விக்னேஸ்வரனின் தலைமை ஏன் கட்டாயமான ஒன்று?

1 ult 1
1 ult 1


விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் கூட்டணி இன்னும் உருவாகவில்லை. அது இந்தா உருவாகிறது – உருவாகிவிட்டது – என்று பலரும் கூறிக்கொண்டாலும் கூட, இதுவரை அது முழுமை பெறவில்லை.

தற்போதும் ஒருவகையான தடுமாற்றங்களும் ஏமாற்றங்களுமே தொடர்கின்றன.


இவ்வாறானதொரு நிலையில் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்கு என்ன நடக்கும் என்னும் கேள்வியும் எழாமலில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில் அவ்வாறானதொரு கூட்டு வராமல் போனால் அடுத்தது என்ன என்னும் கேள்வியும் எழாமலில்லை.


ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் தலைமையில் இணைந்து கொள்ளக் கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான ஜங்கரநேசன், அனந்தி சசிதரன் ஆகியோர் தற்போது விக்கினேஸ்வரனுடன் இணைந்து கொள்வதில்லை என்னும் முடிவில் இருப்பதாகவே தெரிகின்றது.


இவர்கள் வெளியில் பலவாறான காரணங்களை கூறினாலும் கூட உண்மையான காரணம் வேறு என்றே அறிய முடிகின்றது.

இவர்களைப் பொறுத்தவரையில் தாங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் கூட தங்களால் வெற்றிபெற முடியாது.


தங்களது வாக்குகளால் விக்கினேஸ்வரன்தான் வெற்றிபெறப் போகின்றார்.

இந்த நிலையில் அவசரப்பட்டு விக்கினேஸ்வரனுடன் இணைந்து தோல்விடைவதை காட்டிலும், அமைதியாக இருந்துவிட்டு, காற்று அதிகம் எந்தப் பக்கமாக வீசுகின்றதோ அந்தப் பக்கமாக செல்லுவோம் என்னும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.


ஆனால் இவர்கள் வெளியில் கூறும் காரணம் வேறு. அதாவது, தங்களுக்கு சம உரிமை தரவில்லை அதனால்தான் தாங்கள் இதில் பங்குகொள்ள விரும்பவில்லை என்றவாறே கூறிவருகின்றனர்.


ஆனால் இவ்வாறானவர்கள் தமிழரசு கட்சியுடன் இருக்கின்ற போது, அங்கு இவர்கள் சம உரிமையின் அடிப்படையிலா இருந்தனர் என்று யோசிக்கத் தயாரில்லை.

இவர்களின் கதை இதுவென்றால், அடுத்தது அண்மையில் ரெலோவிலிருந்து பிரிந்து வந்த சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரின் கதை வேறு.


இவர்களைப் பொறுத்தவரையில் தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் விக்கினேஸ்வரனுடன் இணைவோம் இல்லாவிட்டால் ஆனந்தசங்கரியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டிடுவோம் என்னும் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர்.


ஆக மொத்தத்தில் இவர்கள் எவருமே விக்கினேஸ்வரனுடன் கொள்கை அடிப்படையில் இணைய விரும்பவில்லை மாறாக, தேர்தல் தேவைக்காக விக்கினேஸ்வரனை ஒரு ஏணியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கின்றனர்.


இந்தப் போக்கினால் விக்கினேஸ்வரன் தரப்பினர் அதிருப்திடைந்திருக்கின்றனர்.

மேலும் இவர்கள் விக்கினேஸ்வரனுடன் இணைவதால் விக்கினேஸ்வரனுக்கு நன்மையில்லை மாறாக, நஸ்டம்தான் அதிகம் என்று கூறுவோரும் உண்டு.


ஏனெனில் இவர்களுக்கென வடக்கில் பிரத்தியேக வாக்கு வங்கியில்லை.


தற்போதுள்ள நிலையில் விக்கினேஸ்வரனுடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஒருவராக சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டுமே இருக்கின்றார்.


ஆனாலும் இதிலும் சில இழுபறிகள் காணப்படுகின்றன. விக்கினேஸ்வரன் ஒரு விடயத்தி;ல் தெளிவாகவும் மிகவும் உறுதியாகவும் இருக்கின்றார்.


அதாவது, கூட்டை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர், ஒரு புதிய மத்திய குழுவை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்.


அந்த மத்திய குழுவே இந்த தேர்தல் கூட்டை வழிநடத்தும். அதன் தலைவராக விக்கினேஸ்வரன் இருப்பார்.


இதனை ஏற்றுக் கொள்வதிலும் சில இழுபறிகள் காணப்படுகின்றன.
சிலரை பொறுத்தரையில் இதனை தேர்தலின் பின்னர் பார்க்கலாம் என்கின்றனர் ஆனால் விக்கினேஸ்வரனோ தேர்தலுக்கு முன் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.


இவ்வாறானதொரு நிலையில் விக்கினேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வாய்புக்களே காணப்படுகின்றன.


இந்தப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதற்கான பதில் எவரிடமும் இல்லை.


அதே வேளை சம்பந்தனுக்கு அடுத்த தலைவராக தன்னை முன்னிறுத்துவதற்கான கடுமையான முயற்சிகளில் சுமந்திரன் ஈடுபட்டு வருகின்றார்.


இதற்காக தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகளை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்றார்.

அண்மையில் வலிகாமத்தில் மாவை சோனதிராஜாவுக்கே தெரியாமல் ஒரு இரகசிய கூட்டத்தை சுமந்திரன் ஏற்பாடு செய்திருக்கின்றார்.


அதனை கேள்வியுற்ற மாவை அதனை தடுத்து நிறுத்தி, சுமந்திரனுடன் முரண்பட்டிருக்கின்றார்.


இவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரனின் தலைமையை பாதுகாக்க வேண்டிய தேவை எழுகின்றது.


விக்கினேஸ்வரன் அனைத்தையும் செய்யும் வல்லமை கொண்டவர் அவரது தலைமையில் ஒரு அணி நாடாளுமன்றம் சென்றால், தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நாங்கள் வாதிடவில்லை.


ஆனால் இன்றைய நெருக்கடியான சூழலில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதை உறுதியாக வெளிப்படுத்துவதற்கு ஒரு கம்பீரமான தமிழ் தலைமை தேவை.
அதற்கான தகுதியும் ஆளுமையும் அடையாளமும் விக்கினேஸ்வரனிடம் மட்டும்தான் இருக்கின்றது.


நீங்கள் கேட்கலாம் அதனை சுமந்திரனாலும் செய்ய முடியும்தானே! அவரும் ஆங்கிலத்தில் நன்றாக பேசுவார்தானே! நிச்சயமாக சுமந்திரனாலும் அவ்வாறு பேச முடியும்தான்.

அது உண்மைதான் ஆனால் தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அடையாளத்தை சுமந்திரன் எப்போதோ இழந்துவிட்டார்.


கடந்த ஆட்சியில் சுமந்திரன் தன்னை ஒரு ஜக்கிய தேசியக் கட்சியின் விசுவாசியாவே அடையாளப்படுத்தியிருந்தார்.
ஜக்கிய தேசியக் கட்சியின் உள் விவகாரங்களில்கூட தலையீடு செய்யுமளவிற்கு நெருக்கமானவராகவும் இருந்தார்.


அந்த வகையில் சுமந்திரன் தற்போது, அதிகம் ஒரு தமிழ் அரசியல் வாதியென்பதை விடயும் ஒரு அரசியல் பேரம்பேசி என்பதாகவே அடையாளம் பெற்றிருக்கின்றார்.


இவ்வாறானதொரு பின்புலத்தில் சுமந்திரன் இனியும் தமிழ்த் தேசிய அரசியலில் குரலாக இருக்கும் தகுதியுடன் இல்லை.
இந்தப் பின்புலத்தில்தான் ஒரு வலுவான மாற்றுக் குரல் தேவைப்படுகின்றது.


கூட்டமைப்புக்கு வெளியில், அவ்வாறானதொரு குரலாக இருக்கக் கூடிய தகுதிநிலையோடு விக்கினேஸ்வரன் ஒருவரே இருக்கின்றார்.
விக்கினேஸ்வரன் கூட்டாக தேர்தலை எதிர்கொண்டாலும் சரி அல்லது, சில காரணங்களால் தனித்து தேர்தலை எதிர்கொண்டாலும் சரி, அவரது தேர்தல் வெற்றி தமிழ் மக்களுக்கு இன்றியமையாத ஒன்று.


இதனை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டிய, பணியாற்ற வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் ஈழத்திலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களுக்கும் உலகெங்குமுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களுக்கும் உண்டு.


விக்கினேஸ்வரனையும் அவரோடு நிற்பவர்களையும் அதி கூடிய வாக்குகளில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமாயின் அதற்கு பெருமளவான நிதிபலமும் தேவை. ஏனெனில் சுமந்திரனின் தலைமையிலுள்ள அணியினருக்கு தமிழ்த் தேசிய விரோதிகள் அதிகம் பணத்தை இறைக்கலாம்.


முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் உலக நிலைமைகள் தொடர்பில் உங்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.


உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் எவ்வாறு வீரியமான துணிவான தலைவர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டிருக்கின்றனர் என்பதை தெளிவுபடுத்தியிருந்தேன்.


அதன் தொடர்சியாக சிங்கள மக்களும் தங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தலைவர் தேவை என்னும் அடிப்படையில் கோட்டபாயவை தெரிவு செய்திருக்கின்றனர்.


ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குபவர்களை உற்றுப் பாருங்கள்.


அவர்களது தளதளத்துப்போன, கம்பீரமற்ற பேச்சுக்களை கவனியுங்கள். சிங்களவர்களோ பலம்மிக்க தலைவர்களுடன் நிற்கின்ற போது, தமிழ் மக்கள் மத்தியிலோ, தங்கள் கருத்துக்களை துணிந்து கூறும் திராணியற்றவர்களே தலைவர்களாக வலம் வருகின்றனர்.


விடயங்கள் நடக்கின்றனவா அல்லது இல்லையா என்பதல்ல இங்கு முக்கியம் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது அது இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது இலங்கைக்குள்ளும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தால்தான், தமிழர்கள் இலங்கைத் தீவின் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்னும் நிலைமையை பேணிப் பாதுகாக்கலாம்.


அதற்கு துணிந்து குரல் கொடுக்கும் ஒரு தலைமை மக்கள் மாத்தியில் கம்பீரமாக இருக்க வேண்டும்.


கூட்டமைப்பு அந்த இடத்தை தவறவிட்டுவிட்டு, வெறுமனே நாடாளுமன்ற கதிரைகளை மட்டுமே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது என்னும் ஒரேயொரு காரணத்தினால்தான் ஒரு வலுவான தலைமை தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றோம். இன்றைய நிலையில் அவ்வாறானதொரு தலைமைக்கான தகுதியுடன் விக்கினேஸ்வரனை விடவும் தகுதியுள்ள ஒருவர் இருக்கின்றாரா?

-தமிழ்க் குரலுக்காக கரிகாலன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. -ஆசிரியர்பீடம் )