உளவியல் கொரோனாவை எதிர்கொள்வது எப்படி?

corona mind
corona mind

கொரோனா எனும் கொடிய நுண் உயிர் வைரஸ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை உலகளவில் பலி கொண்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நிர்வாக முடக்கமே ஒரே வழியென உலகம் முழுவதும் முடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸிற்கு அஞ்சி வீடுகளுக்குள் பதுங்கி முடங்க தயராக மக்கள் அனைவரும் உள்ளனர். ஆனால் நமது தொழில் பாதிப்பு, அன்றாட வாழ்வாதாரம் இன்மை, பொழுபோக்கின்மை போன்ற காரணங்களால் வீடுகளுக்குள் முடங்க முடியாமல், மக்கள் பெரும் அழுத்தத்தின் மத்தியில் இருப்பதை கவனிக்க முடிகின்றது.

சைவ சமயத்தில் வீடுபேறு என்பது முக்தி நிலையாகும். மனித ஆன்மா வீடுபேறு அடைதல்தான் வாழ்வின் இலட்சியமாக கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையில் மிகவும் இனிமையோடும், அமைதியோடும் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டை அமைக்க கடுமையாக உழைக்கிறோம். கடுமையாக முயற்சிகள் செய்கிறோம். ஒரு வீட்டை ரசித்து ரசித்து கட்டுகிறோம். ஆனால் இன்று வீடுகளுக்குள் இருப்பது பெரும் துன்பமாக, சித்திரவதையாக இருக்கிறது. வீடுகளுக்குள் முடங்க முடியாமல் நெளிகின்ற ஒவ்வொருவருக்கும் பின்னால் இந்த உலக வாழ்க்கை ஏற்படுத்திய பலவிதமான மாற்றங்களும் தாக்கங்களும் உள்ளன.

கொரோனா உலகை அச்சுறுத்தி வருகின்ற சூழலில், உலக மக்களே இரண்டு பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர். ஒன்று வீடுகளுக்குள் முடங்க முடியாத மக்களின் மன அழுத்தமான நிலை. இதற்கு பின்னால் அவர்களின் சமூக பொருளாதார அரசியல் மற்றும் வாழ்க்கை சூழல் காரணிகள் இருக்கின்றன. வீடுகளை, பிரதேசங்களை, நாடுகளை கடந்த இன்றைய உலக சூழலில் இந்த முடக்கம் என்பது பெரும் தண்டனையாக, பெரும் சிறையிருத்தலாக மக்களால் உணரப்படுகின்றது. இது உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடியது.

இரண்டாவது கொரோனா குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் மக்களை கடுமையாக அச்சுறுத்துகின்றமை அல்லது பீதிக்கு உள்ளாக்கின்றமை மற்றொரு பிரச்சினையாகும். ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக, பரபரப்பூட்டுகின்ற விதமாகவே பெரும்பாலான செய்திகளை வெளியிட்டு வந்தன. மிக இயல்பான ஒரு மென் செய்தியைக்கூட வன் செய்தியாக கட்டமைக்க சில ஊடகங்கள் முயல்கின்றன. அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திரு சத்தியமூர்த்தியும் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் கொரோனா பீதியை ஏற்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அதைக்கூட சில ஊடங்கள் பரபரப்பான ஒரு செய்தியாக்கியிருந்தது என்பதே கவலைக்குரிய விடயம். கொரோனா அபாய கால கட்டத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை வெளியிட்டோர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆதாரமற்ற வகையிலும் பரபரப்புக்காகவும் லைக்குகளை அள்ளுதல் என்ற தனிப்பட்ட ஆசைகளுக்காகவும் சமூக பொறுப்பற்று, விதிகளுக்கு மாறாக செய்திகளையும் தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி சமூகத்தில் தவறான செய்திகளுக்கு அடிப்படையாகின்றனர்.

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது என்றும் அபாயமற்ற மாவட்டங்களின் ஊரடங்கை தளர்த்த முடியும் என்றும் இலங்கை மருத்துவர் சங்கம் ஆலோசனை கூறியிருந்த நிலையில், வடக்கில் ஒரு நாளில் எட்டு கொரோன தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட செய்தி பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இயல்பு நிலைக்கு மீள முடியும் என்று மக்கள் மத்தியில் ஏற்படத் தொடங்கிய நம்பிக்கையை இச் செய்தி மீண்டும் அசைத்துப் பார்த்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனினும் இதனைக் கண்டு மக்கள் பீதியடைத் தேவையில்லை என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பொருத்தமான சமயத்தில் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று அபாயம் நீங்கிய பின்னர், இலங்கை இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை வெளிப்படுத்தும் என்றும் பல தொற்றா நோய்கள் ஏற்படும் என்றும் இந்திய மருத்துவர் எம்.எஸ். ஜாக்சன் எச்சரித்திருக்கிறார். வேலையிழப்பு இந்தியாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று குங்குமம் இதழாசிரியர் சிவராமன் கூறிய கருத்தும் கவனிக்கத்தக்கது. கொரோனாவின் போது ஏற்படுத்துகின்ற பீதி கொரோனாவை கடந்தும் ஆட்கொள்ளப் போகின்றது. அதனை சரி செய்ய அரசுகள் தீர்மானங்களை திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குறிப்பாக உலகின் அனைத்து அரச எந்திரங்களும் கொரோனாவை நோக்கியே திருப்பப்பட்டுள்ளன. எதிர்பாராது கொரோனாவை சந்திக்க நேரிட்ட சூழலின் அனுபவத்தை கொண்டு, கொரோனாவுக்கு பின்னரான சூழலை எப்படி எதிர்கொள்ளுவது என்பது தொடர்பில் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும். அதை செய்யத் தவறினால், மனங்களில் பரவும் தொற்றா வைரசுகளின் தாக்கம் பெரும் பின்னடைவுகளை உருவாக்கும். அதுவே கொரோனா உளவியல் ரீதியான பரவுதலுக்கு ஒப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு, மருத்துவதுறை, ஊடகத்துறை முதலிய மூன்று துறைகளும் சிறப்பாக – சரியாக இயங்குவதுதான் கொரோனாவை முழுமையாக வெற்றி கொள்ள உதவும் என்பதே பலரின் கருத்துமாகும்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)