சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / அதிகாரப்பகிர்வு தொடர்பில் கோட்டபாயவின் நிலைப்பாட்டை எவ்வாறு விளங்கிக்கொள்வது?
fffff 1
fffff 1

அதிகாரப்பகிர்வு தொடர்பில் கோட்டபாயவின் நிலைப்பாட்டை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச காலத்தில் எதைக் கூறினாரோ–தேர்தல் பிரச்சாரங்களின் போதுஎதைக் கூறினாரோ–அதையே இப்போது ஜனாதிபதியாகிய பின்னரும் கூறிவருகின்றார்.

சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்திருந்த கோட்டபாய, அதிகாரப்பகிர்விற்கான எந்தவொரு தேவையும் இல்லை என்று தெரிவித்திருக்கின்றார். அதிகாரப்பகிர்வு என்று கூறி, 70 வருடங்களாக அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியிருக்கின்றனர். பெரும்பாண்மை மக்களின் (சிங்களமக்களின்) ஆதரவின்றி அவ்வாறான ஒரு விடயத்தை செய்யமுடியாது. எனவே அதனை தன்னால் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருக்கின்றார்.

கோட்டபாயவை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொள்வதன் ஊடாக அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என்றே கருதுகின்றார். எனவே கோட்டபாயவிடமிருந்து பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இந்தச் சூழலை தமிழர் தரப்புக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? தமிழ் தலைமைகள் என்போரைப் பொறுத்தவரையில், சுலோகங்களை தவிர அவர்களிடம் எதுவுமில்லை. அனைவரிடமும் ஒருதேர்தல் வேலைத்திட்டம் மட்டுமே உண்டு. இதில் கூட்டமைப்பின்மீது எவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கலாமோ, அதேயளவு விமர்சனங்களை மற்றவர்கள் மீதும் முன்வைக்கலாம்.

கோட்டபாய அதிபாரப்பகிர்வை ஏன் இந்தளவு உறுதியாக எதிர்க்கின்றார்? சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அவர்ஏன் கரிசனை கொள்ளவில்லை? கடந்தகாலத்தில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் பலசிங்களத் தலைவர்கள் பேசிவந்தபோதிலும் அதில் எவருமே முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லை. இதில் சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் மட்டும்தான் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டது.

சந்திரிக்கா ஒரு அதிகாரப்பகிர்விற்கு கொள்கை அடிப்படையில் இணங்கியிருந்தார். ஆனால் அதே சந்திரிக்காவே கடந்த ஆட்சிக் காலத்தில் அதனை மறுதலித்திருந்தார். அது விடுதலைப் புலிகள் இருந்தகாலம். அப்போது நான் கூறியதை வைத்துக் கொண்டு நீங்கள் இப்போது பேசமுடியாது என்றார். உண்மையில் விடுதலைப் புலிகளுடன் இராணுவ ரீதியாக மோதிக் கொண்டுதான், சந்திரிக்கா தனது தீர்வுப் பொதியையும் முன்வைத்தார். அங்கும் சந்திரிக்காவின் தனிப்பட்ட விருப்பையும் மீறி, விடுதலைப் புலிகளின் அழுத்தம் இருந்தது. அவ்வாறானதொரு சூழலில்தான், அரசியல் தீர்வுதொடர்பில் சந்திரிக்காபேசினார்.

இந்த ஒரு சந்தர்ப்பத்தை விடுத்து பார்த்தால் கடந்த 70 வருடங்களாக இலங்கைத் தீவை ஆட்சிசெய்த எந்தவொரு சிங்களத் தலைமையும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு துணியவில்லை. தேர்தல் காலங்களில் சில வாக்குறுதிகளை வழங்கினாலும் கூட, பின்னர் ஒன்றில் அதனை நிராகரித்தனர். கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகாரப்பகிர்வு, புதியஅரசியல் யாப்பு தொடர்பில் மிகவும் ஆர்ப்பாட்டமாக பேசியிருந்தாலும் கூட, ஒரு கட்டத்துடன் அனைத்துமே நின்றுபோனது. ரணில் அதிகாரப்பகிர்விற்கு ஆதரவாக பேசியிருந்தாலும் அதற்கான பரவலான ஆதரவை பெறமுடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான், அதிகாரப்பகிர்வு ஒருபோதும் சாத்தியமில்லை என்று முதல் முதலாக ஒரு ஜனாதிபதி மிகவும் திடமாக கூறுகின்றார்.

கோட்டபாயவின் முதலாவது இந்திய விஜயத்தின் போது நரேந்திரமோடி 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். ஆனால் கோட்டபாயவோ அதிலும் சிலமாற்றங்கள் தேவைஎன்கின்றார். கோட்டபாயவை பொறுத்தவரையில் ஒருவிடயத்தில் தெளிவாக இருக்கின்றார். அதாவது, இந்தியாவோ அல்லது மேற்குலகமோ ஒருபோதும் தமிழர்களுக்கான அரசியல் தீர்விற்காக கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை. ஒப்பீட்டடிப்படையில் இந்தியா ஒன்று தான் அவ்வப்போது இது பற்றிபேசும் ஆனால் இந்தியாவும் தமிழர்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வைவழங்குமாறு ஒரு போதுமே கூறாது. ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரையில், 13 என்பதைத் தாண்டி ஒருபோதும் அவர்கள் பேசப்போவதில்லை. இதனை சிங்கள தலைமைகள் நன்குபுரிந்து வைத்திருக்கின்றன. இதன் காரணமாகவே கோட்டபாய அதிகாரப் பகிர்வுவிடயத்தில் இந்தளவு உறுதியாகவும் வெளிப்படையாவும் இருக்கின்றார்.

கோட்டபாயபோடும் கணக்குவெற்றிபெறுமா? அபிவிருத்தியின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளியை வைக்கமுடியுமா? முடியாது என்று கூறிவிடமுடியாது. எப்போதுமே அரசியலில் ஒருதரப்பின் பலம் என்பது மற்றைய தரப்பின் பலவீனத்தில் தான் தங்கியிருக்கின்றது. அப்படிப் பார்த்தால், தமிழ் தலைமைகளின் பலவீனத்தால் கோட்டபாய போடும் கணக்கு அவருக்கு ஒருவேளை வெற்றியையும் கொடுக்கலாம். ஏனெனில் வடக்குகிழக்கைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி என்பது பாதிக்கப்பட்டமக்களை பொறுத்தவரையில் ஒரு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் அவர்களது வாழ்வில் கோட்டபாயவின் அபிவிருத்தித் திட்டம் வெளிச்சம் ஏற்றுமாக இருந்தால், அவர்கள் அதிகம் தமிழ்த் தேசிய அரசியலிருந்து விலகிச் செல்லவே நேரிடும்.

பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் வாழ்நிலையை மட்டுமல்ல அவர்களது சிந்தனை முறைமையையும் முற்றிலும் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. அபிவிருத்தித் திட்டங்களால் மக்கள் நன்மையடையும் போது அதனை இழக்கும் வகையில் மக்கள் சிந்திக்கமாட்டார்கள். அவ்வாறான சூழலில் மக்களை அரசாங்கத்திற்கு எதிரான சிந்தனைக்குள் வைத்துக் கொள்ளவும் முடியாது. ஒரு அபிவிருத்தித் திட்டத்தால் மக்கள் நன்மையடை ந்து கொண்டிருக்கும்போது அதற்கு மாறாக பேசுபவர்கள் மீதே மக்கள் கோபம் கொள்வர்.

எனவே அபிவிருத்தியால் சிலவிடயங்களை மறக்கடிக்க முடியும் என்று கோட்டபாய எண்ணினால் அதனை குறைத்து எடைபோட முடியாது. ஏனெனில் மக்களின் வாழ் நிலையை மேம்படுத்துவதற்கான சுயாதீனமான செயற்பாடுகள் எவையும் தமிழ் தலைமைகளிடம் இல்லை. அவ்வாறு அபிவிருத்தியில் தமிழ் தலைமைகள் பங்குகொள்ள வேண்டுமாயின், அவர்கள் அரசாங்கத்தின் அங்கமாக மாறவேண்டும். அவ்வாறு மாறினால், அரசியல் ரீதியான பல விடயங்களை கைவிடவேண்டிவரும்.

கோட்டபாயவை நிச்சயமாக அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தலைமைகள் கையாளவே முடியாது. இந்த இடத்தில் தமிழ் தலைமைகளுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு. கோட்டபாயவின் வெளிவிவகார அணுமுறை இந்திய–அமெரிக்க நலன்களோடு மோதும் வரையில் காத்திருக்கவேண்டும். அல்லது இலங்கைக்குள் அதிகாரப்பகிர்விற்காக மக்களை அணி திரட்டிபோராட வேண்டும். ஆனால் இந்த இரண்டிலும் கூட சிக்கல்கள் உண்டு.

அதாவது, கோட்டபாய கடந்தகால படிப்பினைகளை கருத்தில்கொண்டு, இந்தியாவுடனும் மேற்குடனும் பகையற்ற உறவை ஏற்படுத்திக் கொண்டால் முதலாவது விடயத்தில் தமிழ் தலைமைகள் தோற்கநேரிடும். இரண்டாவதைப் பொறுத்தவரையில், அவ்வாறானதொரு போராட்டத்திற்கு மக்கள் தயாராக இருக்கப் போவதில்லை. இந்தப் பின்புலத்தில் எந்தக் கோணத்தில் பார்த்தாலும், தமிழ் தலைமைகளிடம் கோட்டபாயவை கையாளுவதற்கு எந்தவொரு துருப்புச் சீட்டும் இல்லை.

ஒருவேளை கோட்டபாய கடந்தகாலங்களிலிருந்து பாடங்கள் எதனையும் கற்றுக்கொள்ளாமல், உலகை கையாளுவதில் தவறிழைப்பாராயின், இலங்கையின் மீதான அனைத்துலக நெருக்கடிகள் அதிரிக்கலாம். அந்த நெருக்கடி நிலையில் தமிழர்களை பலரும் திரும்பிப் பார்க்கலாம். ஆனால் இவைகள் எல்லாம் ஊகங்களே. ஆனால் கசப்பான உண்மை – தமிழ்த் தேசிய அரசியல் இப்போது ஊகங்களிலும், அனுமானங்களிலும் தான் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.

-கரிகாலன்-

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Sreetharan

வடக்கில் ஒரு கருணா!

இப்போது இலங்கைத் தீவில் இரண்டு நபர்களைப் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன. அந்த இரண்டு நபர்களும் விடுதலைப் ...