புலிகளின் போரியல் வெற்றியை உலகறியச் செய்த தராகி?

tharaki asiriyapeedam copy scaled
tharaki asiriyapeedam copy scaled

தமிழர்கள் இன்றடைந்திருக்கும் ஊடகவெளி என்பது பெரும் உயிர்த் தியாகங்களினால் அடையப்பட்டது. தமிழர்களின் ஊடக வரலாறு என்பது நெருப்பாற்றில் நீந்திய அனுபவங்களைக் கொண்டது. முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களாலும் பீதியூட்டும் செய்திகளாலும் கட்டமைக்கப்படும் இன்றைய ஊடகவெளியில் எமது ஊடக முன்னோர்களை, ஆளுமைகளை குறித்து அறிவது பொருத்தமானது.

அத்தகையவர்களின் ஒருவர்தான் தராகி என அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம். ஆங்கிலப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட இந்த ஆளுமை கொல்லப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் நடவடிக்கைகளை உலகறியச் செய்வதில் தேர்ந்த ஆங்கில பத்தி எழுத்தாளராகவும் தமிழ் தேசிய எண்ணப்பாடு கொண்ட ஆளுமையாகவும் இருந்தமை சிவராமின் அடையாளமாகும்.

இதேபோல் ஒருநாள். ஏப்ரல் 28ஆம் நாள், 2005ஆம் ஆண்டு கொழும்பில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகே இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் வைத்து, சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். சிவராமின் இழப்பு என்பது தமிழ் ஊடகத்துறைக்கும் இலங்கை ஆங்கில ஊடகத்துறைக்கும் பேரிழப்பு. தென்னிலங்கையை மாத்திரமின்றி மேற்குலகத்தையும் ஈர்த்தவர் தராகி.

1959, ஆகஸ்ட் 11ஆம் நாள் ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம், புனித மிக்கேல் கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட போதும், அப்போதைய இன ஒடுக்குமுறை சூழலால், பல்கலைக்கழக கல்வியை துறந்து ஆயுதப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1980களில் புளொட் அமைப்பில் இணைந்து கொண்ட சிவராம், பின்னர் அவ் இயக்கத்திலிருந்து விலகினார். 1990களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புமீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியலில் ஈர்க்கப்பட்டதுடன் அக் காலப் பகுதியில் பிரபல ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றத் தொடங்கினார்.

1989இல் தி ஐலன்ட் பத்திரிகையில் முதலாவது கட்டுரையை தராகி என்ற பெயரில் சிவராம் எழுதினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமே ஈழ விடுதலையை தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதை தர்க்கபூர்வமான நியாயங்களுடன் தராகி எழுதிய போது, அது தென்னிலங்கை புத்திஜீவிகளையும் மேற்குலகத்தையும்  ஈர்த்தது.

அனைத்துலக மட்டத்தில் தராகி எழுதிய தமிழ் தேசியம் சா்ர்ந்த எழுத்துக்கள் பெரும் கவனத்தை ஈர்த்தன. 1990களிலிருந்து விடுதலைப் புலிகள் களத்தில் ஏற்படுத்திய முக்கியத்துவமான போரியல் வெற்றிகளை ஆங்கில ஊடகத்தின் வலி கவனத்தை ஏற்படுத்திய சிவராம், தமிழர்களின் அரசியல் உரிமைகள் எந்தளவுக்கு  அவசியம் என்றும் அதன்வழி எடுத்துரைத்தார்.

இத்தகைய பத்தி எழுத்துக்களை எழுதியபடி இலங்கை தலைநகர் கொழும்பில் வாழ்ந்த சிவராம், அரசாலும் அரசுடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்களாலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. இறுதியில் சிவராம் படுகொலை செய்யப்பட்டார். துணிகரமும் நேர்மையுமே சிவராமின் அடையாளங்கள் ஆகின.

தராகி சிவராமின் தேசப் பணியை கௌரவப்படுத்தும் விதமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழத்தின் அதி உன்னத விருதான மாமனிதர் விருதை வழங்கினார். அற்பசொற்ப நலன்களுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சில ஊடகவியலாளர்கள் தமது கருத்துநிலையை மாற்றியபோதும் சிவராம் தன் எழுத்துக்களிலும் வாழ்விலும் ஒரு ஊடக ஹீரோவாக வாழ்ந்து மடிந்தார்.

சிவராம் போன்ற உன்னதமான ஊடகப் போராளிகளை இன்றைய இளைய தலைமுறை பின்பற்ற வேண்டும். வெற்றிடமாகவே உள்ள சிவராமின் இடத்தை நிரப்பும் ஆளுமையை வளர்க்க வேண்டும். அத்துடன் சிவராம் படுகொலைக்கான நீதி இன்னமும் வழங்கப்படவில்லை. சிவராம் போன்ற ஊடவியலாளர் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதியை நிலைநாட்டுதல் என்பது அனைத்து ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்புடன் தொடர்புடையது. அதுவே தராகிக்கான மெய்யான அஞ்சலி.

தமிழ்க்குரல்ஆசிரியர் பீடம்.

28.04.2020