கொரோனா இடர்கால நெருக்கடி ஈழத் தமிழருக்குப் புதிதா?

Samakaala paarvai
Samakaala paarvai

கொரோனா தொற்று இந்த உலகையே ஒரு போர்க்கால நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. மருந்துக்கு தடை, உணவுக்குத் தடை, நடமாட முடியாமல் வீடுகளுக்குள் பதுங்கியிருக்க வேண்டும் என்பன முதற்கொண்டு முழுக்க ழுக்க போர்க்கால வாழ்வை தற்போதைய சூழல் நினைவுபடுத்துகின்றது. வடக்கு கிழக்கு தமிழர்கள் அந்த அனுபவத்துடன்தான் முன்பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்கின்றனர்.

பத்து ஆண்டுகளின் முன்னர், முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. இறுதிப் போர்க்காலத்தில் மாத்திரமல்ல, ஈழத் தமிழ் மக்கள் முப்பதாண்டு காலமாக வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி, அல்லது ஒரு நாழிகைக் காலப் பகுதிதான் இப்போது உலகம் முழுவதும் பரவுகின்றது. இந்த வாழ்க்கை மிகவும் கொடியது என உலக சமூகம் ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றது.

கொரோனா தொற்று காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்கள் போர்க்காலத்தை எதிர்கொள்வதைப் போல சேமித்து வைத்துக் கொள்ளுகின்றனர். இதனால் சாதாரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து லண்டன் நகரம் வரை பூட் சிற்றிகள் பொருட்களின்றி வெறித்தோடிக் காணப்படுகின்றன. சில பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. போர்க்காலத்தைப் போல பொருட்களுக்கு தட்டுப்பாடும் காணப்படுகின்றது. சில பொருட்களை வாங்கவே முடியவில்லை.

ஆனாலும் ஈழப் போர் காலங்களின் போது பொருட்களை எவரும் பதுக்கி வைப்பதில்லை. பொருள் தட்டுப்பாடே நிலவும். உணவுக்காக அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத முள்ளிவாய்க்கால் காலத்தில், குழந்தைகள் கஞ்சிக்காக வரிசையில் நின்று செல் விழுந்து இறந்த கதைகளை நமது இனம் இன்னும் மறந்திராது. போர்க்காலத்தில் இருந்த பொருளாதார ஆதரவுணர்வு இன்றில்லை என்பதே துயரமானது. அன்றைக்கு அரிசி இல்லை என்ற போதும் கஞ்சியை காய்ச்சி பகிர்ந்துண்டும் பகிர்ந்துண்ணல் மனநிலையிருந்தது.

இதைப்போலவே மருந்துகளின் தட்டுப்பாடும் மருந்துகள் குறித்த அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது. போர்க்காலத்தில் வரக்கூடிய ஒரு சிறிய காய்ச்சலுக்கும் மருந்தின்றி தவித்திருக்கிறோம். அத்துடன் மக்கள் மீது மரணத் தாக்குதல்களை அரசு மேற்கொண்டுவிட்டு, மருந்துகளை தடை செய்து மக்களை அதன் மூலமும் அழித்திருக்கின்றது. குருதி கொட்டக் கொட்ட காயங்களுடன் தவித்த மக்களை மறக்க முடியுமா? அவ் இரக்கமற்ற மரணங்களை இன்றைய மருத்துவ நெருக்கடி நினைவூட்டுகின்றது.

போர்க்காலத்தைப் போல வடக்கு கிழக்கில் ஓமந்தை மற்றும் ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டள்ளன. ஆனால் போர்க்காலத்தில் ஆண்டுக் கணக்காக பாதைகள் மூடப்பட்டு மக்களின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டன. ஏ-9 நெடுஞ்சாலை போல உலகில் அதிககாலம் மூடப்பட்ட தெரு இருக்காது. அத்துடன் போர்க்காலத்தில்கூட மூடப்படாத கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று இழுத்து மூடப்படுகின்றது.

போர்க்காலத்தைப் போலவே மக்கள் துண்டிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளும் போக்குவரத்துகளுமே முடக்கப்படும் நிலமை உருவாகியுள்ளது. போர்க்காலத்தில் அரசால் பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டத்தை இக்காலம் நினைவுபடுத்துகின்றது. வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் அந்தக் கொடிய வாழ்வின் இன்றைய தருணங்களில் பதுங்குகுழிக்குள் மாதக் கணக்கில் முடங்கிருந்த அந்த காலம் நினைவுக்கு வராமல் இருக்க முடியாது.

கொரோனாவின் அச்சுறுத்தலின் சக பிரச்சினைகளும் போர்க்காலத்தை எமக்கு நினைவுபடுத்தினாலும் ஈழத் தமிழ் மக்கள் அன்றைக்கு அனுபவித்த துயரத்தில் ஒரு புள்ளியாககக்கூட இது இருக்க முடியாது. இந்த நெருக்கடிகளுக்கே தென்னிலங்கையும் உலகமும் சலித்துக் கொள்கின்றது. எனில் மரண மழையில், உணவுத் தடையில், மருந்துகளின்றி, காயங்களுடன் பதுங்குகுழிக்குள் முப்பதாண்டு காலம் முடக்கப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் வலி எப்படி இருக்கும்? வாழ்வு எப்படி இருக்கும்?

இந்த சூழ்நிலைகளின் வலியையும் உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் கண்டு ஈழத் தமிழர்கள் பெரும் கவலை கொள்ளுகின்றனர். தாம் அனுபவித்த துன்பங்கள் உலகில் எவருக்கும் எப்போதும் நேர்ந்துவிடக்கூடாது என்பதே அவர்தம் மன அவா. ஆனால், இந்த துயரங்களை தாங்க முடியாத உலகம், ஈழத் தமிழ் மக்கள் அனுபவித்த இன அழிப்பு யுத்த வைரஸின் முப்பதாண்டுகால தாக்குதல்களையும் அதன் வலியையும் துயரத்தையும் புரிந்துகொள்ளுவார்களா?

தமிழ்க்குரலுக்காக தாயகன்