மதமாற்றம்: களையப்பட வேண்டிய கொரோனா வைரஸ்?

swiss paster
swiss paster

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களுடன் யாழ்ப்பாணமும் கொரோனா அபாய மாவட்டமாகியதற்கு என்ன காரணம்? போல் சற்குணராஜா என்ற சுவிஸ் மத போதகர், தனக்கு கொரோனா தொற்று இருந்தபோதும், அதை மறைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து, அதை சிலருக்கு பரப்பி விட்டும் சென்றிருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியான வேலை.

இன்றைக்கு யாழ்ப்பாண மக்கள், போர்க்காலத்தைப் போல தொடர் ஊரடங்கு வாழ்க்கைக்குள் தள்ளப்பட இவரே காரணம். இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் பல ஏழை எளிய மக்களின் வீடுகளில் அடுப்பெரியாமல் இருப்பதற்கு இவரே காரணம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது வடக்கில் எட்டுப்பேர் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களும் போல் சற்குணராஜாவின் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். இவர்களில் இருவர் சிறுவர்கள். கொரோனா தொற்றை தடுக்கும் ஜெயபக்கூட்டம் என்று அறிவித்து கொரோனாவை பரப்பிய நாசகாரத்தை என்னவென்பது?

இப்போது குறித்த மதபோதகர் மருத்துவர்களின் பெரும் போராட்டத்தினால் நலப்படுத்தியிருக்க, அதனையும் தனது மத வெற்றியாக கருதும் இவர், பொது நலன்களை கருதாமல், தனிப்பட்ட மத நலன்களுக்காக கொரோனா தொற்றை மறைத்து, அதனை யாழில் பரப்புகின்ற நாசகார வேலையை செய்து இருக்கிறார் என்பதும் இன்றைக்கு அவரது பேச்சின்மூலம் வெளிப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் முழுவதும் சபையை நிறுவுவேன் என்றும் சற்குணராஜா சர்ச்சையாகப் பேசியுள்ளார். இத்தகையவர்களின் பேச்சை நம்பி மதம் மாறும் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

மழைக்கு முளைக்கும் காளான்கள் போல திடீர் திடீரென முளைக்கும் மதவாத சபைகள், அமைப்புக்கள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். பாரம்பரியமற்ற, தன் வியாபார நோக்கம் கொண்ட இத்தகைய அமைப்புக்கள் மக்களின் நலன்களில் அக்கறை இல்லாமல், சர்வதேச மற்றும் தேசிய அரசுகளின் எச்சரிக்கைகைளை பொருட்படுத்தாமல் தமது மதத்தை பரப்புவதுடன் மக்களின் உயிருக்கும் வாழ்க்கைக்கும் பாரிய ஆபத்துக்களையும் உருவாகக்கூடியவை. இதற்கு யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை தக்கவொரு சான்றாகும்.

ஈழத்திற்கு என்று ஒரு பண்பாடும் பாரம்பரியமும் இருக்கிறது. ஈழத்தின் இரு கண்களாக தமிழும் சைவமும் பல ஆயிரம் வருடங்களாக இருந்து வந்துள்ளன. பிற்காலத்தில், கிறீஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியன நமது பண்பாட்டில் இணைந்து கொண்டன. அப்போதைய வியாபாரச் சூழல்கள் மற்றும் அரசியல் சூழல்களால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் இன்றவளவும் மதவாதமற்ற, மிகுந்த சகிப்பு தன்மை கொண்டவொரு சமூகமாக ஈழத் தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

ஆனால் சில சமய அமைப்புக்களும் சபைகளும் மக்களின் வறுமை சூழலை பயன்படுத்தி, அவர்களுக்கு சில உதவிகளை செய்து, அவர்களின் மனங்களை மாற்றி மதமாற்றம் செய்கின்ற போக்கு வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ளது. இது மதமாற்றம் என்பதைவிட இன அழிப்பு அல்லது பண்பாட்டு அழிப்பு என்றே சொல்ல வேண்டும். 2009இற்குப் பின்னரான இடர்காலச் சூழலை பயன்படுத்தி, சில அமைப்புக்கள் மக்களின் மனங்களின் உள்ள பூர்வீக சமய நம்பிக்கைகளை கழுவி தமது மதங்களை திணிக்க முயல்கின்றன.

சமயம் என்பது வாழ்வியலுக்கான நம்பிக்கை. அது பொது ஒழுக்கத்தை வலியுறுத்துகின்ற மனதை ஒருமுகப்படுத்துகின்ற கருவியாகவும் இருக்கின்றது. ஒவ்வொரு இன சமூக மக்களின் பண்பாட்டுக்கு ஏற்ப தெய்வங்களும் மத வழிபாடுகளும் காணப்படுகின்றன. முழுக்க முழுக்க இயற்கையை தெய்வமாக கருதும் மிக ஆரோக்கியமான சமய வழிபாட்டையும் இயற்கையுடன் இணைந்து வாழும் பண்பாட்டு கூறுகள் கொண்ட வழிபாட்டையும் சைவம் உள்ளடக்கியிருக்கிறது.

ஈழத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் வளர்ச்சிக்கு இங்கே உருவெடுத்த சமய வழிபாடுகள் பெரும் பங்களிக்கின்றன. ஆனால் முற்றிலும் வேறான, அந்தியப் பண்பாடுகளை விதைக்கின்ற சமய வழிபாடுகள் எமது மக்களின் வாழ்வியலை படுகுழியில் தள்ளும். உயிர்ப்பற்று ஒடுக்கும். அத்துடன் அது இனத்தையும் அழிக்கும். மதமாற்றங்கள் பூர்வீக இனங்களின் அடையாளத்தை அழிப்பதாகவே ஆய்வுகள் சொல்கின்றன. ஈழத்தில்கூட அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கின்றன. ஈழத்தின் இஸ்லாமியர்கள் ஒருகாலத்தில் சைவர்கள். தமிழர்கள். அதனால்தான் இன்றைக்கும் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.

சில நூறு வருடங்களின் முன்னர் அவர்கள் அரபு வணிகர்களின் மதமாற்ற இலக்கில் இனம்மாறிப் போனவர்கள். இன்றைக்கும் அந்த வழியில் சைவத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகின்ற செயற்பாடுகளும் நடக்கின்றன. கிழக்கில் இது பெரியதொரு அரசியலாகவும் வன்முறையாகவும் நடக்கின்றது. அதைப்போல சில ஆயிரம் வருடங்களின் முன்னர் நீர்கொழும்பில் தமிழர்களாக இருந்தவர்கள் பின்னர் பௌத்தர்களாகவும் கிறீஸ்தவர்களாகவும் மாறி இறுதியில் சிங்களவர்களாகவும் மாறிவிட்டார்கள் என்பது கசந்த வரலாறு.

தமிழ் அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட நலன்களுக்காக இவை பற்றி அக்கறை கொள்ளுவதில்லை. வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான விக்கினேஸ்வரன் அவர்கள், தமிழையும் தமிழர் சைவப் பண்பாட்டையும் வலியுறுத்துவதில் முதன்மையானவர். ஈழத்தின் ஆதி சமயம் சைவமே என்று சிங்களவர்களுக்கும் எடுத்துரைத்திருக்கிறார். நமது பண்பாட்டுக்கு முற்றிலும் பொருத்தமற்ற, தான்தோன்றித்தனமான, தன் மத நலன்களை முதன்மைப்படுத்திய, மதங்களை எமது மண்ணில் பரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும். மதமாற்றமும் இனத்தை அழித்துவிடும் என்ற அபாயத்தை எல்லோரும் தமிழர்களாக நின்று உணர வேண்டும்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)