விக்கி திறந்துள்ள புதிய போர்க்களம் : பிடுங்கி எறியப்படும் பேரினவாதத்தின் பொய்வேர்!

Chinema 1
Chinema 1

2009இற்குப் பின்னரான காலத்தில் அறிவாலும் சிந்தனையாலும் நமது உரிமைகளை வெல்ல வேண்டிய ஒரு சூழலுக்குள் ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. மௌனிக்கப்பட்ட வலுவான ஒரு ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அறிவால் மாத்திரமே எடுத்துக் கூறும் சூழலும் ஈழத் தமிழர்களின்பால் சூழப்பட்டது எனலாம். எனினும் 2009இற்குப் பின்னரான காலத்தின் அரசியலில் அறிவையும் தெளிந்த சிந்தனையையும் பயன்படுத்துவதைத்தான் காண முடியவில்லை.

சிங்கள தேசத்தின் பிரதான ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, பல்வேறு அரசியல்வாதிகளும் பேரினவாத நோக்கம் கொண்ட போலியான வரலாற்றாசிரியர்களும் இலங்கையின் வரலாறு குறித்து பொய்யான தகவல்களை பரப்பியபோது, அதனை வரலாற்று ரீதியாக பேச எமது பேராசிரியர்கள் எவரும் முன்வரவில்லை. காரணம் தமது பதவிகள் பறிபோய்விடும் என்ற அச்சம். எமது அரசியல் தலைவர்களும் அது குறித்து வாய் திறக்கவில்லை. காரணம் அவர்களுக்கு வரலாறு தெரியாது.

எமது தலைவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் இறைமைக்காக துடிக்கின்ற போது, அவர்கள் எம்மை இந்த தீவின் பூர்வீகக் குடிகள் இல்லை என்றும் வந்தேறு குடிகள் என்றும் பேசுகின்றனர். நாம் யார்? நமது வரலாறு என்ன? அதைவிட இத் தீவின் வரலாறு என்ன என்பது குறித்துப் பேச தமிழ் தலைவர்கள் எவரும் முன்வரவில்லை. வரலாற்றின் பேரறிவுடன் விடுதலைப் போராட்டம் நடந்த ஈழமண், வரலாற்றை பேசத் தயங்குகின்ற அல்லது, வரலாறு தெரியாத தலைவர்களிடம் சிக்கியிருக்கிறது.

இந்த சூழலில்தான், வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்த சில கருத்துக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றது. அது சகதியில் மேல் பொய் வேரோடிய பேரினவாத்தை பிடுங்கி எறிந்திருக்கின்றது எனலாம். முக்கியமாக ஈழத்தின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்பதையும் மகாவம்சம் ஒரு கற்பனைக் கதை என்பதையும் சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும் வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார் முன்னாள் முதல்வர்.

தமிழீழம் காலத்தால் முந்தியது

இலங்கையை ஒரு பல்லின நாடு என்றே விக்கி குறிப்பிட்டுள்ளார். பல இனத்தவர்களும் பல சமயத்தவர்களும் வாழுகின்ற பன்மைத்துவ நாடு என்றே அவர் கூறுகின்றார். ஆனாலும் சில சிங்கள தலைவர்களும் மத தலைவர்களும் இதனை சிங்கள பௌத்த நாடு எனக் கூற முயல்வதையே விக்கி, கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். ஈழத்தின் பூர்வீகம் என்று வருகின்றபோது, இலங்கையில் தமிழீழம் என்ற பகுதி பௌத்தின் வருகைக்கு முன்பிருந்தே இருப்பதாகச் சொல்கிறார். பிற்காலத்தில் தமிழ் பேசும் ஈழமும் சிங்களம் பேசும் ஈழமும் இருந்ததாகவும் கூறுகிறார்.

தமிழீழம் பற்றி எந்தவொரு புத்தகத்திலும் எழுதவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், தமிழீழம் பற்றி நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அது இலங்கையில் இப்போதும் இருக்கிறது என்றும் சொல்கிறார். ஈழம், லங்கா, சிலோன் போன்ற மாற்றுப் பெயர்கள் போலவே தமிழீழமும் இன்னொரு பெயர் என்றே விக்கி சொல்கிறார்.

மகா வம்சம் ஒரு புனைவு

இலங்கை அரசும் பேரினவாதிகளும் மகாவம்ச மனநிலையில் இருந்து வெளியேறவேண்டும் என்பதை தலைவர் பிரபாகரன் தனது உரையொன்றில் வலியுறுத்தியிருப்பார். உண்மையில் புனைவுகளை வரலாற்று ஆதாரங்களாக கொள்ள முடியாது. புனைவுகள் கற்பனையானவை. அவை அப் படைப்பாளியின் சுய சமய, சுய சமூக சார்பு கொண்டவை என்பதுதான் பொதுவான கருத்தாகும்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்று சொல்வது தவறு என்றும் அதை கி.பி 5ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதிய புனைகதைகளின் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு இத் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சிங்கள மொழி 6அல்லது 7ஆம் நூற்றாண்டில் உருவானது என்றும் அதற்கு முன்னர் இலங்கையில் தமிழ் பௌத்தமே இருந்ததாகவும் வரலாற்று ஆதாரங்களுடன் விளக்குகின்றார்.

இதற்கு பேராசிரியர் சுனில் ஆரியரத்தினவின் ‘தெமள பௌத்தயோ’  என்ற நூலை முதன்மை ஆதாரமாக சுட்டுகின்றார். தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தை கைவிட்டு, பின்னர் தமது தாய் மதமான சைவத்திற்கு திரும்பினர். அத்துடன் பாளிமொழியுடன் தமிழ் மற்றும் திராவிட மொழிகள் கலந்தே சிங்களம் உருவானது என்றும் எச்.ஏ.ஜே. ஹூலுகல்ல தனது சுற்றுலாப் பயணிகளுக்கான செய்திகள் என்ற நூலில் சிங்கள இனம் ஒரு கலப்பு இனம் என்பதையும் சிங்கள மொழி ஒரு கலப்பு மொழி என்பதையும் ஆய்வுபூர்வமாக கூறியதையும் நினைவுபடுத்துகிறார் விக்கி.

ஈழத்தின் பூர்வீகக் குடிகள் சைவசமயிகள்

தற்போதைய காலத்தில் இருந்து இரு நூறு வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்குடன் நீர்கொழும்பு, கதிர்காமம் முழுவதும் தமிழர்கள் வியாபித்து வாழ்ந்தனர் என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர் அங்கு சிங்கள மக்கள் இருக்கவில்லை என்றும் விக்கி கூறியுள்ளார். பாளிமொழி, சிங்கள கலப்பின உருவாக்கத்தின் முன்னரே ஈழத்தின் பூர்வீகக் குடிகளாக சைவர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களும் பெரும் வரலாற்று ஆதாரங்கள் ஆகின்றன. தென்னிலங்கையில் அழிக்கப்பட்ட தொண்டீச்சரமும் இதில் முதன்மையானது. அதனையும் விக்கி தனது கருத்துக்களில் கோடிட்டுள்ளார்.

இலங்கை ஒரு சிங்கள நாடல்ல, ஆனால் அதனை சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கருத்து பல சிங்கள அரசியல்வாதிகளையும் சில புத்திஜீவிகளையும் பாதித்திருப்பதாக கூறியுள்ள விக்கி, 1956இல்  தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது வடக்கு கிழக்கிற்கு உத்தியோகபூர்வ மொழியாக தமிழை கொண்டுவர வேண்டும் என்று எழுந்த குரல்களையும் ஆதாரப்படுத்தியுள்ளார்.

மேற்குறித்த ஆதாரங்களை எடுத்துக் கூறுவதன் வாயிலாக இலங்கையின் பன்மைத்துவத்தையே விக்கி வலியுறுத்துகின்றார். அத்துடன் 75வீதமான சிங்கள மக்கள் வாழும் பகுதியில் சிங்கள பௌத்த நாடு என்றால் வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சியை வழங்க வேண்டும் என்பதையும் வரலாற்று அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட இனத்தின் நியாயத்தின் அடிப்படையிலும் வலியுறுத்தியுள்ளார். சிங்களவர்கள் மத்தியில் இருந்தும் சிங்கள வரலாற்றாசிரியர்களிடம் இருந்தும் சிங்கள நூல்களில் இருந்தும் எமது வரலாற்றை நிருபித்துள்ள முன்னாள் முதல்வரின் கருத்துக்கள் பேரினவாத்தின் பொய் வேரைப் பிடுங்கி எறிந்திருக்கின்றது என்றால் மிகையில்லை.

இந்தக் கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு சென்றடைய வேண்டும். அவர்களுக்கு புகட்டப்பட்ட பொய் வரலாறுகள் தெளிவுபடுத்த வேண்டும். இன்றும் வடக்கு கிழக்கில் வந்து நின்று பொய்யான கதைகளை கூறி ஆக்கிரமிப்புக்களை ஊக்குவிப்பவர்கள் உண்டு. ஒரு அறிவுப் போருக்கான வழியை விக்கியின் கருத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன. எமது தலைவர்களும் புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் இந்தக் கருத்துக்களை ஒரு தொடர்ச்சியான விவாத்திற்கும் உரையாடலுக்கும் உட்படுத்த வேண்டும்.

தமிழ்குரலுக்காக தாயகன்.

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )