கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்துக

gota copy
gota copy

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஊரடங்கு அமுலே ஒரே வழியென பின்பற்றப்படுகின்றபோதும், அதனால் பல மக்களின் வாழ்வியலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு நிற்பது அனைவரும் நன்கறிந்த விடயமாகும். எனவே தற்போதைய சூழலில் நாட்டின் பகுதிகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடனும் அறிவுறுத்தல்களுடனும் ஊரடங்கை தளர்த்துவதை பற்றி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அபாயகரமான நோய் தொற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் சில கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுப்பது தவிர்க்க இயலாதது. கடந்த ஒரு மாதகாலமாக மக்கள் இதனை பின்பற்றி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். எனினும் தொடர்ச்சியான ஊரடங்கு மக்களை போர்க்கால வாழ்வுக்கு தள்ளியுள்ளது. அவர்களின் உழைப்பு, செயற்பாடுகள் என முழு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நிவாரணங்களை அறிவித்தாலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாய் முடங்கியுள்ள மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக் கொள்ள இவைகள் போதுமானதாக இல்லை. அன்றாட கூலித் தொழிலாளிகள் தமது வருவாயை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் தமது வாழ்க்கையில் திட்டமிட்ட பல்வேறு விடையங்களையும் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டின் 19 மாவட்டங்களில் அவ்வபோது ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. கடந்த முறை ஒரு வாரத்தின் பின்னர் 19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு கடந்த 16ஆம் திகதி தளர்த்தப்பட்டது. ஒரு வாரத்தின் பின்னர் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பல்பொருள் வாணிபங்களிலும் அங்காடிகளிலும் வங்கிககளிலும் தமது கடமைகளை நிறைவேற்றுவதை அவதானிக்க முடிந்தது.

நகரங்கள் எங்கும் மிக நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். ஊரடங்கு காலத்தில் மக்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான நெரிசல் தோன்றுவது ஊரடங்கு காலத்தை அர்த்தமிழக்கச் செய்யும். உரிய சமூக இடைவெளி பேணாமையால் நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்ற அபாயமே இதன்போது காணப்பட்டது.

உயிரை பாதுகாக்கும் இந்த அபாய சூழலில் பெரும் உளத்தாக்கங்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளமை குறித்தும் உரிய தரப்பு அவதானம் செலுத்த வேண்டும். எனவே தற்போதைய சூழலை ஆராய்ந்து, அதற்கேற்ப மக்களின் வாழ்வை மீளமைக்க முனைய வேண்டும். கொரோனா இடர் அபாயமற்ற மாவட்டங்களில் ஊரடங்கை நாள்தோறும் தளர்த்தி இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, மக்களின் இந்த அசௌகரியங்களை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் கொரோனா தொற்று ஏற்படுகின்ற அபாயமும் இதன் மூலம் தடுக்கப்படும்.

எவ்வாறென்றாலும், கொரோனா அபாயம் உள்ளதாக அரசால் அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடரங்கை தளர்த்த முடியாத நிலையே காணப்படுகின்றது. இங்கே நோயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையில் அவதானமாக இருக்க வேண்டும். அத்துடன் கொரோனா அபாய மாவட்டங்களுக்கும் பிற மாவட்டங்களுக்கும் இடையிலான தொடர்புகளை கட்டுப்படுத்துவதும் அவசியமானது.

கொரோனா அபாயம் கொண்ட மாவட்டங்களில் 20 வீதமான அரச சேவையையும் பிற மாவட்டங்களில் 50 வீதமான அரச சேவையையும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் தபால் சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்ட சில அடிப்படைச் சேவைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இவைகளின் போதும் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுன் நடத்தல் கட்டாயமாகப்பட வேண்டும்.

சுகாதார துறையின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்வதே இங்கு முக்கியமானது. கொரோனா சூழல் அபாயத்தை முறியடிக்கவும் வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றவும் சமூக இடைவெளியை பேணி, விழிப்புணர்வுடன் மக்கள் நடந்து கொள்ளும் பட்சத்தில் ஊரடங்கை தளர்த்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளமைக்க முடியும். கடந்த ஒரு மாத காலமாக முடங்கிய மக்களின் வாழ்க்கையை மீள இயல்புக்கு கொண்டு வர வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்
(18.04.2020)