மறக்க முடியாத கறுப்பு யூலை!

block
block

மறக்க முடியாத கறுப்பு யூலை கலவரம் நடந்தேறி 38 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனால், நிலைமைகளில் இன்னும்தான் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அன்றைய நாட்களைப் போன்றே இன்றும் போராட்டங்கள் தொடர்கின்றன. சோகங்களையும்,  துன்பங்களையும் சுமந்து கொண்டு இறுக்கமான வாழ்க்கையையே மக்கள் நகர்த்திச் செல்கின்றனர். கறுப்பு யூலை (ஆடிக் கலவரம் ) இலங்கைத்தீவு – யுத்தத் தீவாக மாறுவதற்கு காரணமான நிகழ்வு. தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் கலவரத்தில் வெட்டியும் , கொத்தியும், சுட்டும் , எரித்தும், கொளுத்தியும் ,பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தியும் , குழந்தைகள் என்று கூடப் பாராது தமிழர்கள் என்பதாலேயே கொன்று குவித்து சிங்களக் காடையர்கள் போட்ட வெறியாட்ட காலமும் இதுதான்.

இலங்கையே எங்கள் தாயகம் என்று நம்பியிருந்த தமிழர்களின் சொத்துக்களை சூறையாடியும் நிலங்களை அபகரித்தும், தடுக்க முனைந்தவர்களைக் கொன்று குவித்தும் அகிம்சை போரை நம்பிய தமிழர்களை ஆயுத வழிக்குத் தள்ளிய நிகழ்வும் இதுவே .

1983 யூலை 23, கறுப்புயூலை என்று அழைக்கப்படும் ஆடிக் கலவரம் ஆரம்பமான நாள். திட்டமிட்டுக் கொழும்பில் தொடங்கிய கலவரம் பின்னர், தென்னிலங்கையின் பல பகுதிகளுக்கும் விரிந்தது. இந்தக் கலவரத்தில் தனியே சிங்களக் காடையர்கள் மட்டும் களமிறங்கவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு சிங்களம் பேசவல்ல முஸ்லிம் குண்டர்களும், ஏன் தர்மத்தைப் போதித்து அகிம்சையை வளர்க்க வேண்டிய பிக்குகள் கூட பஞ்சமா பாதகங்களையும் புரிந்து வெறியாட்டம் ஆடினர். கருணையே வடிவான புத்தரின் வழியைப் போதிக்க வேண்டிய பிக்குகள் கூட்டம் பஞ்சமா பாதகத்தையும் புரிவதற்குத் தலைமை தாங்கியது .

ஓரிரவில் தொடங்கிய கலவரம் ஒன்றல்ல, பத்தல்ல , நூறல்ல மூவாயிரம் உயிர்களைக் குடித்து வெறியாட்டம் ஆடிய பின்னரே மெல்லத் தணிந்தது. இது பின்னர் , மூன்று தசாப்த போருக்கு வித்திட்டது தனிக்கதை. இந்தக் கலவரத்தின் கொடூரத்தை அன்றைய ஊடகங்கள் வெளிப்படுத்தின. உலகம் அதிர்ந்து போனது . பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இந்நிலை கண்டு பரிதவித்துக் கொதித்தபோது அன்றிருந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவோ கலவரம் குறித்து சிறிதேனும் கவலை கொண்டாரில்லை அவர் தொடர்ந்தும் தன் பேரினவாத – காடைத்தன அரசியலையே செய்து கொண்டிருந்தார்.

இரு வாரங்களாகத் தொடர்ந்த இந்தக் கலவரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சொத்துக்களை – அங்கங்களை – உறவுகளை இழந்து அகதிகளாகினர். அதுவரை காலமும் ஆடி மாதம் என்றாலே கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள், பின்னாளில் ஆடி என்றாலே கலவரப்படத் தொடங்கினர்.  இந்த நிலைமையிலும் – கலவரத்திலும் இன்றுவரையில் மாற்றம் எதுவுமேயில்லை. ஏனெனில், அன்றும் இன்றும் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டே தமிழர்கள் மீது  வன்முறைகளையும் கலவரங்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகின்றது.

அன்றும் , ஜே. ஆர் . ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இத்தகையதொரு கொடுமையைப் புரிய இரகசியமான முறையில் ஓர் அணியை உருவாக்கியிருந்தது.  தனது அரசிலிருந்த பேரினவாதப் போக்குக் கொண்டவர்களையும் தமிழ் எதிர்பார்ப்பாளர்களையும் ஒன்றிணைத்து அதற்கான செயல் திட்டங்கள் வழிவகுக்கப்பட்டன.  மருதானை ரெயில் பெட்டித் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களே கலவரக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது . இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட பல தமிழர்களின் வர்த்தக நடவடிக்கை முடக்கப்பட்டதுடன் அவர்கள் வெறுங்கைகளுடனேயே தமது பிறந்த இடங்களை நோக்கி இராணுவத்தினரின் உதவியுடன் அனுப்பப்பட்டனர். அவர்கள் வடக்கு , கிழக்கு பகுதிகளுக்கும் , வெளிநாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது . தென்னிலங்கையில் பிறந்த தமிழர்கள் கூட இந்த அகதி வாழ்வுக்கு விதிவிலக்கல்ல.

இடப்பெயர்வு அவலத்தை சந்தித்த அவர்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தங்கினர். செல்வங்கள் யாவும் பெற்று வாழ்ந்த அவர்கள் , யாவற்றையும் இழந்து ஒருவேளை உணவுக்காக அடுத்தவரின் கையை எதிர்பார்த்திருந்தனர். இந்தக் கலவரத்தின்போதுதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற சிறைக் கொலைகளும் நடந்தேறின. தமிழர்களின் உரிமைக்காகப் ஆயுதத்தைக் கையில் ஏந்திய குட்டிமணி, தங்கத்துரை, ஜெகனுடன் 34 அரசியல் கைதிகள் சிறைச் சாலைக்குள் திட்டமிட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். “தமிழீழத்தைப் பார்க்க வேண்டும்”, எனக் கூறிய குட்டிமணியின் கண்களை தோண்டி வெறியாட்டம் ஆடினார்கள் காடையர்கள்.

இத்தகைய பெரும் கலவரத்தை அன்று தமிழர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. இதன் அரசியல் உள் நோக்கத்தையும் தாற்பரியத்தையும் அப்போது தமிழர்கள் அறிந்திராவிட்டாலும் காலப்போக்கில் இதையும் ஓர் அரசியல் ஒடுக்குமுறையாகவே தமிழர்கள் பார்க்கத் தொடங்கினர். உண்மையிலேயே எதிரி திட்டமிட்டபடி தமிழர்களின் உளவியல் பலத்தை உடைத்தெறிந்த நிகழ்வாகவே இதைப் பார்க்கலாம். தமிழர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல மானசீகமாகவும் பலவீனப்படத் தொடங்கிய காலகட்டம் இதுவாகும்.  இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சியேற்பட்டதுடன் பல நாடுகளின் தலையீடுகளும் அதிகரித்தன.

தமிழர்களை ஒடுக்கவேண்டும் என்ற முனைப்பே இருந்ததேயொழிய நாட்டில் அமைதியும் சுபீட்சமும் இல்லாது போவதையிட்டு அரசோ , சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களோ கவலைகொண்டதாக இல்லை.  தமிழர்களை சகல வழிகளிலும் ஒடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அதிகளவில் ஆரம்பித்த பெருமை ஜே. ஆரையே சாரும் . அப்போது எதிர்க்கட்சியாக வந்த தமிழர் விடுதலை கூட்டணியை பார்த்து மிரண்டவராக இனியும் வரலாற்றில் தமிழ் கட்சி ஒன்று எதிர்க்கட்சியாக வரக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டதே புதிய அரசியல் அமைப்பும் – தேர்தலும். அதில் அதிக இலாபமடைந்தவர்கள் சிங்களவரல்ல . சிறுபான்மையினரான முஸ்லிம்கள். ஏனெனில், இதன் பின்னரே இவர்கள் அதிக நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றனர் . எனவே, இலங்கையின் அரசியல் மற்றும் இனங்களின் கலாசாரப் பண்பாட்டுத் தளங்களிலும் பாரிய மாற்றங்கள் வருவதற்குயூலை இனப்படுகொலைகளும் காரணமாயிருந்தன. அன்று கண் விழித்த தமிழினம் மன அமைதியோடு இன்னும் உறங்காத ஒரு சமூகமாக சகல வழிகளிலும் பாரிய இடைவெளிகளைக் கொண்டதோர் இனமாகவும் இன்று வாழ்ந்து வருவது வேதனையிலும் வேதனையான விடயம்.

தமிழ்க்குரலுக்காக -குமரன்