உலகளாவிய அரசியல் நிலைமையும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்

question mark rednyellow
question mark rednyellow

உலகெங்கும் கடும் போக்கான தலைவர்கள் எழுச்சியடைந்து வருகின்றனர். அவ்வாறான தலைவர்களின் பின்னால்தான் மக்களும் செல்கின்றனர். இது ஒரு அரசியல் போக்காகவும் எழுச்சியடைந்து வருகின்றது. அமெரிக்காவில் டொனால்ட் ரம்ப், ரஸ்யாவில் விளாடிமீர் புட்டின், இங்கிலாந்தில் பொரிஸ் ஜோன்சன் இந்தியாவில் மோடி  என சக்தி வாய்ந்த நாடுகள் கடும்போக்கான தலைவர்களின் வசமாகியிருக்கின்றது. அதே வேளை இவ்வாறான தலைவர்கள் இதுவரை அந்த நாடுகள் தூக்கிப்பிடித்த மனித உரிமை வாதங்கள் தொடர்பில் எதிர்மறையான பார்வையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். டொனால் ரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து மனித உரிமைகள் பேரவை பெருமளவிற்கு பலவீனமடைந்திருக்கின்றது. இந்தப் போக்கு பெருமளவிற்கு மனித உரிமைகள் மீதான உலகளாவிய கரிசனையையும் கடுமையாகப் பலவீனப்படுத்தியிருக்கின்றது.

இந்தப் போக்கின் தொடர்ச்சியாக தனிச் சிங்களப் பெரும்பாண்மையின் ஆதரவுடன் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். தெற்காசியாவின் பெரியண்ணனான இந்தியாவில் மோடி தலைமையிலான பி.ஜே.பி தனித்து ஆட்சியமைத்திருக்கின்றது. அதேபோன்றதொரு நிலைமை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கையிலும் ஏற்படலாம். இந்தியாவிற்கும் தற்போது இலங்கையில் காணப்படும் அரசியல் நிலைமைக்கும் இடையில் சில ஒத்த பண்புகள் காணப்படுகின்றன. அதாவது, இரண்டு நாடுகளிலும் சிறுபான்மையினரின் ஆதரவின்றியே ஆட்சியைக் கொண்டு நடத்தக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. இந்தப் போக்கில் சில ஆபத்துக்கள் உண்டு. தாம் நினைப்பவற்றை எதிர்ப்பின்றி மேற்கொள்வதற்கான அதிகாரத்தை ஆட்சியாளர்கள் பெற்றுவிடுவர். உலகளவிலும் இதற்கான ஆதரவு காணப்படுகின்றது. இவ்வாறான வலுவான தலைவர்கள் அந்த நாட்டில் சில விடயங்களை முன்னெடுக்கும் போது, அதனை தங்களின்  நலன்களுக்காக கண்டும் காணமல் விடுவதற்கான புறச் சூழலே தற்போது காணப்படுகின்றது. உதாணரமாக மோடி தலைமையிலான இந்திய அரசு அண்மையில் மேற்கொண்ட இரண்டு விடயங்கள் உலகளவில் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. காஸ்மீருக்கு  இதுவரை கொடுத்து வந்த சட்ட அதிகாரத்தை மோடி அரசு அண்மையில் இல்லாமலாக்கியது. அதேபோன்று இஸ்லாமியர்களை இலக்குவைத்து அண்மையில் அறிமுக்கப்படுத்திய குடியுரிமை சட்டமூலம்.

இந்த இரண்டு தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்களை மோடி கருத்தில் கொள்ளவில்லை. தங்களுக்கிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு தாங்கள் நினைப்பவற்றை அவர்கள் செய்துவருகின்றனர். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இப்போது இவற்றை எதிர்க்கும் காங்கிரஸ் ஒருவேளை நாளை ஆட்சிக்கு வந்தாலும் இந்த சட்ட மூலங்களை நீக்கமுடியாமல் போகும் ஏனெனில் அதற்கு காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறவேண்டும். ஆனால் அது முடியாத காரியம். பி.ஜே.பியை திரைமறைவிலிருந்து இயக்கும் மூளையான ஆர்.எஸ்.எஸ் இதனை இலக்காகக் கொண்டுதான் இந்த விடயங்களை செய்கின்றது. தாங்கள் மிகவும் பலமாக இருக்கின்றபோதே இந்தியாவில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் முக்கியமாக, இந்தியா ஒரு  இந்து நாடு என்பதை நிலைநாட்டும் வகையில் அதற்கான சில வலுவான அடித்தளங்களைப் போடவேண்டும். அதன் பின்னர் பி.ஜே.பி ஆட்சியில் இல்லாது போனாலும் கூட, அது ஒரு பிரச்சினையல்ல. இந்த அடிப்படையில்தான் மோடி ஒவ்வொரு விடயங்களையும் நன்கு திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றார். அதற்காக தங்களிடம் இருக்கும் பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்துகின்றார். மாநிலக் கட்சிகளில் தங்கியிருக்காமையால்தான் மோடியால் இவற்றை தடையின்றி செய்ய முடிகின்றது. ஒருவேளை மாநில கட்சிகளில் பி.ஜே.பி தங்கியிருந்திருந்தால் மோடியால் தான் நினைத்தவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும்.

இலங்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் புதிய அரசாங்கம் நிச்சயம் முயற்சிகளை மேற்கொள்ளும். உதாரணமான 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் சில மாற்றங்களை அவர்கள்  செய்ய முயற்சிப்பர். இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டாயம் தேவைப்படும். அதனை இலக்குவைத்தே அடுத்தநாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த அணி காய்களை நகர்த்தும்.

இந்த பின் புலத்தில் தமிழர் அரசியல் பெருமளவிற்கு போகுமிடம் தெரியாத ஒரு நிலைக்கே ஆளாகும். தமிழர் அரசியல் வெறுமனே இந்திய தூதரகத்திற்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் தூதுவிடும் அரசியலாகவே சுருங்கிப் போகலாம். இதற்கு  முக்கிய காரணம் – தமிழர்கள் மத்தியில் ஒருவலுவான தலைமை இல்லை. இதுவரை தமிழ் மக்களின் தலைமையைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக அரசியல் வேலைத்திட்டத்தை கொண்டிருக்கவில்லை. ஒரு அரசியல் வழி வரை படத்தை கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக அலுவலகர்கள் போன்றே சுமந்திரனும் சம்பந்தனும் செயற்பட்டுவந்தனர். இதன் காரணமாக கூட்டமைப்பு அதன் தனித்துவமான தலைமையை முற்றிலுமாக இழந்துவிட்டது. இன்று ரணில் போகுமிடம் தெரியாமல் நிற்கும் போது, கூட்டமைப்பும் அதனுடன் இணைந்து போகுமிடம் தெரியாமல் நிற்கின்றது.

கூட்டமைப்பின் நிலைமை இதுவென்றால், கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு பலமான அரசியல் கூட்டை உருவாக்கலாம் என்னும் நம்பிக்கையும் இதுவரை பெருமளவிற்கு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் விடயங்களை உணர்ச்சி வசப்படாமல் நோக்கினால் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய நிலையில் இல்லை. இதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம்? இது எழுதுவது போன்று, பேசுவது போன்று இலகுவான விடயமல்ல. ஏனெனில் தமிழ்த் தேசிய அரசியல் வெறுமனே நாடாளுமன்றப் பதவிப் போட்டிக்குள் சிக்கிவிட்டது. இலங்கையின் நாடாளுமன்றத்திற்குச் சென்று, இந்தச் சவாலை எதிர்கொள்ளலாம் நினைப்பது முற்றிலும் ஒரு ஏமாற்று நாடகமே. நாடாளுமன்றத்தைச் சில விடயங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக கைக்கொள்ளலாமே தவிர, அது தமிழர்களுக்கான ஒரு சர்வலோக அரசியல் நிவாரணியல்ல. ஆனால் இன்று கூட்டமைப்பும் சரி, அதனை எதிர்த்துநிற்பவர்களும் சரி, அனைவருமே இலங்கையின் நாடாளுமன்றம்தான் தமிழர்களுக்கான தீர்வை தரப்போகும் சர்வலோக நிவாரணி என்பதுபோலவே செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் அனைத்துத் தரப்புக்களுமே பலவீனமாகவும் அடுத்தகட்டம் என்ன – எதை நோக்கி என்பதில் தெளிவற்றவர்களாகவே இருக்கின்றர். அரசியல் கட்சிகள் மீது அழுத்தம் கொடுக்கப் போகின்றோம் என்று கூறிய சிவில் சமூகத் தரப்புக்கள் அனைத்துமே 2019இல் மோசமான தோல்வியையை பதிவு செய்திருக்கின்றன. ஒரு மாற்றுக்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதற்காக களமிறங்கிய தமிழ் மக்கள் பேரவை ஒரு கட்டத்துடன் முற்றிலுமாக முடங்கிவிட்டது. தமிழ் சிவில் சமூகம் என்பது ஒவ்வொரு மார்ச்சிலும் அறிக்கை விடும் அமைப்பாகச் சுருங்கிவிட்டது. விடயங்களை ஆழமாகப் பார்த்தால் அரசியல் கட்சிகளும் பலவீனமாக  இருக்கின்றன. அவற்றின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போவதாக கூறிய சிவில் சமூக குழுக்களும் வலுவற்றிருக்கின்றன. மறுபுறத்தில் புலம்பெயர் அமைப்புக்களை எடுத்து நோக்கினால், அங்கும் ஒருங்கிணைவற்ற செயற்பாடுகளும் கோஸ்டி வாதங்களுமே இப்போதும் மேலோங்கியிருக்கின்றது. பத்து வருட அனுபவங்களுக்குப் பின்னரும் கூட, எவரும் தங்களைத் திரும்பிப் பார்த்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தமிழர் அரசியல் எவ்வாறு முன்நோக்கி நகரும்.

இனிவரப் போகும் காலம் மிகவும் கடினமானதாகவே இருக்கப் போகின்றது. ஏனெனில் உலக நிலைமைகள் நமக்குச் சாதகமாக இல்லை. இவ்வாறான சூழலுக்குள் ஒரளவாவது தாக்குப் பிடிக்க வேண்டுமானால் முதலில் கடந்த பத்துவருடங்கள் தொடர்பில் ஒரு மீளாய்வு தேவை. அதன் பின்னர் அதனை அடிப்படையாக் கொண்டு ஒரு புதிய அணுமுறையுடன் கூடிய செயல் திட்டத்தை வகுக்கவேண்டும். அனைவரும் அதன் வழியில் நகரவேண்டும். வெறுமனே சாய்மனைக் கதிரைகளில் இருந்து கொண்டு தமிழீழம் வரும் என்று கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதாலோ, அல்லது கொழும்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை.

-தமிழ்க் குரலுக்காக கரிகாலன்