இருகட்சி அரசியல் : தமிழ்த் தேசியத்தை காக்குமா? சிதைக்குமா?

fffff 2
fffff 2

கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுகின்ற மரபு ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது. தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பல்வேறு பின்னடைவுகளும் பலவீனங்களும் பூசி மெழுக முடியாதளவில் தென்படுகின்றன. இதற்கு மாற்றுக் கட்சிகளும் அவைகளால் முன்வைக்கப்படும் சரியான விமர்சனங்களும் இல்லாமையும் காரணமாகும். அத்துடன் இது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் பாதிக்கின்றது.

2009இற்குப் பின்னரான காலத்தில் ஒற்றுமைக்காகவும் போராளிகளினால் கைகாட்டப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றது. அதனால் எதை செய்தாலும் மக்கள் இப்படியே வாக்களிப்பார்கள் என்ற அக் கட்சியின் பொறுப்பின்மையால் கூட்டமைப்பின் அரசியல் பயணம் நைந்து தொய்ந்து வருகின்றது.

இதனால் தேர்தல்களை அண்டிய காலத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம், பின்னர் அதனை மறந்து கைவிடலாம் என்கின்ற நிலமைதான் உண்டு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தாயகம் பெற்றுத் தருவோம் என்று மக்களின் ஆணையை கூட்டமைப்பினர் பெற்றனர். அடுத்த பாராளுமன்ற தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில், அந்த வாக்குறுதிக்காக எந்தளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

அதற்காக என்ன அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்ற கேள்விகளை எழுப்புவது அவசியமானது. அத்துடன் இவர்களை நோக்கி மக்களின் நிலை நின்று விமர்சனங்களை முன்வைப்பவர்களும் முன்வைக்கின்ற கட்சிகளும் இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை என்ற நிலைதான் காணப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி அரசியலுக்கு தொடர்ந்து சாதகமாகின்றது.

எனவே தமிழ் தேசிய அரசியலின் பின்னடைவுக்கு மாற்று அரசியல் கட்சிகள் இல்லாமையை ஒரு முக்கிய காரணமாக இந்தப் பத்தி குறிப்பிட விரும்புகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி புதிய கட்சிகளை உருவாக்கியவர்களும் அல்லது தமது பூர்வீக கட்சிகளை புனரமைத்தவர்களும் தமிழ் தேசிய சூழலில் மாற்றுக் கட்சியாகவில்லை. ஒன்றில் கூட்டமைப்பின் தொடர்ச்சியாகவும் அல்லது சுயநலன் குறித்த குறைகளை முன்வைப்பவர்களாகவுமே உள்ளனர்.

அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சனத் தராசில் நிறுத்தி தமது கூர்மையான விமர்சனங்களை முன்வைத்து, தமிழ் தேசிய அரசியல் பாதையை செழுமைப்படுத்தாமல், தமது சுய கட்சி அரசியல்களுக்காக அவதூறுகளை அள்ளிப் பரப்பும் கட்சிகளாக இருந்தமையும் நமது அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம் எனலாம். இது கூட்டமைப்பின் பின்னரான அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

தென்னிலங்கையில் பிரதான ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உள்ளன. ஒன்றை ஒன்று விமர்சனம் செய்கின்றன. மக்களும் ஆட்சி அதிகாரங்களை மாறி மாறி வழங்குகின்றனர். இதனால் மக்கள்மீது ஆட்சியாளர்களுக்கு கண்ணியமும் பயமும் பொறுப்பும் ஏற்படுகின்றது. இதே நிலமைதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ளது. மக்களுக்கு எதிராக, அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக ஆட்சி புரிபவர்கள் அடுத்த பதவிக்காலத்தில் தூக்கி எறியப்படுகின்றனர்.

இத்தகைய ஆளும் எதிர் கட்சி அரசியல் அல்லது, மாற்றுக் கட்சிப் பண்பாடு ஈழத் தமிழ் தேசிய அரசியலும் ஏற்பட வேண்டும். அதுவே சரியான விமர்சனங்கள் எழுவதற்கு அடிப்படையானது. மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடப்பார்கள். இத்தகைய சூழல் இன்மையால்தான் தமிழ் தேசிய அரசியலில் ஏகபோக அரசியலும் மக்கள்மீதான பொறுப்பின்மையும் அதிகரித்துள்ளது.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஒரு தரப்பிற்கு வாக்களித்தபோதும் இதுவரையிலும் என்ன நன்மை நிகழ்ந்துள்ளது? அத்துடன் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரத்தை பகிரக்கூடிய மாற்றுக் கட்சி ஒன்று உருவாகியுள்ளதா? நிச்சயமாக அப்படி ஒரு கட்சி உருவாகினால் மக்கள் பாராளுமன்றப் பதவிகளையும் மாகாண சபைகளையும் அவர்களிடம் கையளிப்பார்கள். அதுவே ஈழத் தமிழ் அரசியல்வாதிகளை பொறுப்புள்ளவர்களாக மாற்றும்.

எனவே தமிழ் தேசிய அரசியல் சூழலில் மாற்று அரசியல் பண்பாட்டை உருவாக்கத் தவறினால், அரசியல் நாட்டமைத்தனங்களும் சண்டித்தனங்களும் மாத்திரமே தலைதூக்கும். அது அரசியலை மாத்திரம் பாழாக்குவதில்லை. மக்களின் வாழ்வையும் நாட்டின் மீள் எழுச்சியையும் முக்கியமாக விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிடும். எனவே இந்த விடயத்தில் ஆழமான சிந்தனையை இத் தலையங்கம் அவாவுகின்றது.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்

26.12.2019