புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன்

pulampeyar
pulampeyar

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ஈழ நிலம். கொரோனா அச்சம், புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற பிள்ளைகள் குறித்து ஈழத் தாய்மார்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்படும் உயிர்பலி ஈழ வீடுகள் ஒவ்வொன்றையும் உலுக்குகின்றது.

எங்கள் நாடு தமிழீழம், எங்கள்மீதான இனப்படுகொலைக்கு விசாரணை நடத்து என்று உலக அரங்கில் முழங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். தாயகத்தில் உள்ள மக்கள் வாய் திறக்க முடியாத பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளுகின்ற போதெல்லாம், புலம்பெயர் மக்களின் தாயக மக்களின் மனக்குரல் ஆகின்றனர். இங்கே உள்ள மக்களின் நம்பிக்கையாகவும் போராட்ட எழுச்சியாகவும் புலம்பெயர் மக்கள் களமாடுகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமது உழைப்பினால் எங்கள் போராட்டத்தை வளம்படுத்தியவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள். பனியிலும் குளிரிலும் உழைத்து அவர்கள் அளித்த கொடைகளால் போராளிகளுக்கு கரம் கொடுத்தார்கள். அத்துடன், புலம்பெயர் தேசங்களில் அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதையும் அவர்கள் ஒரு உன்னத இயக்கம் என்பதையும் எடுத்துரைத்து போராட்டங்கள் செய்தார்கள்.

இனப்படுகொலைக்குப் பிந்தைய காலத்தில், ஈழம் பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளானது. இங்கே நடந்தது இனப்படுகொலை என்று சொல்ல முடியாத சூழல். அப்போது புலம்பெயர் தேசங்களில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக நடந்த போராட்டங்கள், இலங்கை தூதரகங்களுக்கு எதிரான போராட்டங்கள் மிக முக்கியத்துவமானவை. இலங்கை அரசு ஈழ மக்களை இனப்படுகொலை செய்தது என்றும் நீதியை நிலைநாட்ட பன்னாட்டு விசாரணையை நடத்து என்றும் புலம்பெயர் மக்கள் உக்கிரமான போராட்டங்களை நடாத்தினர்.

புலம்பெயர் தேசங்களில் நடந்த இத்தகைய போராட்டங்களுக்கும் புலம்பெயர் அமைப்புக்களுக்கும், அங்குள்ள போராளிகளுக்கும் இலங்கை அரசு கடுமையாக அஞ்சியதன் விளைவாகவே அவர்களை இலங்கைக்குள் நுழைய தடைவிதித்தது. புலம்பெயர் தமிழர்கள் உள்ளவரை தமிழ் மக்களின் தமிழீழக் கனவை அழிக்க முடியாது என்றும் இலங்கை அரசு பிதற்றியதையும் பார்த்திருக்கிறோம். ஈழத் தமிழ் மக்கள் தனித்துவமான இறைமையுள்ள இனம், பொதுவாதக்கெடுப்பு நடாத்தி அவர்கள் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அங்கிருந்து பலமான குரல் ஒலித்துக் கொண்டிருப்பதுவே ஈழத் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானது.

அப்படி எழுச்சிக்குரல்களும் ஆதரவு அலைகளும் வீசிய புலம்பெயர் மண்ணிலிருந்து இன்று மரணச்செய்திகள்தான் வருகின்றன. இந்தப் பத்தியை எழுதுகிற வரைக்கும் இருபது புலம்பெயர் தமிழர்கள் கொரோனாவினால் பலியாகியுள்ளனர். கிளிநொச்சி பூநகரியை சேர்ந்த ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் ஒன்பது இலங்கையர்கள் லண்டனில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். இவர்களில் இருவர் மருத்துவர் என்றும் இருவர் தமிழர்கள் என்றும் செய்திகள் வந்திருக்கின்றன.

வயது முதிர்ந்தவர்கள் மாத்திரமின்றி, இளைஞர்களும் சிறிய குழந்தைகளும் புலம்பெயர் தேசத்தில் கொரோனாவுக்கு பலியாகின்ற செய்திகள், தாயகத்தை கடுமையாக உலுக்குகின்றது. போரிலிருந்து தப்பி, இன அழிப்பு அரசின் தாக்குதல்களிலிருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுவதற்காக புலம்பெயர் தேசங்களுக்கு தஞ்சமடைந்தவர்களை கொரோனாவும் வேட்டையாடுவது மிகவும் வேதனையானது. ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் வரும் அதிகரித்த உயிரிழப்புக்கள் பற்றிய செய்திகள் தாயகத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு உறக்கத்தை கலைத்திருக்கின்றது.

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த மக்களும் அகதிகளும்கூட பெரும் பாதிப்புக்களையும் அபாயங்களையும் எதிர்நோக்கி உள்ளனர். கடுமையான இனவெறி ஒதுக்கல்களுக்கு முகம் கொடுத்த எட்டு மருத்துவர்கள் பிரித்தானிய மண்ணில் கொரோனா நோயாளிகளை காப்பாற்றுகின்ற போராட்டத்தில் தமது உயிரை கொடுத்துள்ளனர். இவர்களில் இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

புலம்பெயர் தேசங்களில் கொரோனாவால் பலயியானவர்களின் ஒரு தொகுதி புகைப்படத்தை பார்க்க பெரும் கலக்கம்தான் வருகின்றது. இன்றைக்கும் தாயகத்தில் வீட்டுக்குச் செல்லாமல் உழைப்பிற்காக ஓடுபவர்கள், தயவு செய்து இந்த நெருக்கடிக்காலத்தில் வீடுகளில் தங்கியிருந்து உயிர்களை காத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக உங்கள் வீடுகள் மாத்திரம் காத்திருக்கவில்லை. தாயகமே காத்திருக்கிறது. உங்களின் உழைப்பும் விடுதலை செயற்பாடும் எங்கள் மண்ணுக்கு தேவை. எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் பேரிடர் போரிலும் உயிர்களை கொடுத்து இழப்புக்களை எதிர்கொள்ள ஒருபோதும் முடியாது.

லட்சக்கணக்கான உயிர்களை போருக்கு பலி கொடுத்தது ஈழ மண். இத்தனை அழிவுகளுக்குப் பிறகும், தங்கள் குடும்பங்களையும் சமூகத்தையும் தாய் மண்ணையும் உயிர்பிக்க வேண்டும் என்று சென்றவர்களின் இழப்பு. அகதியாக சென்று, வதிவிட உரிமைக்காக பெரும் போராட்டத்தை செய்து, அகதியாகவே இப்போது கொரோனாவில் மாண்ட ஒருவர் பற்றிய கதையை கேட்க பெரும் துயரம் பீறிடுகிறது. உண்மையில் இவர்களின் இழப்பு என்பது தனிப்பட்ட இழப்புக்கள் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட தாயகத்தை தாங்கிக் கொள்பவர்கள் என்ற வகையில், அவர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு.

உலகப் பொதுவான இந்தப் பிரச்சினை ஈழத் தமிழ் மக்களுக்கு போர்க்கால வாழ்வை நினைவுபடுத்துகிறது. உலகமெங்கும் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வுதான் கசங்குகிறது. பொருளாதாரரம், கல்வி, உயிரிழப்பு என்று இந்த சூழலில் ஈழத் தமிழ் மக்கள் இன்னொரு பேரழிவுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். எப்படியேனும் இதைக் கடந்து மீள வேண்டும் என்பது உலக மக்களின் சவால். எத்தனையோ பேரழிவுகளை சந்தித்த ஈழத் தமிழ் மக்கள் இதையும் சுலபமாக கடந்து மீள்வார்கள் என்பது திடமானது.

தமிழ்க்குரலுக்காக கவிஞர் தீபச்செல்வன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)

Attachments area