விக்னேஸ்வரன் ரஜினிகாந் சந்திப்பு : ஈழத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானதா?

CV
CV

வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல், இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் போராட்டத்தில் ஆதரவை திரட்டுதல் என பல்வேறு நோக்கங்களுக்காக முன்னாள் முதல்வர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அல்லாமல், ஈழத் தமிழ் மக்களின் மேம்பாடு கருதிய பயணமே இதுவாகும்.

தமிழகம் என்றும் ஈழத்துடன் நெருங்கிய பந்தத்தை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய ஆதரவு சக்திகளையும் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள், ஈழ ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புக்கள் தொடர்ச்சியாக எதிர்பார்க்கப்பட்டது. எம்.ஜிஆர் அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய உதவிகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் சிறந்த பக்கங்களாக கருதப்படுகின்றன.

ஈழத்தில் உள்ள மக்கள் தமது குரலை வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகின்ற காலத்தில் எல்லாம், புலத்தில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும்தான் ஆதரவுக் குரல்கள் எழுகின்றன. ஈழ மக்களின் விடியலுக்காக தமிழகத்தவர்கள், உயிர் தியாகம் முதல், எத்தனையோ பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள். ஈழமும் தமிழகமும் எப்போதும் உணர்வூர்வமான நெருங்கிய பந்தமான நிலங்கள் ஆகும். அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசு ஈழ மக்களுக்காக சட்ட சபையில் உருவாக்கிய தீர்மானங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

விக்கினேஸ்வரன் அவர்கள், வடக்கில் முதல்வராக இருந்தபோதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் வலியுறுத்தி வந்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து, இன்றைக்கு தீர்க்கமான குரலை எழுப்பி வரும் முன்னாள் முதல்வரின் தமிழக பயணம் மிகவும் முக்கியத்துவமானது. காலம் காலமான ஈழ விடுதலைப் பயணப் பாதையை புதுப்பிக்கவும் செப்பனிடவும் உதவக்கூடியது.

இப் பயணத்தின்போது, வடக்கு முதல்வருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் ஒரு சந்திப்பு ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. விமர்சனங்கள் உள்ளபோதும் திரையில் பல ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு நடிகருடனான சந்திப்பினை தவிர்க்காமல், அதன்போதும் ஈழ மக்களின் எதிர்பார்ப்புக்களை கூறி விக்கினேஸ்வரன் உரையாடியுள்ளார். ஈழத் தமிழ் மக்கள் இன்றுள்ள நிலையில், சிறுதுரும்பும் அவர்களுக்கு தேவையானது. அவ்வாறான நகர்வே இன்று தேவைப்படுகின்றது. அதுவும் தமிழ் நாட்டின் எதிர்கால முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்படும், இந்தியாவின் ஆளும் அரசாங்கத்தின் பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கும் ஒருவருடனான சந்திப்பைத் தவிர்ப்பது என்பது அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாடாகவே இருக்கும்.

ஆனால் தமிழர்களை துண்டு துண்டாக தாயகத்தில் பிரித்தவர்களும், விக்கினேஸ்வரன் அவர்களால் தமது தனிப்பட்ட பதவிகளுக்கும் கட்சி நலன்களும் பாதிப்பேற்பட்டு மக்களால் தூக்கி வீசப்பட்டுவிடுவோம் என அஞ்சுபவர்களும், இந்த பயணத்தின்போது முன்னாள் முதல்வர்மீது அவதூறுகளையும் பொய்களையும் தமது இயலாமைகளாக வெளிப்படுத்துகின்றனர். எந்த விதமான காரண காரியங்களுமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி மகிழ்கின்றனர்.

இவ்வாறு பரப்பி மகிழுகின்ற விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்திருக்கின்றது. தனிப்பட்ட அரசியல், கட்சி நலன்கள் என்ற விடயத்தில் இவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது ஒன்றிணைவது வழமையானது. மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தவும் உதவக்கூடியது. கடந்த காலத்தில் திரு இரா. சம்பந்தன் அவர்களுடன் இந்திய ஆட்சியாளர்களின் முன்னால் கைகட்டி நின்றவர்களில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒருவர். இவர்களுக்கான ஆசனம் மறுக்கப்படும் வரையில் இத்தகைய நிலையே காணப்பட்டது.

எவ்வாறாயினும் இரா. சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் வெளிப்படையாக அறிவித்தே, இந்தியாவுக்கு செல்கின்றனர். அதேபோன்று வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கின்றனர். இனப்பிரச்சினையை தீர்க்க இந்தியாவின் உதவியை வெளிப்படையாகவே கோருகின்றனர். இது சம்பிரதாயபூர்வமான நிகழ்வு. தவிர்க்க முடியாத அரசியல் தேவைப்பாடு. ஆனால் திரு கஜேந்திரகுமார் தரப்பினர் இதுவரை யாரை சந்தித்துள்ளார்கள்? தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடன் என்ன உரையாடியுள்ளனர்? குறைந்தது, தமிழ் மக்களை சந்தித்தாவது அவர்களின் மனநிலைகளையும் குறைநிலைகளையும் கேட்டிருப்பார்களா?

வெறுமனே ஊடக மையத்தில் உரையாற்றுவதும், சமூக வலைத்தளங்களில் பத்திரிகை துணுக்குகளை வெட்டி ஒட்டி அரசியல் செய்வதும் எதற்காக? தமிழ் மக்களின் எதிர்த்தரப்பை பலப்படுத்தி, தமிழ் மக்களின் இலட்சிய பயணத்தை பலவீனப்படுத்தவா? தமிழர்களின் எல்லா செயற்பாடுகளையும் குழப்பி, தலமைகளை சிதைத்து, தமிழர்களை பின்நோக்கி இழுக்க விரும்புகிறார்களா? இதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாக இருக்கின்றதா? ஆனால் அது மாத்திரம் ஒருபோதும் நிகழாது.

அன்றைக்கு ஈழத்தில், தலைவர் அவர்கள், இந்திய கலைஞர்கள், திரைக்கலைஞர்கள், தலைவர்களை எல்லாம் ஈழம் வரவழைத்து சந்தித்து அவர்களின் ஒத்துழைப்புக்களை கேட்டார். உறவுகளை பலப்படுத்தினார். ஆனால் இன்று தமிழகத்துடனான உறவையும் அதன் ஆதரவுக் குரலையும் அற்பத்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தி, எல்லாவற்றையும் நாசப்படுத்த முனைபவர்கள், யாருக்கு எதிரான, யாருக்கு ஆதரவான செயலை செய்ய முனைகின்னறனர் என்பதை ஈழத் மக்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது வெளிப்படையானது.

தமிழ்க் குரலுக்காக தாயகன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )