தமிழரசுக் கட்சியால் மோசமாக அவமானப்படுத்தப்பட்ட டெலோ! சுமந்திர திட்டத்தின் முதல் பாகம் அரங்கேற்றம்

ulveedu 1
ulveedu 1

ஒற்றுமை தொடர்பில் சுமந்திரன் அவ்வப்போது ஏனையவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கின்றார் . விக்னேஸ்வரன் ஒற்றுமையை குலைக்கின்றார் என்றும் பேசிக்கொண்டிருந்தார் . ஆனால் உண்மையில் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் யார் என்பது மீண்டும் சந்திக்கு வந்திருக்கின்றது. கூட்டமைப்பில் வேறு வழியின்றி இழுபட்டுக்கொண்டிருக்கும் டெலோவும் புளொட்டும் இம்முறை கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்தன. இம் முறை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் இருப்பதால் தங்களை முன்னரைப் போன்று அவமானப்படுத்தமாட்டார்கள் – தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள் என்றெல்லாம் அப்பாவி பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் நம்பிக்கொண்டிருந்தன.

ஆனால் அந்த நம்பிக்கை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் மிகமோசமான தலைகுனிவை டெலோ சந்தித்திருக்கின்றது. டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மிகவும் மோசமாக அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் கூட்டமைப்பின் பெயரளவு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஒவ்வொரு கட்சிகளினதும் வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டது. இதில் புளொட் தலைவர் சித்தார்த்தன் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தனர். இதன்போது டெலோவின் தலைவர் அம்பாறை மாவட்டத்திற்கான வேட்பாளராக ஏற்கனவே டெலோவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோடீஸ்வரனின் பெயரை கொடுத்திருக்கின்றார். அப்போது குறுக்கிட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா – அவர் எங்களுடைய வேட்பாளர் என்று கூறியிருக்கின்றார். ஆத்திரமடைந்த செல்வம் அடைக்கலநாதன் – என்ன கூறுகின்றீர்கள் – அவர் எங்களுடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்று சத்தமிட்டிருக்கின்றார். அதற்கு பதிலளித்த மாவை, அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எங்களுடைய கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று கூறியிருக்கின்றார்.

இது தொடர்பில் நீங்கள் பேசவேண்டுமென்றால் அவருடன்தான் பேசவேண்டும் என்று கூறி செல்வத்தின் வாயை அடைத்திருக்கின்றார். அந்த இடத்திலிருந்தே கோடீஸ்வரனை தொலைபேசியில் தொடர்புகொண்ட செல்வம் – நீ எல்லாம் ஒரு மனிசனாடா–அயோக்கியனே என்று ஏசியிருக்கின்றார்.

இதுதானா சுமந்திரன் கூறும் கூட்டமைப்பின் ஒற்றுமை? தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஓடிவருபவர்கள், தாங்கள் என்னசெய்தாலும் அதனை எதிர்த்து பேசாதவர்கள், அப்படியான டெலோவின் நாடாளுமன்ற உறுப்பினரை எவ்வித கூச்சமும் வெட்கமும் இல்லாமல் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் தமிழரசு கட்சி எவ்வாறு விக்கினேஸ்வரனையும் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் நடத்தியிருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள நீங்கள் அதிகம் யோசிக்கவேண்டியதில்லையே!

சம்பந்தன்-சுமந்திரன்-மாவை ஆகிய தமிழ்த் தேசிய விரோத முக்கூட்டின், தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்தினால்தான் விக்கினேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சிலிருந்து தூக்க முற்பட்டனர். அதன் பின்னர்தான் விக்கினேஸ்வரன் விழிப்படைந்தார். தமிழ் மக்களுக்கு ஓங்கிக் குரல் கொடுக்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரு கட்சி தேவையென்று அவர் சிந்திக்கமுற்பட்டார். ஆனாலும் கூட்டமைப்பின் முதலமைச்சராக இருக்கும் வரையில் தனியான கட்சியை ஆரம்பிக்கக்கூடாது, என்னும் நேர்மையின் காரணமாகவே அவர் அமைதியாக இருந்தார். தனது பதவிக்காலம் முடிந்த மறுதினம்தான் தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்தை அறிவித்தார். இந்த நேர்மையில் ஒரு துளியாவது சம்பந்தனிடம்- சுமந்திரனிடம் – மாவையிடம் இருக்கின்றதா?

இப்போது டெலோவின் தலைவர் செல்வம் ஆவேசமாக தேர்தல் மேடைகளில் பேசிக்கொண்டிருக்கின்றார். அதாவது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் போராட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு வாக்களியுங்கள் – அதன் மூலம்தான் கூட்டமைப்பின் தலைமையை மாற்றமுடியும். டெலோ தலைவர் கூறுவது போன்று கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படத்தான் வேண்டும். அதனைத்தான் விக்கினேஸ்வரனும் கூறிவருகிறார். ஆனால் அதனை எப்படி மாற்றுவது? தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் முக்கியமாக, சுமந்திரன் ஆதிக்கம் தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் வரையில் அது சாத்தியமில்லையே! அதனை உள்ளுக்குள் இருந்து செய்யமுடியாது. என்பதால்தானே அவர்களுக்கு வெளியிலிருந்து பலமான அடியை கொடுப்பதன் ஊடாக, ஒரு மாற்றத்தை தமிழர் தேசத்திற்குள் ஏற்படுத்தலாம் என்று விக்கினேஸ்வரன் எண்ணுகின்றார். தமிழ் மக்கள் அவருக்கு கைகொடுத்தால் அது நிச்சயம் சாத்தியம். உண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டுக்குள் இணைந்திருந்தால் அதுமிகவும் இலகுவாக நிகழ்ந்திருக்கும். துரதிஸ்டவசமாக அது நிகழவில்லை.

தமிழரசுக் கட்சியின் அவமானப்படுத்தி முதுகில் குத்தும் திட்டம் டெலோவுடன் நின்றுவிடவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்ற மறுதினமே புளொட் தலைவர் சித்தார்த்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக வழங்கிய வேட்பாளரின் பெயரை தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் சித்தார்த்தனுக்கு முன்னாலேயே தூக்கி வீசியிருக்கின்றார். அவரை போடமுடியாது. உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று கூறியிருக்கின்றார். அதாவது, கூட்டமைப்புக்குள் இருக்கும் ஒரு பங்காளிக் கட்சியின் தலைவர் தான் விரும்பும் ஒரு வேட்பாளரை நிறுத்தமுடியாமல் இருக்கின்றது. இதுதானா கூட்டமைப்பின் ஒற்றுமை. இப்படியான ஒரு தலைமையா தமிழ் மக்களுக்குத் தேவை? தெற்கிலுள்ள சிங்கள கட்சிகளுக்குள் கூட இது போன்ற அசிங்கமான காரியங்கள் இடம்பெறுவதில்லை. இப்படிப்பட்ட தமிழரசுக் கட்சி எப்படி தமிழ் மக்களுக்கு நேர்மையாக இருக்கும்?

அவமானங்களைத் தொடர்ந்து டெலோவும் புளொட்டும் தங்களுக்குள் பேசியிருக்கின்றன. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவோமா என்றும் ஆலோசித்திருக்கின்றனர். ஆனாலும் அதற்கான கால அவகாசம் இல்லாமையால் அவமானங்களை சகித்துக்கொண்டு இழுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்னும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். டெலோவிலிருந்து சிறிகாந்தா அணி வெளியியேறியிருப்பதால் டெலோ ஏற்கனவே பலவீனமடைந்திருக்கின்றது. புளொட்டின் நிலைமையும் அதுதான்.

கிடைக்கும் தகவல்களின்படி இம்முறை தேர்தலில் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரை தோற்கடிக்கும் ஒரு இரகசிய திட்டம் சுமந்திரனிடம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதன் முதல் கட்டம்தான் டெலோவின் நாடாளுமன்ற உறுப்பினரை தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கி டெலோவை பலவீனப்படுத்தியமை. அதேபோன்று மட்டக்களப்பில் புளொட் கொடுத்த வெற்றிபெறக் கூடிய வேட்பாளரை தவிர்த்தமை. இருவரும் கூட்டமைப்புக்குள் இருக்கின்றபோதே தோற்கடிக்கப்பட்டால் அதன் பின்னர் அவர்களது கட்சி கூட்டமைப்பு வெளியில் உருத்தெரியாமல் போய்விடும். இதுதான் சுமந்திர திட்டம்.

ஒப்பீட்டடிப்படையில் மாவை சேனாதிக்கு அடுத்த நிலையில் மூத்த தலைவராக புளொட் தலைவர் சித்தார்த்தனே இருக்கின்றார். அதற்கு அடுத்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன் இருக்கின்றார். இவர்களோடு ஒப்பிட்டால் சுமந்திரன் அனுபவத்திலும் அரசியலிலும் மிகவும் குறைந்தவர். ஆனால் தனது வேலைத்திட்டங்களினால் மிகவும் வேகமாக செல்வாக்குமிக்க ஒருவராக உயர்ந்துவிட்டார். ஆனாலும் கூட்டமைப்பை முற்றிலுமாக தனது காலடிக்குள் வைத்துக்கொள்ளவேண்டுமாயின் அதற்கு முன்னாள் போராட்ட இயங்கங்களைச் சேர்ந்தவர்கள் எவருமே இருக்கக்கூடாது என்று சுமந்திரன் ஒரு திட்டத்தை வகுத்திருப்பதாகவே தெரிகின்றது.

இவர்கள் இருந்தால் சம்பந்தனுக்குபிற்பட்டகாலத்தில் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கும் எனவே அதனை சம்பந்தன் இருக்கின்றபோதே சரிசெய்துவிடவேண்டும் என்று சுமந்திரன் கணக்குப்போடுகின்றார். அதாவது ஒருகல்லில் பலமாங்காய்கள் விழுத்தும் திட்டம் சுமந்திரனின் திட்டம்.

அதாவது, தமிழரசுக் கட்சிக்குள் புதியவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதன் ஊடாக தமிழரசுக் கட்சிக்குள் தனது பிடியை பலப்படுத்துவது–அடுத்து கூட்டமைப்பிலிருந்து பங்காளிகளை தேர்தலில் தோற்கடிப்பதன் ஊடாக வெளியேற்றுவது அதன் பின்னர் தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பாகவும் தொழிற்படும். இறுதியாக மாவையை கூட்டமைப்பின் தலைவராக்கிவிட்டு, தமிழரசுகட்சியின் தலைமைப் பொறுப்பை தான் எடுத்துக்கொள்வது. இதுதான் சுமந்திரனின் திட்டம். இது நடந்துவிட்டால் அதன் பின்னர் சுமந்திரனை தமிழ் அரசியலிருந்து அகற்றுவது இயலாதகாரியமாகிவிடும். சுமந்திரனுக்கு ஒரு கடிவாளத்தை போடவேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் சுமந்திரனை ஓரங்கட்டக்கூடியவரான விக்கினேஸ்வரன் இருக்கவேண்டும். இதனை விளங்கிக்கொண்டதால்தான் விக்கினேஸ்வரனை எப்பாடுபட்டேனும் தோற்கடிக்கவேண்டும் என்பதில் சுமந்திரனும் அவரது அணியினரும் தொடர்ந்து மக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

-தமிழ்க் குரலுக்காக கரிகாலன்-

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )