கையேந்தும் நிலையில் நடுத்தட்டு வர்க்க மக்கள்!

Samakaalam 01
Samakaalam 01

கொரோனா பேரிடர் ஏற்படுத்திய கடும் தாக்கத்தை – பெரும் பாதிப்பை நாடு மீண்டும் திறக்கப்பட்ட கடந்த இரு தினங்களிலும் நேரடியாகவே அவதானிக்க முடிந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட இந்த இரு நாட்களிலும் வறிய – நடுத்தர வர்க்க மக்களில் பெரும்பகுதியினர் தாங்கள் உழைத்து சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய தங்க நகைகளை அடகு வைப்பதற்காக நகைக்கடைகளிலும், நிதிநிறுவனங்களிலும், வங்கிகளிலும் நீள வரிசைகளில் காத்திருந்தனர். இன்னொரு பகுதியினர் தங்களின் சேமிப்பு பணத்தைப் பெறுவதற்காக வங்கிகளின், ஏ.ரி.எம். இயந்திரங்களின் வாசல்களில் நீண்டநேரம் காவலிருந்தனர்.

கொரோனா பேரிடர் நம் நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் வேலை இழப்பு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இந்தப் பேரிடரால் பெருந்தொகை வறிய மக்கள் பட்டினியால் வாடுவது மட்டுமின்றி உலகில் பெரும்பங்கினராகவுள்ள நடுத்தர வர்க்க மக்கள் பலரும் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த அபாய நிலை இலங்கையிலும் தொடரும் சூழலில்தான் ஒரே இரவில் எரிபொருட்களுக்கான விலையை உயர்த்தியது அரசாங்கம். இதன்மூலம், ஒட்டுமொத்த மக்களின் வயிற்றிலும் அடித்துள்ளது.

7c9826c3 fi 436x300 1

பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபா, மண்ணெண்ணெய், டீசல் லீற்றருக்கு 7 ரூபாய் என்று விலையேறற்றப்பட்டன. பொதுவாக எரிபொருட்களின் விலையுயர்வை நாம் சாதாரணமாகக் கடந்து விட முடியாது. ஏனெனில், எரிபொருட்களின் விலையே அனைத்துப் பொருட்களின் விலையையும் தீர்மானிக்கின்றது. அதாவது, கொழும்பில் விற்கப்படும் இறக்குமதியாகும் பொருட்களின் விற்பனை விலை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றாக இருக்காது. உதாரணமாக கொழும்பில் 1,500 ரூபாவுக்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கிளிநொச்சியில் 1650 ரூபாவாக உள்ளது. 150 ரூபா அதிகரிப்புக்கு காரணம், கொழும்பிலிருந்து அதனைக் கொண்டு வருவதற்கான செலவையும் ஈடுசெய்தே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, அதனை கொண்டுவருவதற்காக வாகனத்திற்கான எரிபொருள், தேய்மானம், சாரதி ஊதியம் என்பவற்றை கருத்தில் கொண்டே இந்த விலை தீர்மானமானது. இந்த விலை வித்தியாசம் ஏனைய பொருட்களுக்கும் பொருந்தும்.

ஆனால், கொரோனா பேரிடரால், உயர ஆரம்பித்த விலைவாசி உயர்வே மக்களை அரைப்பட்டினியாக வதைக்கையில் இந்த விலையேற்றம் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக மக்களை மேலும் துன்பத்துக்குள் தள்ளியுள்ளது அரசாங்கம். ஆனால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையுர்வை காரணம் காட்டியும், இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை கொரோனா பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யப்போவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

1212

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவஆரம்பித்தபோது சர்வதேச நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. அப்போது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடும்வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை அப்போது 30 டொலராக இருந்தது. பின்னாட்களில் அதற்கும் கீழே சென்றது. அப்போது மசகு எண்ணெயை வாங்கிக் குவித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. அச்சமயத்தில் எரிபொருள் விலை குறைந்தபோது அதை அனுபவிக்கும் பாக்கியத்தை அரசாங்கம் நாட்டின் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால், தற்போது எண்ணெயின் விலை அதிகரித்ததும் அந்த சுமையை மக்களின் தலையில் சுமத்த ஆரம்பித்துள்ளது என்பதே உண்மை நிலை.

இந்தநிலையில்தான் அரசாங்கத்தின் விலையேற்றத்தை பயணத்தடை விலக்கப்பட்ட இந்த இரு நாட்களிலும் மக்கள் சுமந்தனர். ஆனால், இன்று நடைமுறையாகும் ஒருநாள் பயணத்தடையின் பின்னர் பயணத் தடை நீக்கப்படுமா அல்லது நீடிக்குமா என்ற அச்சத்திலும்கூட மக்கள் ஓரளவுக்கு உணவுப் பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி ஏனைய பொருட்களை விலையேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங்கம் கூறினாலும்கூட, ஏற்கனவே, விலையேற்றத்துக்கு அனுமதி கேட்டு நிற்கும் சமையல் எரிவாயு, பால்மா நிறுவனங்களின் கோரிக்கையை அரசாங்கத்தால் நீண்டகாலத்துக்கு தடுத்து வைத்திருக்க முடியாது என்பதே உண்மை நிலை.

இது ஒருபுறமிருக்க, எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து நாட்டில் முட்டையின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரசாயன பொருட்கள், பிளாஸ்ரிக் பொருட்களுடன் வந்த எம். வி. எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் தீப்பற்றி எரிந்ததில் நம் நாட்டின் கடல்சூழல் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் கடலுணவை உண்ண முடியாத நிலைக்கு ஒருபகுதி மக்களும் – உண்பதற்கு அஞ்சும் இன்னோர் பகுதி மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

image cb012502d1

மக்களின் ஊட்டச்சத்தில் கடலுணவு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதுவும், தொற்றுப் பரவி வரும் இந்தப் பேரிடர் காலத்தில் மக்கள் ஆரோக்கியத்தில் இந்த உணவு கிடைக்காமை பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில், உணவுப் பட்டியலில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைக்கான விலையேற்றம் வறிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் சூழலை உருவாக்கியுள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்தையும் அழிக்கச் செய்து ஏற்கனவே பட்டினியில் வாடும் மக்களை பிணிக்களுக்குள்ளும் தள்ளிவிடும் அபாயம் காணப்படுகின்றது.

பயணத் தடை காரணமாக தேங்கிய விவசாயப் பொருட்களை கிடைத்த விலையில் விற்பனை செய்து பெரும் நட்டத்தை வடக்கு மக்கள் – அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர்களில் பயிரிடப்பட்டு பெறப்பட்ட விளைச்சல்களை அடுத்துவரும் போகத்திலாவது சரிக்கட்டி விட முடியும் என்ற நம்பிக்கையுடன் விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபடும் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் விலையேற்றம் பெரும் அச்சத்தை ஏற்டுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதாக அரசு கூறினாலும்கூட அதற்கான ஆரம்பப்புள்ளிகூட இடப்படவில்லை. இந்த நிலையில், வரும் நாட்களில் விவசாய உற்பத்திகளும் அதிகரிக்கும் நிலையுள்ளது.

இவை போதாதென்று, நாடு மீளத் திறக்கப்பட்ட கடந்த இரு நாட்களிலும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட செயற்கை தட்டுப்பாட்டாலும் – விலையேற்றத்தாலும் மக்களின் கொள்முதல் சக்தி குறைந்துள்ளது. இந்த நிலையில், அரசாங்கம் தற்போதைக்கு பிறபொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தினாலும் அல்லது விலையுயர்த்த அனுமதிக்காது போனாலும்கூட விலையேற்றத்தை அதிக நாட்களுக்கு தள்ளிப்போட முடியாது என்பதே யதார்த்தநிலை.

அடுத்துவரும் சில மாதங்களில் பொருட்களின் விலை அதிகரிக்கப்படலாம். இதனால், நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மேலும் கீழ்நிலைக்கு தள்ளப்பட – நடுத்தட்டு வர்க்க மக்கள் கணிசமாகக் குறைந்து வறுமைநிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. அதுவும் போரால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல வாழ்க்கைத் தரத்தில் மேல் எழும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் மேலும் பொருளாதார நலிவை சந்திக்கவுள்ளது.

இதனால், நாட்டிலும் – வடக்கு, கிழக்கிலும் மீண்டும் முதலாளித்துவ செல்வாக்கும், நிதி நிறுவனங்களின் அத்துமீறல்கள் – அடாவடிகளும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவற்றுக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது என்பதே இன்று பெரும்கேள்வி.

தமிழ்க்குரலுக்காக குமரன்