இன்று திங்கட்கிழமை முதல் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இரவு வேளையில் ஊரடங்கு தொடர்ந்தாலும் கொரோனா தொற்று தடுப்பில் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்றெண்ணி மேற்கு நாடுகள் சில மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி மூக்குடைபட்ட பின்னர் இலங்கை – அதுவும் தொற்று சமூகமயமான பின்னர் இந்த முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சிகரமானது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட.
இந்நிலையில், இயல்புநிலைக்குத் திரும்பும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம், தொற்றுநோய் தடுப்பில் ஈடுபடும் மருத்துவ நிபுணர்கள், உள்ளூர் – சர்வதேச சுகாதார அமைப்புக்கள் வலியுறுத்தியும் அவை அனைத்தையும் புறமொதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான காரணமாக தேர்தலை சுட்டிக்காட்டினாலும் உண்மை நிலை அதுவல்ல. தேர்தல் நாள் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசு இயல்பு நிலையை அவசரப்பட்டு ஏற்படுத்தும் நிலையில் இல்லை. பொருளாதாரம், அபிவிருத்திப் பாதிப்பு என்று விடயங்களில் உண்மை நிலை நீடித்தாலும் இயல்பு நிலையை அவசர அவசரமாக ஏற்படுத்தியதில் மறைந்துள்ள மர்மம் ஒன்றுதான். அது தொற்றுக் காரணமாக படைத்தரப்புக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் என்பதே.
இயல்பு நிலை பற்றிய அறிவிப்பை வெளியிடும் முன்னர், சில தடவைகள் முப்படைகளின் உயர் பீடத்தினரும் – அரச உயர் தலைமைகளும் சந்தித்துப் பேசினர். இந்த இரகசிய சந்திப்பில் பேசப்பட்டவை என்னவென வெளிவராத போதிலும் அந்தச் சந்திப்புக்களில் பேசப்பட்ட விடயம், கொரோனா தடுப்புப் பணியில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டும் என்பதே என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
தொற்றுப் பரவ ஆரம்பித்தபோது, அரசாங்கம் துரிதமாக செயற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தும் திட்டம் பின்பற்றப்பட்டது. தெற்கிலும் வடக்கு, கிழக்கிலும் இதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டதும் எதிர்ப்புப் போராட்டங்கள் கிளம்ப ஆரம்பித்தன. தெற்கில் அமைக்கப்படும் முகாம்களை முதலில் குறைத்துக் கொண்ட அரசாங்கம் வடக்கு, கிழக்கில் முகாம்களை அதிகரித்தது. அமைக்கப்பட்ட முகாம்கள் 24 மணி நேரமும் இராணுவக் கண்காணிப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழர்களும் இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகளை மெச்சினர். இதனால் இராணுவமும் அரசும் புளகாங்கிதம் அடைந்தன. காரணம் புலம்பெயர் தமிழர்களும் தங்களின் சேவையை மதிக்கின்றனர் – கௌரவிக்கின்றனர் என்பதே.
கண்ணுக்குத் தெரியாத கிருமிக்கு எதிரான போராட்டத்தை போர் களத்தில் எதிரியை சந்திப்பது போன்று நினைத்தவாறு ஆயுதம் ஏந்தியவாறு வீதிகளில் ரோந்து கிளம்பியது இராணுவம். மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். தொற்றாளர்கள் சிலர் பதுங்கினர். அவ்வாறு பதுங்கியவர்களை எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி வெலிசறை முகாம் கடற்படையினர் பிடித்துச் சென்று மருத்துவமனைகளில் சேர்த்தனர். கடற்படையினருக்கு கொரோனா தொற்றிய பின்னர்தான் தாம் தொட்டது தீயை என்பதை படைத்தரப்பு உணர்ந்தது. ஆனால், அதற்குள் விடயம் பூதாகரமாகி விட்டது.
சமூகமயப்பட்ட தொற்று படைத்தரப்பை உலுப்ப ஆரம்பித்தது. இராணுவத்தினர் வீதியில் செல்ல அஞ்சத் தொடங்கினர். இந்த விவகாரம் படைத் தரப்புக்குள் அதிகமாகவே சிப்பாய்கள் – கீழ்நிலை அதிகாரிகள் சிறிது முரண்டு பிடிக்கத் தொடங்கினார்கள். ஆட்சிப் பீடத்தில் ராஜபக்ச குடும்பத்தவர்கள் தவிர வேறு யார் இருந்திருந்தாலும் ஆரம்பத்திலேயே இந்தப் பணியை இராணுவம் தட்டிக் கழித்திருக்கும். ஆனால், ராஜபக்சக்கள் வசம் அதிலும் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இது அவர்கள் மீதான அச்சம் என்பதை விட மரியாதை என்று கொள்வதே பொருத்தம். அது பற்றி இங்கு விவரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
படைத் தரப்புக்குள் கொரோனா தொற்று இனங்காணப்பட்டது தொடர்பில், கொழும்பிலேயே வாழும் ஊடகவியலாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார். “வீதியில் ரோந்து செல்லும் இராணுவத்தினரின் முகங்களை நான் தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் பயம் – அச்சம் கலந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. கண்ணுக்குத் தெரியாத கிருமியுடன் போரை இராணுவம் தடுப்பது எப்படி? மிக ஆபத்தான இந்தப் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்த ராஜபக்ச தரப்பினரைத் தவிர வேறு யார் ஆட்சியில் இருந்தாலும் முடியாத காரியம். அது எங்கள் வேலை இல்லை என்றுவிட்டு இராணுவம் முகாம்களுக்குள் முடங்கியிருக்கும் – மீறி செயற்படுத்தினாலும் இப்போது ஏற்பட்டது போன்ற தொற்றுப் பரவியிருந்தால் அது ஒன்றே ராஜபக்ச தரப்பு மீள ஆட்சிக்கு வருவதற்கு வழிவகுக்கும் காரணமாக இருந்து விடும்” என்றார்.
அரச தரப்புடன் – குறிப்பாக ராஜபக்ச தரப்புடன் மிக நெருக்கமாகப் பழகும் அந்த ஊடகவியலாளரின் கருத்துக்கள் பலத்த சந்தேகங்களைக் கிளப்பின. அது மட்டுமின்றி இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் அவரது கருத்துக்கள் மறைமுகமாக உறுதி செய்தன.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து பாதுகாப்புத் தரப்பால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டன. ஆனால், அது குறித்து அவர் முதலில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஆனால், படைத்தரப்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 என்ற எண்ணிக்கையை நெருங்கியபோது, (நேற்றைய நிலவரப்படி படைத்தரப்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 427) என்று கூறுகின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
இந்த விவகாரம் மேலும் முற்றிப் பூதாகரமாக வெடித்து விடக்கூடாது என்பதனால் – இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவதற்காகவே அவசர அவசரமாக நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டது. மீறி தொற்று நிலைமை நீடித்தால், முரண்டுபடும் இராணுவத்தினர் வேறுமுயற்சிகளில் ஈடுபடலாம். இது ஆட்சியில் இருப்பவர்களுக்கு சிக்கலைக் கொடுத்து விடலாம். அது மட்டுமின்றி இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் கொடுத்த வேலையுமாகி விடும். எனவே நாட்டில் ஆபத்து என்று தெரிந்தாலும் இராணுவத்தைக் காப்பாற்ற – கொரோனாவால் இராணுவம் குழப்பத்தில் அல்லது விபரீத முடிவுகளில் ஈடுபட்டு விடாமல் இயல்பு நிலையை பிரகடன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இராணுவத்தை முற்றாக முகாம்களுள் முடக்கி விட்டு பொலிஸார் ஊரடங்கை அமுல்படுத்தும் திட்டம் குறித்தும் சிந்திக்கப்பட்டது. இதற்காக பெரும் எண்ணிக்கையான பொலிஸார் தேவைப்படுவர். அதனால் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு பாதிப்புக் குறைந்த பகுதிகளில் இராணுவம், பொலிஸாரை பாதுகாப்புக்கு நிலைநிறுத்தியும் – ஆபத்துக் குறைந்த பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸார் வெறுமனே பாதுகாப்புப் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ராஜபக்ச தரப்பின் இந்த காய் நகர்த்தல் வெற்றியளிக்குமா? அல்லது நிலைமை மேலும் விபரீதமாகுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-தமிழ்க் குரலுக்காக கரிகால்வளவன்
(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)