சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / ‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல!’
பாலா1
பாலா1

‘ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவதல்ல!’

“ராஜதந்திரம் என்பது மீண்டும் தொடங்கிய இடத்திற்கேவருவதல்ல” – என்பாராம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தத்துவ ஆசிரியராக இருந்த அன்ரன் பாலசிங்கம். ஒருமுறை அரசியல் தொடர்பில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் புதுவை இரத்தினதுரை இதனை என்னிடம் கூறினார். எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஜெனிவா அமர்க்களம் ஆரம்பிக்கப் போகின்றது. இனிவரப் போகும் இரண்டு மாதங்களுக்கும் இதுதான் கதையாக இருக்கப் போகின்றது. இலங்கைக்கான இங்கிலாந்து தூதுவர், சம்பந்தன் மற்றும் சுமந்திரனை திடீரென்று சந்தித்திருக்கின்றார். நிச்சயம் அது ஜெனிவா தொடர்பான உரையாடல்தான். அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிவிட்ட நிலையில், இலங்கை தொடர்பான விடயங்களை இங்கிலாந்தே கவனித்துவருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விடயங்கள் இங்கிலாந்தின் தலைமையிலேயே மேற்கொள்ளப்படப் போகின்றன. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே தூதுவர், சம்பந்தனை சந்தித்திருக்கின்றார். இதில் சம்பந்தனுடனான சந்திப்பு என்பது சம்பிரதாய பூர்வமான ஒன்று மட்டுமே. இது தொடர்பான விடயங்கள் அனைத்தையும் சுமந்திரன் ஊடாகவே அவர்கள் கையாளுவர்.

கோட்டபாய ராஜபக்ச பெருவாரியான சிங்கள மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கின்ற நிலையில், எதிர்வரும் மே-மாதமளவில் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் – அதிலும் முக்கியமாக ராஜபக்சேக்களின் தலைமையிலான பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலக்குவைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் – மேலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்கட்சி சிக்கல்களால் பெருமளவிற்கு பலவீனமடைந்திருக்கின்ற நிலையில் – இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது தொடர்பில் மேற்குலம் மிகவும் கவனமாகவே இருக்கும். இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்களின் பிரதான தலைமை என்னும் வகையில் கூட்டமைப்பின் கருத்துக்களை அறியும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மேற்குலகோடு ஒத்துப் போவதைத் தவிர வேறு வழியெதுவும் அவர்களுக்கில்லை. முன்னைய ஆட்சியை பாதுகாக்கும் வகையிலேயே, மேற்குலகம் காலநீடிப்பை பரிசீலனை செய்தது. கூட்டமைப்பும் அதற்கு உடன்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை கூட்டமைப்பின் முடிவுகளால் மாற்றிவிட முடியாதுதான் ஆனால் கூட்டமைப்பு ஒருவேளை காலநீடிப்பிற்கு உடன்படாமல் விட்டிருந்தால், அதுநிச்சயம் மேற்குலகிற்கும் ஐ.நாவிற்கும் ஒருதெளிவான செய்தியை கொடுத்திருக்கும். கூட்டமைப்பின் விருப்பு வெறுப்புக்களை மீறியும் காலநீடிப்பு வந்திருக்கும் ஆனால் அதில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு இருக்கின்றது என்னும் விடயம் பதிவாகியிருக்கும். அது இந்த விடயத்தில் கரிசனை காண்பித்த நாடுகளுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக்கும் ஒரு நெருக்கடியை கொடுத்திருக்கும். ஆனால் கூட்டமைப்பு இந்த வகையான சிக்கல்களுக்கு இடமளிக்காமல் மேற்கு எதைக் கூறியதோ அதனை அப்படியே விழுங்கிக்கொண்டது.

இப்போது முற்றிலும் புதிய அரசியல் சூழல் நிலவுகின்றது. எந்த யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரணைவேண்டு மென்று கூறப்பட்டதோ– அந்த யுத்தத்தை வெற்றி நோக்கி வழிநடத்திய ஒருவரே இப்போது இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக இருக்கின்றார். எந்த சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டதோ அந்த இராணுவத்திற்கு உத்தரவிட்ட ஒருவரே இப்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவர் இதனை ஏற்றுக் கொண்டால் – அவர் தன்னையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு ஒப்பானது. எனவே அதனை அவர் ஒருபோதுமே செய்யப்போவதில்லை. இந்தபின்னணியில் நோக்கினால், மார்ச்சில் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வை கோட்டபாய எவ்வாறு எதிர்கொள்ளுவார் என்பதில் விவாதிக்க ஒன்றுமில்லை. கோட்டபாய ஒருபோதுமே இராணுவத்தின் மீதான  குற்றச்சாட்டுக்களை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதேவேளை முன்னைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த பிரேரணையை அமுல்படுத்தும் பொறுப்பையும் கோட்டபாய தலைமையிலான அணி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. கோட்டபாய தேர்தல் காலத்தில் எதைக் கூறினாரோ அதனைத்தான் அவரது அணி ஜெனிவாவில் கூறும். மேற்குலகை பொறுத்தவரையில் அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்திற்கு பதிலளிக்கும் தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்றவாறான ஒரு அறிவிப்பைச் செய்யும். இந்த அறிவிப்பு வழமையான ஒன்று. இதனை கேட்டும் கேட்காமலும் அரசாங்கம் அதன் நிகழ்ச்சி நிரலில் பயணிக்கும். இதுதான் நடக்கப் போவது.

இந்தநிலையில் தமிழர் தரப்பு எவ்வாறு விடயங்களை கையாளப் போகின்றது? உண்மையிலேயே தமிழர் தரப்பிடம் அதற்கான வேலைத்திட்டங்களும் ஆற்றலும் இருக்கின்றதா? கொழும்பிடம் ஒரு ராஜதந்திர படையணி உண்டு. மிகவும் வளர்ச்சியடைந்த ராஜதந்திரக் கட்டமைப்பு உண்டு. தமிழர்களிடம் என்ன இருக்கின்றது? இங்கு தமிழர்கள் என்பதால் வெறுமனே வடக்கு கிழக்கில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கட்சிகளை மட்டும் குறிப்பிடப்படவில்லை மாறாக, ஜரோப்பிய நாடுகள் தோறும் சிதறிக்கிடக்கும் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகின்றேன். ஒவ்வொரு மார்ச்சிலும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிடுவது – ஐ.நா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் கோசம் போடுவது–பக்க நிகழ்வுகளை நடத்துவது–தாயகத்திலிருந்து ஒரு சிலரை வரவழைத்து அங்கு பேசச்செய்வது. இதற்கு அப்பால் என்னநடந்தது? இவ்வாறான விடயங்கள் மூலமாக ராஜதந்திர சமூகத்தை கவர முடியவில்லை என்பதுதானே கடந்த பத்து வருட காலபட்டறிவு. கடந்த பத்து வருடங்களாக செய்தவற்றையே இனியும் செய்து கொண்டிருப்பதில் என்ன பயன்?

சிங்கள ராஜதந்திரம் தனது ஆற்றலை பல தசாப்பங்களாக நிரூபித்து வருகின்றது. ராஜதந்திர அணுகுமுறைகளை ராஜதந்திர வழிமுறைகளின் ஊடாகத்தான் அணுகமுடியும். ஆனால் ஒரு அரசிற்கும், அரசல்லாத மக்கள் கூட்டத்திற்குமான ராஜதந்திர வாய்ப்புக்கள் ஒரே மாதிரியானதல்ல. எனவே அரசாங்கத்தை ஜெனிவாவில் எதிர்கொள்ளுதல் என்பது சாதாரமாண ஒருவிடயமல்ல. ஏனெனில் தமிழர்கள் என்னதான் பேசினாலும் கூட ஜெனிவா என்பது தமிழர்களுக்கான அரங்கல்ல ஏனெனில் அது நாடுகளுக்கான அரங்கு. நாடுகளின் அரங்குகளில் நாடுகளின் ஊடாகத்தான் நாம் பேசமுடியுமே அன்றி நாம் நமக்காக பேசமுடியாது. நாடுகளும் அதன் நலன்களை விட்டுவிட்டு, எங்களுக்காக பேசாது. இதனை வாசிக்கும் போது உங்கள் மத்தியில் ஒரு கேள்வி எழலாம் – அதாவது, எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு இடத்திலும் எங்களால் நிற்கமுடியாதுபோலத் தெரிகிறதே என்று நீங்கள் யோசிக்கலாம். அது உண்மை ஆனால் ஒரு புத்திபூர்வமான தமிழ் தலைமுறை தன்னை அர்ப்பணித்து உலகெல்லாம் உழைக்கத் தயாராக இருந்தால் சில வேளைகளில் புதிய வழிகளை காணலாம்.

உலகளாவிய சிவில் சமூகப் பரப்பிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினை ஓங்கியொலிக்க வேண்டும். இந்த வழியில் எங்களுக்காக நாங்கள் மட்டுமே பேசாது ஜரோப்பியர்களும் எங்களுடன் நிற்கவேண்டும். அவ்வாறானதொரு உலகளாவிய வலையமைப்பை எங்களால் ஏற்படுத்த முடிந்தால் இதில் ஓரளவு முன்னோக்கிப் பயணிக்கமுடியும்.அதற்கு மற்றவர்கள் எங்களின் பக்கம் நியாயம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கேற்றவாறு எங்களது செயற்பாடுகளும் அமையவேண்டும். இப்போது எதிர்வரும் மார்ச்சை இலக்குவைத்து, ஜரோப்பா முழுவதும் அனைத்துப் புலம்பெயர்தரப்புக்களும் ஒன்றுபட்டு, மாபெரும் ‘பத்துவருட கால ஏமாற்றம்’என்னும் தொனிப் பொருளில் பெருமெடுப்பிலான ஒரு பேரணியை ஜரோப்பிய வீதிகள் தோறும் ஒரேநேரத்தில், நன்கு திட்டமிட்டு, அந்தந்த நாட்டு மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் மேற்கொள்ளலாம். ஆனால் அது எழுதுவதுபோன்று இலகுவானதல்ல. ஒருவேளை இது இடம்பெற்றால் மார்ச்சில் மேற்குலகம் எடுக்க இருக்கும் முடிவை ஒருவேளை அவர்கள் மறுபரிசீலனை செய்யக் கூடும். அத்துடன் இது கூட்டமைப்புக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். உலகெங்கும் இந்த விடயம் ஒலிக்கப்படும் போது, எவ்வாறு நாம் இதில் பாராமுகமாக இருக்கமுடியும் என்னும் நெருக்கடியை கூட்டமைப்பு எதிர்கொள்ளும். இதுதொடர்பில் ஒருவிரிவான உரையாடலுக்கு புலம்பெயர்அமைப்புக்கள் தயாரா? இது தொடர்பில் மேலதிக உரையாடலுக்கு  இந்தக் கட்டுரையாளர் தயாராக இருக்கின்றார்.

-தமிழ்க் குரலுக்காக கரிகாலன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Sreetharan

வடக்கில் ஒரு கருணா!

இப்போது இலங்கைத் தீவில் இரண்டு நபர்களைப் பற்றிய பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன. அந்த இரண்டு நபர்களும் விடுதலைப் ...