இருண்ட யுகத்துக்குள் சிக்கப் போகிறதா இலங்கை?

irunda yugam1 scaled
irunda yugam1 scaled

ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார மோகம் நாட்டை மேலும் அபாயத்திற்குள் தள்ளும் சூழலே காணப்படுகின்றது.

இந்தப் பேராபயத்திலும் – அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ராஜபக்ச தரப்புகள். இதற்கு வலுவான காரணம் சர்வதேசம் – நாடு இப்போதிருக்கும் நிலையில் எதுவும் கண்டுகொள்ளப்படாது என்பதுதான். கொரோனா அச்சுறுத்தலில் உலகம் சிக்கித் தவித்தபோது, மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டார். இவரது விடுதலையை சர்வதேசம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ இல்லை. சர்வதேசம் இன்றிருக்கும் நிலையில் இதனைக் கருத்தில் – கவனத்தில் எடுக்கும் நிலையில் இல்லை என்பதே இதற்குக் காரணம்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்சவும் அரசாங்கத்தை அவருடைய கட்சி பொதுஜன பெரமுனவே அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு என்ன அவசியம் – அதுவும் இப்போதிருக்கும் அபாய சூழ்நிலையில் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைத்திருப்பது உண்மையில் சட்டவிரோதமானது. ஏனெனில் எதிர்க்கட்சியையும் விட குறைவான உறுப்பினர்களையே அது கொண்டுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தாபய ராஜபக்ச, தனது மக்கள் ஆதரவைக் காட்டியே ரணில் அரசாங்கத்தை ஆட்சிக் கதிரையில் இருந்து அகற்றினார். இதனால்தான் நாடாளுமன்றை தொடர்ந்தும் கூட விடாமல் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார். நாடாளுமன்றின் ஆயுள் நான்கரை வருடங்கள் முடிவதை எதிர்பார்த்திருந்து அதனையும் கலைத்தார்.

அவரது துரதிர்ஷ்டம் சர்வதேசத்தைப் பாதித்த கொரோனா தொற்று அபாயம் நாட்டிலும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. உண்மையில் இதனை அவரின் துரதிர்ஷ்டம் என்று கூறாமல் அவரின் தவறான அணுகுமுறைகளே இந்தப் பேரனர்த்தத்திற்கு வித்திட்டது. ஆனால், அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதை இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் மூலமும் நிரூபித்து நிற்கிறார். எந்த விஞ்ஞானபூர்வமான – உறுதியான ஆதாரங்களும் இன்றி மே 11 முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பு நிலையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். இது சிலவேளைகளில் பேராபத்தை ஏற்படுத்தி விடலாம். இதற்கும் அடிப்படைக் காரணம் ஜூன் 20 ஆம் திகதி எப்பாடுபட்டேனும் தேர்தலை ஒப்பேற்றி விட வேண்டும் என்பதே.

இதுவரை நிறைவேற்று அதிகாரக் கதிரையில் இருந்த எட்டு ஜனாதிபதிகளில் அதிகாரங்கள் குறைந்தவர் கோத்தாபய ராஜபக்ச மட்டுமே. ஏனெனில் நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களில் சிலவற்றை கடந்த அரசாங்கம் வெட்டிக் குறைத்து விட்டது என்பதே அதற்குக் காரணம். அந்த அதிகாரம் இருந்திருந்தால் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடே நாடாளுமன்றைக் கலைத்து தேர்தலையும் நடத்தியிருக்க முடியும். தேர்தல் நாளை இவ்வளவு காலத்துக்கு ஜவ்வாக இழுக்கவோ மற்றைய துறைகளுடன் முட்டி மோதவோ வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

இதனால்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படியேனும் பெற்று மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரித்து விட வேண்டும் என்பதே அவரது பெருங்கனவு. அது நிறைவேறவும் சாத்தியம் அதிகம் என்றபோதும், இப்போதிருக்கும் அரசியல் நிலவரம், சர்வதேச நிலைப்பாடு என்பவற்றை சாதகமாக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பொதுஜன பெரமுன தனித்துப் பெற வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. எதிர்ப்புக்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை முன்னெடுக்க வேண்டும் என்றால், தான் சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடியவர்களே அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே ராஜபக்ச குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தேர்தலை உடனடியாக நடத்தி விட வேண்டும் என்பதற்கு அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது ஜனாதிபதி தேர்தலில் எழும்பியிருந்த சிங்கள – பௌத்த பேரலை தணிவதற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி விட வேண்டும் என்பது ஒன்று.

இன்றைய நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அதன் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரமுனவுக்கு பேராதரவு கிடைப்பது சாதாரணம். ஆனால், ஐ.தே.கவின் இரு பிரிவுகளும் மீண்டும் சேர்ந்து விட்டால் அதற்கான வாய்ப்பு பறி போய்விடக்கூடும். எனவே, எந்த வலுவான போட்டியின்றி தேர்தலை வெற்றி கொள்வது பின்னாளில் சர்வதேச விவகாரங்களுக்கு முகம்கொடுக்க இலகுவாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம்.

இதுதவிர, இப்போதைய நிலையில் சர்வதேசக் கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது முடியாத காரியம். மீறி வருபவர்களையும் தடுத்து நிறுத்தி விட முடியும். அத்துடன் சர்வதேசம் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தத் தேர்தலை அவ்வளவாகக் கண்டுகொள்ளப் போவதில்லை. எனவே தேர்தலில் எப்படியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று விட முடியும் என்பது அவர்களின் கணக்கு.

தமிழர் பகுதியிலும் கட்சிகள் பிரிந்துள்ளன. தமிழர்களின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்றாலும், பிரிந்து கிடக்கும் தமிழ்க் கட்சிகளால் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு சாதகமான நிலைமை ஒன்று உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழர்களும் தம்மை ஆதரிக்கிறார்கள் என்றும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனம் அடைந்து விட்டது என்று பிரசாரம் செய்யவும் அது வாய்ப்பை வழங்கும்.

இதனால்தான், நாடாளுமன்றைக் கூட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பின்னடித்து வருகிறார். நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், அதன் பதவிக் காலம் முழுமைக்கும் – செப்ரெம்பர் மாதம் வரை நடத்த வேண்டியிருக்கும். அதற்குள் பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வாய்ப்பு உண்டு. எனவே மீண்டும் தேர்தலை நடத்தும்போது அவர்கள் ஒரு கூட்டணியாகவே தேர்தலை சந்திப்பர். இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற கனவில் மண்ணைப் போட்டுவிடக்கூடும்.

கொரோனா பேரனர்த்தம் நாடு முழுதும் – 21 மாவட்டங்களைப் பாதித்துள்ளது. எனவே, இதனை தேசிய அனர்த்தமாகப் பிரகடனப்படுத்தி மக்களுக்கு – பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இதனை தேசிய அனர்த்தமாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் நாடாளுமன்றை மீண்டும் கூட்ட அனுமதிப்பது போலாகி விடும். இதனால்தான் நாடளாவிய ரீதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டும் அதனை தேசிய பேரிடராக இன்னமும் அரசு பிரகடனப்படுத்தவில்லை. இப்போது அரசு வழங்கும் நிவாரணங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்பட வல்லது. நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் அந்தப் பெயரில் ஒரு பங்கு எதிர்க்கட்சிகளுக்கும் சென்று விடும். எனவே இந்நேரத்தில் நாடாளுமன்றைக் கூட்டுவது அரசின் நற்பெயரில் பாதியை அவர்களுக்கு தானம் செய்ததுபோலாகி விடும்.

இந்நிலையில், நாடாளுமன்றைச் சுற்றி இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் சித்தாந்த்தின்படி இது இராணுவ ஆட்சிக்கான முதல் படிநிலையாகும். இராணுவப் பின்னணியில் இருந்து வந்த கோத்தாபய ராஜபக்ச – இப்போது முப்படைகளின் கட்டளைத் தளபதியும்கூட. அவர் நாடாளுமன்றைக் கூட விடாமல் தடுப்பது இராணுவ ஆட்சிக்கான அறைகூவலே என்பதில் தவறேதும் இருக்கப் போவதில்லை. மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் 90 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும் என்றே அரசியலமைப்பு கூறுகிறது.

அப்படியானால், ஜூன் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால், தேர்தலுக்கான திகதி ஜூன் 20 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 90 நாட்களில் நாடாளுமன்றம் கூடாது என்று கருதப்படும் பட்சத்தில் சபாநாயகர் (அடுத்த சபாநாயகர் பதவியேற்கும்வரை கடந்த நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியும் – அதிகாரங்களும் தொடரும்) நாடாளுமன்றைக் கூட்டுவதற்கு கட்டளை பிறப்பிக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டால் சிவில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் பொலிஸார் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது நியதி. அப்படி நாடாளுமன்றம் கூடினால் ஜனாதிபதியின் அதிகாரம் கேள்விக்குறியாகி விடும். எப்போதும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் கோத்தாபய ராஜபக்ச ஒருபோதும் அதனை விரும்பவோ – ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. எனவேதான் தனது கட்டளைப் பிரகாரம் செயற்படும் – தனக்கு விசுவாசமான இராணுவத்தினரின் வசம் நாடாளுமன்றப் பாதுகாப்பை ஒப்படைத்திருக்கிறார் ஜனாதிபதி.

நாடாளுமன்றை கூட விடாமல் தடுப்பதும் – மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதற்கு தகிடுதத்தங்களை செய்வதும் – ஜனாதிபதி என்ற ஒற்றைப் பதவியின் வசம் அதிகாரங்களைக் குவிக்க முனைவதும் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் தள்ளிவிடும்.

ஏற்கனவே – 2015 இற்கு முன்னர், நாட்டை ராஜபக்சக்கள் ஏகபோக உரிமை கொண்டாடிய காலத்தில் – இருண்ட ஆட்சி நீடித்திருந்தது. சிங்கள மக்களை விட சிறுபான்மை இனங்கள் – குறிப்பாகத் தமிழர்கள் இந்த ஆட்சியின் வெம்மையை – கொடுமைகளை நன்கு உணர்ந்தவர்கள் – அனுபவித்தவர்கள். இப்போது மீண்டும் அத்தகு இருள் நாட்டை சூழப் போகிறது என்பதே உண்மை….!

-தமிழ்க் குரலுக்காக கரிகால்வளவன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)