இராணுவத்திற்கு கொரோனா: வடகிழக்கிற்கு பேராபத்து? – தீபச்செல்வன்

iranuvathitku corona scaled
iranuvathitku corona scaled

எதற்கெடுத்தாலும் சிங்களவர்கள் என்ற மனநிலையும் எதற்கெடுத்தாலும் இராணுவம்தான் என்ற மனநிலையும் இலங்கையின் மகாவம்ச மனநிலையின் வெளிப்பாடு ஆகும். இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட நேரிட்டது. இதனாலும் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை தொடங்கினர். இப்போது ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ச, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போதும் இராணுவத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவுகள் தற்போது அறுவடையாகத் தொடங்கியுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, தேசிய கொரோனா தடுப்பு நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி சவேந்திரசில்வாவை நியமித்திருந்தார். அத்துடன் முப்படையினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர். எதற்கெடுத்தாலும் இராணுவத்தை முன்னிலைப்படுத்தும் இலங்கை அரசின் போக்கில் சில அரசியல்கள் இருப்பதையும் முன்னைய பத்திகளில் சுட்டிக்காட்டப்பட்டது. சவேந்திர சில்வா இனப்படுகொலை குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவராக தமிழர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர். அத்துடன் அமெரிக்கா அவருக்கு பயணத்தடையையும் வித்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலும் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

கொரோனாவை தடுத்த உயிர் காத்த வீரராக அவரை சித்திரிக்கும் முகமாகவும் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த இரத்தக்கறைகளை கழுவும் விதமாகவுமே இந்த சவேந்திர சில்வா கொரோனாவை தடுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனோ பேரிடர் காலத்தில் அரசியல் பேசவோ, குற்றங்களை சுமத்தவோ வாய்ப்பிருக்காது என்ற நோக்கிலேயே சந்தர்ப்பம் பார்த்து, இந்த நியமனத்தை ஜனாதிபதி கோத்தபாய வழங்கியுள்ளார்.

இதன் விளைவே தற்போது கொரோனாவை காவும் காவிகளாக படைத்தரப்பினர் மாறியுள்ளனர். இதுவரையில் சுமார் 200க்கு மேற்பட்டவ கடற்படையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அது வடக்கு கிழக்கு மக்களையே அதிகம் பாதிக்கும். ஏனெனில் இராணுவத்தினர் பல லட்சக்கணக்கானவர்கள் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளனர். இதனால் தமிழ் மக்கள் பெரும் ஆபத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

தென்னிலங்கையில் அதுவும் கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களுக்கு விடுமுறையில் சென்று வரும் படையினர், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ் நகரங்களில் வந்து மக்கள் செல்லும் கடைகளுக்கும் ஏரிஎம் எந்திரங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடுமின்றி செல்லுகின்றனர். இதனால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இவை குறித்து மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். ஆனால் தற்போது மக்கள் பிரதிநிதிகள் மிகவும் பாதுகாப்புடன் வீடுகளில் தங்கியுள்ளனர். சிறந்த பிரஜைகளாக அரசியல் பிரதிநிதிகளே கொரோனா விழிப்புணர்வை பின்பற்றுகின்றனர்.

இதைத் தவிர, வடக்கு கிழக்கில் கொரோனா தனிப்படுத்தல் மையங்களை அமைக்கின்ற வேலைகளிலும் அரசு மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது. இலங்கையில் 4 பரிசோதனை நிலையங்களே உள்ளன. கொழும்பு அங்கொடை வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, கராப்பிடிய போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை முதலியவை ஆகும். அத்துடன் இலங்கையில் உள்ள 24 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் பராமரிக்கப்படுகின்றனர்.

இலங்கை முழுவதிலும் 36 கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள் உள்ளன. இதில் 14 மையங்கள் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3ஆயிரத்து 292 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் சுமார் 4ஆயிரத்து 500பேர் இதுவரையில் கண்காணிக்கப்பட்டு வெளியேறியுள்ளனர். வடக்கில் 6 தனிமைப்படுத்தல் மையங்களும் கிழக்கில் எட்டு தனிமைப்படுத்தல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்குமாகாணத்தில் பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம், பெரியகட்டு இராணுவ முகாம், பூவரசன்குளம் வேலங்குளம் விமானப்படை முகாம், முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை முகாம், இரணைமடு விமானப்படை முகாம், யாழ்.கொடிகாமம் 522 ஆவது படை முகாம் முதலிய இடங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகம், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் அம்பாறையில் 6 இராணுவ முகாங்களிலுமாக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் செறிவற்ற பல பிரதேசங்கள் தென்னிலங்கையில் காணப்படுகின்றன. மத்தளை விமான நிலையம் போன்ற வசதியுள்ள இடங்கள் இருக்கின்ற நிலையில், ஏன் வடக்கு கிழக்கில் அதிகமான தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? இதிலும் ஒரு ஆக்கிரமிப்பு மனநிலையையும் பாரபட்ச மனநிலையும் அரசு வெளிப்படுத்துகிறது. தமிழர்களின் பகுதி என்பதால் அவர்களுக்கு நோய் ஏற்படட்டும் என்ற பாரபட்சத்தின் வெளிப்பாடா என்றே மக்கள் ஐயம் கொள்ளுகின்றனர்.

வடக்கு கிழக்கில் பல பிரதேசங்கள் கொரோனா அபாயமற்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன. வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் முதலிய மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது சில பாடசாலைகளை கையகப்படுத்த இராணுவத்தினர் முனைகின்றமை மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றை கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. கொரோனா அபாயத்தால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றைக் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்தினால் பிற்காலத்தில் மாணவர்கள் சுகாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதே மக்களின் அச்சமாகும். அத்துடன் தமது பகுதியில் உள்ள மக்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனாவை தடுக்க எல்லோரும் வீட்டில் இருங்கள் என்கிறது அரசு. இது இராணுவத்திற்கும் பொருந்துமல்லவா? அதனை கைக்கொள்ள மறுத்தமையினாலேய இப்போது கடற்படையினர் கொரோனாவின் பிடிக்குள் அகப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பது, தமிழ் மக்களை பல வகையிலும் அச்சுறுத்துகின்ற விசயமாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையை மாத்திரமின்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மாத்திரமின்றி, அவர்களின் மனநிலையை பாதிப்பது மாத்திரமின்றி, இதுபோன்ற நோய் தொற்று அபாய காலத்தில் உயிருக்கும் அச்சுறுத்தலானது. இராணுவ நீக்கம் என்பது மக்களின் வாழ்வுக்கு எந்தளவு அவசியம் என்பதையும் கொரோனா உணர்த்துகின்றது.

தமிழ்க்குரலுக்காக கவிஞர் தீபச்செல்வன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)