சற்று முன்
Home / தேசத்தின்குரல் / பார்வைகள் / மருத்துவர்கள் உயிர்க்களத்தின் போராளிகள்!

மருத்துவர்கள் உயிர்க்களத்தின் போராளிகள்!

கொரோனா நோய் ஏற்படுத்திய உயிரழிவுகளின் மத்தியில், மருத்துவம் செய்வதென்பது போர் களம் ஒன்றின் நடுவே நிற்பதைப் போல இருப்பதாக இத்தாலிய மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு. யுத்தங்களின் போதும், கொள்ளை நோய்களின் போதும் மருத்துவர்கள் ஆற்றும் உயிர்காக்கும் பணி என்பது மிகவும் மகத்துவமானது.

கொரோனாவின் அச்சுறுத்தல் உலகை மிரட்டுகின்ற தருணத்தில், மருத்துவர்களின் இடையறாத பணிகள் இப் பூமியை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது.

உலகமெங்கும் உள்ள மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போர் புரிந்தபடியிருக்கும் சூழலில் நமக்கு முள்ளிவாய்க்கால் யுத்தம் கண் முன்னே வருகின்றது.

இலங்கை அரசு யுத்த்தின்போது காற்றில் விஷத்தை கலந்தது போல, மூச்சுக் காற்றின் ஊடே நோய் பரவுகின்றது.

கொட்டும் குருதியை தடுக்க கைகளால் காயங்களை பொத்திக் கொண்ட மருத்துவர்களும் அறுக்கப்பட்ட உடற்பாகங்களை கைகளில் ஏந்திய மருத்துவர்களும் நினைவில் வந்து செல்கின்றனர்.

அப்படி முள்ளிவாய்க்காலில் போராளிகளும் மருத்துவர்களும் மனித உயிர்களை காக்கச் செய்த களப் பணிகள் மனதில் தோன்றுவது தவிர்க்க முடியாது.

ஊரடங்கிய நகரத்தில் இருந்து இந்த பத்தியை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

குறுக்கும் நெடுக்குமாக இராணுவ வண்டிகள்தான் அதிகம் உலாவுகின்றன. இதற்கிடையில் மருத்துவர்களும் தாதியர்களும் மூடிக் கட்டிய முகங்களுடன் உலாவுகின்றனர்.

மருத்துவமனைகளை நோக்கி பணிக்குச் செல்பவர்களும் பணி முடித்து மங்கற் பொழுதில் வீடு செல்லுபவர்களுமாய் இருக்கிறது கிளிநொச்சி. உயிர்களை காத்துக்கொள்ளுவதற்காக உலகமே வீடுகளாய் கதவுகளை அடைத்து முடங்கியிருக்கும் இந்த அபாயத் தருணத்திலும் இவர்கள் உலவுகின்றனர்.

உலகம் எங்குமிருந்து வரும் மருத்துவர்களின் கதைகளைக் கேட்க மனம் கசிந்துருகுகிறது. கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஒன்பது மருத்துவர்கள் அந்த நோய் தாக்கி உயிரிழந்திருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

உயிர்காக்கும் பணியில் தம்மை போராளிகளாக்கி தமது உயிரை ஈர்ந்த இவர்களைப் பற்றிக் கேட்கையில் எம் மண்ணின் மருத்துவப் போராளிகள் நினைவுக்கு வருகின்றனர். இப்போது அந்த நாடு மருத்துவத்திற்காக பெரும் அலைக்கழிவிலுள்ளது.

இந்துனேசியா நாட்டில் கொரோனா தடுப்பு மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளார் மருத்துவர் ஹாதியோ அலி. மருத்துவப் பணியிலிருந்து வீடு திரும்பிய இவர், தனியாக உணவெடுத்துவிட்டு, வாசலில் நின்று தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் கையசைத்து விடைபெறும் வேளையில் அவரது மனைவி அதனைப் புகைப்படம் பிடித்தார்.

கர்ப்பணியான அந்த மனைவி பதிவு செய்த இந்த புன்னகை இறுதிப் புன்னகையானது. மருத்துவர் ஹாதியோ அலி கொரோனா களத்தில் தன்னை அர்ப்பணித்துவிட்டார்.

இதைப்போல சீனாவில் கொரோனா தடுப்பு மருத்துவப் பணி புரிந்த 29 வயதான மருத்துவர், பெங் யூன்ஹூவா இப் பணியின் போது உயிரிழந்த சம்பவம் அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆற்ற வேண்டியதால் தனது திருணமத்தை தள்ளி வைத்த பெங், இந்தப் பணியின் போது நோய்தான் உயிரிழந்திருக்கிறார். உண்மையான மருத்துவப் போராளியாக மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

ஈரான் நாட்டிலும் கொரோனாவின் அச்சுறுத்தல் மிகவும் கடுமையாக உள்ளது. அங்கும் பலத்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த மருத்துவர் ஷிரீன் ரூகானிராத் ராத், கொரோனா நோய் தாக்கி மரணித்துள்ளார்.

தன்னுடைய ஒப்பற்ற மருத்துவப் பணியினால் சுமார் 6400பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார் இந்த நாயகன். சரியான ஓய்வு, உணவு, அதிகமான வேலை நேரம் போன்ற சூழ்நிலைகளுடன் கொரோனாவின் தாக்கமும் ரூகானிராத் ராத்தின் உயிரை பறித்திருக்கிறது.

இதைப்போல பாகிஸ்தான் நாட்டிலும் கொரோனாவின் தாக்குதலுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார். பாகிஸ்தான் ஹீரோ எனப்பட்ட, உசாமா ரியாஸ் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

மிகவும் இளைய வயதைக் கொண்ட இவரது மரணம் அந்நாட்டு மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னுடைய இளமையான மருத்துவப் பணிகளின் ஊடாக  தன்நாட்டு மக்களுக்கு அளப்பெரிய பணியை அவர் ஆற்றினார்.

முகக்கவசங்களை கட்டி காயங்களும் வடுக்களும் நிறைந்த முகங்களை மிகவும் நன்றியுடன் நாம் நினைவு கூர வேண்டும். ஓய்வற்ற கடும்பணியில் உறங்க கூட நேரமில்லாமல் நோயாளிகளின் கால்மாட்டுக்களில் அவர்கள் உறங்குகின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.

சேர்த்து வைத்த சொத்துமில்லை, சொந்தமும் இல்லை. இப்போது மருத்துவர்களும் தாதியர்களும் மாத்திரமே கொரோனா நோயாளிகளின் அருகில் உள்ளனர்.

கொரோனாவால் உயிரிழக்கும் அத்தனை பேரின் இறுதி வார்த்தைகளையும் கேட்டு இறுதி யாத்திரைக்கு விடைபெற்று அனுப்பி வைப்பது இவர்களே.

இந்த மருத்துவர்களும் தாதியர்களும் ஒப்பற்ற பணியை ஆற்றுகின்றனர். முகப்புத்தகத்தில் பலரும் பகிரும் ஒரு வாசகம் இது, “தெய்வங்கள் மருத்துவமனைகளில் பணி புரிவதால் கோயில்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன…”.

ஆனால் தமிழகத்திலும் யாழ்ப்பாணத்திலும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் வாடகை்கு குடியிருக்கும் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேறிச் செல்லுமாறு வீட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளதாக செய்திகளும் இப்போதும் வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த மருத்துவர்களாலும் தாதியர்களாலும் தமக்கு கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படும் என வீட்டு உரிமையாளர்கள் அஞ்சுகின்றனராம். தமிழகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் இந்த பிரச்சினை கவனம் பெற்று வருகின்றத. தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்று இவர்களுக்கு தங்குமிடமாக தமது விடுதியை வழங்கவும் முன்வந்திருப்பது நல்ல செய்தியாகும்.

ஈழ மண் உயிர் காக்கும் உன்னதமான மருத்துவர்களின் பணிகளை கண்டிருக்கிறது. போர்க்காலத்தில் போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் ஆற்றிய உயிர்காக்கும் பணிகள் வரலாற்று சாதனைகள்.

இலங்கை அரசின் கடுமையான போருக்குள், கடுமையான மருத்துவ தடைகளுக்கு மத்தியில், மருத்துவமனைகள்மீது கிபீர் தாக்குதல்களும் கொத்துக் குண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்ட சூழலில் அவர்கள் ஆற்றிய மருத்துவ பணிகளை ஈழத் தமிழினம் ஒருபோதும் மறவாது.

உயிர்களோடும் காயங்களோடும் இழப்புக்களோடும் மிகவும் நெருங்கிய சாட்சிகளாக, உண்மைச் சாட்சிகளாக, மரணங்களை பற்றிய வாக்குமூலங்களை வழங்குபவர்களாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த சாட்சியங்களாகவும் ஈழத்து மருத்துவர்கள் மாறியுள்ளனர்.

துப்பாக்கி ஏந்தாமல், மருத்துவ சாதனங்களை ஏந்தி, கழுத்தில் சைனைட் குப்பிகளுக்குப் பதிலாக வைத்திய பரிசோதனைக் கருவியை தாங்கி உயிர்களை காத்து, இன்று அழிக்கப்பட்ட உயிர்களின் நீதிக்கான பயணத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கொண்ட ஈழ மண், உலகின் ஒப்பற்ற மருத்துவ களத்தில் மாண்டவர்களுக்காய் அஞ்சலிக்கிறது.

-கவிஞர் தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முள்ளிவாய்க்காலுக்கு நேர்மையாக இருக்கிறோமா?

மே மாதம், ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்ட காலம். ஈழத்து வானில் இனப்படுகொலையின் ...