன் மாத முற்பகுதியிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

இக்கலவரத்தின்போது, பொலநறுவை, அநுராதபுரம் பகுதிகளில் வசித்து வந்த தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களால் அடித்து விரட்டப்பட்டனர். இக்கலவரத்தில், 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சிங்கள மக்கள்கூட இக்கலவரத்தின்போது, கொல்லப்பட்டனர், காயப்படுத்தப்பட்டனர்.

கலவரத்தைத் தொடர்ந்து, தமிழினத்தின் வரலாற்றை அழிக்கும் செயல்பாடுகளில் சிங்கள பேரினவாத அரசு இறங்கியது. இதன் முக்கிய இலக்காக யாழ்ப்பாணம் பொதுநூலகம் இலக்கு வைக்கப்பட்டது.

1981 மே 31 இல் ஆரம்பித்து யூன் 4ஆம் திகதி வரை நீடித்த கலவரத்துக்கு காமினி திஸநாயக்க, சிறில் மத்தியூ என்ற இரு அமைச்சர்கள் தலைமை தாங்கினர். யாழ்ப்பாணம் வந்த சிங்களக் காடையர்கள், யாழ். பொது நூலகத்தை எரியூட்டினார்கள். யாழ். நகரின் வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், அங்கிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றார்கள். தமிழர்களின் அறிவுப் பொக்கிஷம் தீக்கிரையாக்கப்பட்டு கருகிப் போன மாதம் கறுப்பு யூன்தான்.

பின்னாள்களில், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு தமிழரின் அறிவுப் பொக்கிஷம் எரியூட்டப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது. இவ்வன்முறைகளின் போது 4 தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்களக் காடையர்களுடன் காவற்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இதன் பின்னர், 1986 யூன் 10 மண்டைதீவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கைப் படைகள்தான் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை நடத்தினர் என்றால், அமைதிப்
படை என்ற பெயரில் வந்த இந்தியப் படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராகப் படுகொலைகளை கட்ட
விழ்த்து விட்டனர். 1989 யூன் 5ஆம் நாள் புத்தூர் வாதரவத்தைக்குள் இறங்கிய இந்தியப் படையினர், கண்ணில்பட்டவர்களை பிடித்துச் சென்று எரித்து கொன்றனர். இவ்வாறு 9 பேர் இந்தியக் காட்டுமிராண்டி படைகளின் சாவு வெறிக்கு எரிந்து பலியாகினர்.

1990 யூன் 20 ஆம் நாள் இலங்கை இராணுவத்தினர், காவற்துறையினர், முஸ்லிம் ஊர்காவல் படையினர் இணைந்து அம்பாறை – கல்முனை பகுதியை சுற்றி வளைத்தார்கள். ஒரு பகுதியினர் சுற்றி வளைக்கப்பட்ட பிரதேசத்துக்குள் நுழைந்து தமிழ் மக்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனினும் இந்நடவடிக்கைகள் ஒருநாளிலேயே முடிந்துவிடவில்லை.


தொடர்ந்தும் அப்பகுதியிலேயே தங்கியிருந்த இராணுவம், காவற்துறை, முஸ்லிம் ஊர்காவல் படைகள் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடினார்கள்.

யூன் 27 ஆம் நாள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை பிடித்துச் சென்று அவர்களை கட்டி உயிருடன் எரியூட்டினார்கள். இவ்வாறு மரணமானவர்களின் எண்ணிக்கை 75 என்று அவர்களின் உடல்களை எண்ணிக் கணக்கெடுக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து மறுநாள் 27 தலையற்ற உடல்கள் வேறு இடத்தில் மீட்கப்பட்டன. இதன்போது வேறுசிலரும் காணாமல் போயிருந்தனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டு வேறு இடங்களில் உடல்களைப் போட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

1991 யூன் 12 ஆம் நாள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்குள் இராணுவம் புகுந்து படுகொலைகளை அரங்கேற்றியது. முன்னர், 1987இலும் கொக்கட்டிச்சோலையில் படுகொலைகளை இராணுவம் நடத்தியிருந்தது. 1991இல் நடத்தப்பட்ட படுகொலைகளின் போது 65 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்து இலங்கை அரசு விசாரித்தது. விசாரணையின் போது 19 இராணுவத்தினர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு எதிராக சிறு தண்டனைகூட வழங்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1998 யூன் 10 முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் விமானப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 25 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதேநாளில் 2006 ஆம் ஆண்டு  மன்னார் வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகொலை செய்யப்பட்டனர். சிறுமியும் தாயாரும் வன்புணர்வின் பின்னர் படுமோசமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இராணுவத்தினரே இந்தச் செயலைச் செய்தனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2006 யூன் 17 ஆம் நாள் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மன்னார் பேசாலையில் போர் வெடித்தது. தாக்குதலின் பின்னர் புலிகள் தப்பிச் சென்றிருந்தனர். இதில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கும் விதத்தில் அப்பகுதியில் இருந்த 6 பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது.

2007 யூன் 07 கொழும்பில் தங்கியிருந்த வடக்கு – கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இவை அனைத்தும் யூன் மாதத்திலேயே இடம்பெற்றிருந்தன.

– தமிழ்க்குரலுக்காக குமரன்