சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?
samakaalam
samakaalam

தலைமைப் பதவிக்காக சக உறுப்பினர்களை பலியாக்கும் சுமந்திரன்?

தலைமைப் பதவிக்காக கட்சி உறுப்பினர்களை பலியாக்கும், தம்மை அரசியலுக்கு அழைத்து வந்த தலைவர்களின் உணவிலே விசம் வைக்கும் அரசியல்வாதிகளை தமிழக திரைப்படங்களிலும் தமிழக அரசியலிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் உன்னதமான ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த மண்ணில் அத்தகைய அதிர்ச்சிகரமான முயற்சிகள் நடப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மனதை நடுங்க வைக்கும் மிக கேவலமான அரசியல் சூழ்ச்சிகள் இந் நாடாளுமன்றத் தேர்தலில் இடம்பெறுவது மக்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றியதுதான் இந்தப் பத்தி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர், ஆபிரகாம் சுமந்திரன் குறித்து மக்கள் நன்கு அறிவர். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைப் போலவே மனதாலும் செயலாலும் சிங்கள மனநிலையைக் கொண்ட அம்பிகா சற்குணநாதனையும் நளினி ரட்ணராஜாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவர முயன்றார். எனினும் இதனை தமிழ் மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். சுமந்திரனின் இச் செயலுக்கு எதிராகவும் அம்பிகா மற்றும் நளினிக்கு எதிராகவும் கடுமையாக முன் வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து அவர்கள் ‘அவுட்’ ஆகினர்.

ஆனாலும் தன் அரசியலில் ‘அவுட்’ ஆகாமல், வேறு விதமாக காய்களை நகர்த்த சுமந்திரன் முனைகின்றார். அம்பிகாவையும் நளினியையும் ‘அவுட்’ ஆக்கிய மக்களின் முன்னால், அதைவிடவும் பெரும் ஆபத்தான நபரான சுமந்திரனை ‘அவுட்’ ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இப்போது சுமந்திரனின் பிரதான இலக்கு என்ன தெரியுமா? இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியையும் கைப்பற்றுவதுதான். இதற்காக இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவை தோற்கடித்து, அதன் பின்னர் தமிழரசுக் கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது முதல் இலக்கு.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சுமந்திரன் இரகசிய திட்டங்கள் சிலவற்றையும் தீட்டியுள்ளார். சுமந்திரனுக்கு மிகவும் நெருக்கமான தமிழரசுக்கு கட்சி இளைஞரணி உறுப்பினர் ஒருவர், “மாவை சேனாதிராசா, தமிழக பாணியிலான அரசியலை முன்னெடுத்து சொத்தை சேர்ந்து வாரிசு அரசியல் செய்கிறார்..” என்று கருத்து வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் மாவை சேனாதிராசாவுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் ஆதரவாளர்கள் ஏற்படுத்தி அவரை தோற்கடிக்க முனைகின்றார் என்பதற்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிடலாம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் ஒழுங்குபடுத்திய கூட்டம் ஒன்றில் பேசிய ஊடகவியலாளர் வித்தியாதரன், சுமந்திரனை வெகுவாகப் பாராட்டினார். மாவை சேனாதிராஜாவை கடுமையாக விமர்சித்தார். அவர் சொத்து சேர்ப்பதற்காகவே அரசியலில் இருப்பதாகவும் அவர் அரசியலில் பொய்களையே பேசுவதாகவும் கூறி பார்வையாளர்களை கைதட்டச் செய்தார். தற்போது வித்தியாதரன், நின்றுபோன தனது காலைக் கதிர் பத்திரிகையை மாலைப் பதிப்பாக வெளியிடத் துவங்கியுள்ளார். அத்துடன் அப் பத்திரிகையில் மாவைக்கு எதிரான விமர்சனங்களே முதன்மையாக இடம்பெற்றுள்ளது. இது மாவையை தோற்கடிக்கும் சதியே.

மாவைக்கு எதிரான வித்தியின் இந்த வேலைகளுக்காக, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வித்தியாதரனுக்கு ஆசனம் வழங்குவதே சுமந்திரன் அளிக்கும் கூலி மற்றும் வாக்குறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. புதிய அரசியல் யாப்பு நிறைவேறாவிட்டால் பதவியை துறப்பேன் என்று சொல்லி, அதனை நிறைவேற்றாமல் பதவிச் சுகத்தில் இருந்த சுமந்திரன், மாவை சேனாதிராசாவை விமர்சிக்கவும் அகற்றவும் என்ன அருகதையைக் கொண்டவர்? இதுவரைநாளும் தமிழ் இனத்திற்கு எதிராக சதிகளை அரங்கேற்றிய சுமந்திரன் இப்போது, தனது சொந்த கட்சி தலைமைக்கு எதிராகவே சதிகளை துவங்கிவிட்டார்.

அத்துடன் சிவஞானம் சிறீதரன், சரவணபவன் முதலியோரையும் இந்த தேர்தலில் தோற்கடிப்பது அல்லது செல்வாக்கை குறைப்பது சுமந்திரனின் திட்டமாகும். விமர்சனங்களுக்கு அப்பால், மாவை சேனாதிராஜா தனது சிறு வயது முதலே தமிழர்களின் போராட்டத்திற்கு பல்வேறு பங்களிப்பை செய்து அரசியலுக்கு வந்தவர். அது மாத்திரமின்றி சரவணபவன் வெல்வதனால்கூட தமிழ்த் தேசிய அரசியலுக்கோ, கூட்டமைப்புக்கோ பெரிய பாதிப்புக்கள் இல்லை. அவர் தமிழர்களுக்கு எதிரான துரோகங்களை செய்ய துணிந்தவருமில்லை.

அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தலைவர் பிரபாகரனை தொடர்ந்தும் ஆதரித்துப் பேசுவதனால் சிவஞானம் சிறீதரனை அரசியலை விட்டு அகற்றுகின்ற சூழ்ச்சியையும் சுமந்திரன் முன்னெடுத்து வருகின்றார். அவர் மீது விமர்சனங்கள் இருக்கலாம், ஆனாலும் சில நியாயங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பது, மக்கள் மத்தியில் முன்னெடுப்பது போன்ற செயற்பாடுகள் பாராட்டதக்கவை. இவைகளுக்காக சிறீதரனை அரசியலை விட்டு அகற்ற முயலும் சுமந்திரனின் சதியே அபாயமானது. இனத்திற்கும் போராட்டத்திற்கும் எதிரானது.

வீட்டை திருத்துவதும் சுத்தப்படுத்துவதும்தான் சரியான விமர்சனமாக இருக்கும். வீட்டை எரிப்பதல்ல. சுமந்திரன் வீட்டை எரிக்க முற்படுகின்றார் என்பதே இங்கே அபாயகரமானது. அவர் உண்ட சட்டியில் இரண்டகம் விளைவிப்பவர். சுமந்திரன் தமிழ் இனத்திற்கு எதிராக மாத்திரமல்ல, கூட்டமைப்புக்கு எதிராகவும் சதி செய்பவர் என்பதை பத்தாண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்போது அவரை அழைத்து வந்தவர்களே புரிந்திருப்பார்கள்.

எனவே இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், திரு சுமந்திரனை தோற்கடிப்பது தமிழர்களின் முன்னால் உள்ள மிகப் பெரிய கடமை. தலமைப் பதவிக்காக தன் சக உறுப்பினர்களையே பலியாக்கும் சுமந்திரனை, அம்பிகா, நளினி, சாணக்கியன் போன்றவர்களைக் கொண்டு கூட்டமைப்பை நிரப்ப முயலும் சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வும் பொறுப்பும் தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு முதலில் ஏற்பட வேண்டும்.

-தமிழ்க் குரலுக்காக தாயகன்-

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Aasiriyar paarvai

பிரபா‘கரம்’ பற்றிய தமிழர்களின் ஒரே தேர்வு விக்கினேஸ்‘வரம்’

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் தமிழ் தேசம் வந்து நிற்கின்றது. 2020 – பாராளுமன்ற ...