தமிழ் மொழி அமுலாக்கத்தில் தமிழ் தலைமைகளின் பங்கு?

Chinema 1
Chinema 1

 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். இன்னொரு வகையில் சொன்னால், மொழி ஒரு இனத்தின் குரல் அல்லது வார்த்தைகள் எனலாம். ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்தல் என்பது அந்த இனத்தை கழுத்தில் பிடித்து திருகுவதற்கு ஒப்பானது. அதாவது கொலை செய்வதற்கு ஒப்பானது. இலங்கைத் தீவில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது தொடர்ந்தும் தோல்வியைத்தான் தழுவி வருகிறது.
 
இலங்கையில் தனிநாடு குறித்த கோரல்கள் உருவாகுவதற்கு தனிச்சிங்கள சட்டம் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 1956 களில், அன்றைய காலத்தில் தனிச்சிங்களச் சட்டம் உருவானபோது அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்று சிங்கள இடதுசாரித் தலைவர்கள் எச்சரித்தார்கள். தனிச்சிங்களச் சட்டம் என்பது இந்த தீவில் இரு நாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும் என்றும் எச்சரித்தார்கள்.
 
பிற்காலத்தில் அதுவே நடந்தேறியது. அண்மையில் வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான சுயாட்சி பற்றி வலியுறுத்திய வடக்கின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனும் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். அத்துடன் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சிங்களத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் அளிக்கவேண்டும் என்பதும் அவரது கருத்துக்களின் நோக்கமாகும்.
 


தனிச்சிங்களச்சட்ட உருவாக்கத்தின் பின்னர், எழுந்த இனச்சிக்கல்களின் பின்னர், இலங்கையை ஆட்சி செய்த அத்தனை தலைவர்களும் தமிழை இரண்டாம் மொழி என்று கூறிவந்தனர். இலங்கை அரசமைப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் நடைமுறை ரீதியாக இந்த சரத்து அர்த்தமற்றுப்போனதுடன், தமிழ் மொழியானது, தொடர்ந்தும் ஒடுக்கப்படும் ஒரு மொழியாகவே இருந்து வந்துள்ளது.
 
கடந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த தலைவர் ஒருவர், ஐக்கிய நாடுகள் சபையில்கூட தமிழில் பேசினார். ஆனால், அவரது ஆட்சிக்காலத்திலும் சிங்கள மொழித்திட்டங்கள் பலவும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் அரச திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களிலும் தமிழ்ப்பிழைகள் விடப்படுகின்றன.
 
அண்மையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா பொலிஸ் நிலையங்களின் பெயர் பலகையில் தமிழுக்கு முதன்மை இடம் வழங்கவேண்டும் என்றும் தமிழில் எழுதவேண்டும் என்று ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். இதன்படி ஒரே ஒரு நிலையத்தில் மாத்திரம் அதுவும் காவல்துறை என மாற்றப்பட்டபோதும் சிங்களமே முதல் இடத்தை பிடித்திருந்தது.
 
ஆனாலும் தொடர்ந்தும் பல காவல் நிலையங்கள் இன்னமும் பொலிஸ் ஸ்டேசன் என்றே இயங்குகின்றன. அத்துடன் காவல் நிலையங்களுக்குச் சென்றால், அங்கே சிங்களத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் சிங்களத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறியாமல் தமிழர்கள் கையெழுத்திட வேண்டிய நிலையுண்டு.
 
அரச சுற்று நிரூபங்கள் பலவும் இன்னமும் சிங்களத்திலேயே வெளியிடப்படுகின்றன. எழுத்துப் பிழைகள் நிறைந்த பெயர் பலகைகளுடன் இன்னமும் பேருந்துகள் வீதிகளில் ஓடுகின்றன. சில பெயர் பலகைகளில் தமிழை பிழையாக எழுதி அவை கெட்ட வார்த்தைகளாக மாறிப் போன துயரமும் நடந்துள்ளது.
 
இந்த விடயங்களுக்கு மத்தியில், இன உரிமைக்காகவும் மொழி உரிமைக்காகவும் போராடுபவர்கள் என்ற ரீதியில், எமது தலைமைகள் தமிழ் மொழி அமுலாக்கத்தில் என்ன பங்களிப்பை செய்திருக்கிறார்கள்? இந்தக் கேள்வியையும் இப்பத்தி அவசியமாக கருதுகின்றது. இதற்கு தக்கதொரு உதாரணமும் சாதனையும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
 
தனி நாட்டிற்காக போராடிய விடுதலைப் புலிப்போராளிகள் தமது நிழல் அரசில் ஒரு தமிழ்மொழி அரசை சாத்தியப்படுத்தினார்கள். அது தமிழகத்தில்கூட நடைமுறையில் இல்லாத அரசென தமிழக அறிஞர்கள் பலரும் பாராட்டினர். அனைத்து நிர்வாகங்களும் செயற்பாடுகளும் கட்டமைப்புக்களும் செம்மையான தமிழ் மொழியை கொண்டு அமைக்கப்பட்டது உலகிற்கு வியப்பையும் ஏற்படுத்தியது.
 
ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய சூழலில் இருந்த சில தமிழ் தலைவர்கள் தமிழ் அறிஞர்களாகவும் வரலாற்று பிரக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்றிருக்கும் தலைவர்களில் எத்தனைபேர் அப்படி இருக்கிறார்கள்? பதிலற்ற கேள்வியாகவே இது இருக்கிறது. அது மாத்திரமல்ல, இன்றைய தமிழ் மொழி அமுலாக்கத்தில் தமிழ் தலைமைகளின் பங்கு எப்படி இருக்கின்றது?
 
கடந்த பத்தாண்டுகளாக, குறிப்பாக ஐந்தாண்டுகளுக்கு மேலாக வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்கள் தமிழ் தலைமைகளின்வசம் இருந்தன. இக்கால கட்டத்தில் தமது ஆட்சியில், இவர்கள் தமிழ்மொழி அமுலாக்கம் குறித்து என்ன நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்? தமிழில் பெயர் சூட்டுவது, அரச திணைக்கள பெயர் பலகைகளில் தமிழின் இடத்தை முதன்மைப்படுத்தல், சுற்று நிரூபங்களை தமிழாக்கம் செய்தல் என்று எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.
 
தற்போதும் வன்னியில் உள்ள நகரங்களின் கடைப் பெயர்களும் பிள்ளைகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களும் தூய தமிழில் அமைந்திருப்பது அன்றைக்கு போராளிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வு தூண்டுதல்களினால் ஆகும். தமிழில் பெயர் வைக்கும் போக்குகூட இன்று அருகி வருகின்றது. 2009 வரையான பிள்ளைகள் இன்றைய ஈழத்தில் தமிழ் பெயரில் தம்மை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறார்கள். இந்தப் போக்கு தொடர்வதற்கு சரியான பங்களிப்பை வழங்க இப்போது யாருமில்லை.
 
எனவே தமிழ் மொழிக்காக போராடும் நாம் எமது வாழ்விலும் செயலிலும் தமிழுக்கு சரியான இடத்தை வழங்க வேண்டும். தமிழ் தலைமகள் இதில் முன்னுதாரணமாக செயலாற்ற வேண்டும். இதனை தமிழ்குரலானது, இப்பத்தியின் வாயிலாக மக்களின் குரலாக வலியறுத்த விரும்புகின்றது. மொழிப்பிரச்சினை என்பது ஒரு உடனடியான அவசியமான சிக்கல் ஆகும். இதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் மாத்திரமின்றி, எமது அரசியல் கட்டமைப்பு, மற்றும் அதிகாரிகளின் கைகளிலும் உண்டு. அனைவரும் இணைந்து செயற்படுவதுதான் தமிழ் பேசும் மக்களுக்கு மொழிச்சிக்கலற்ற, நிர்வாகத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.
 
தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்
07.01.2020