சுமந்திரன் : நல்லவரா? கெட்டவரா?

ma nallavarakettavara scaled
ma nallavarakettavara scaled

தமிழர் அரசியல் மட்டுமல்ல இலங்கையின் அரசியலும்கூட இந்த அகால வேளையிலும் ஒருவரை நோக்கியே கூர்மைப்பட்டுள்ளது.

அவர், அறிமுகம் தேவையில்லாத அரசியல்வாதி மட்டுமல்ல, தமிழர் விவகாரத்தை – சிங்கள அரசுடன் – தென்னிலங்கை அரசியல் சக்திகளுடனும் இவ்வளவும் ஏன்? சர்வதேச சக்திகளுடனும்கூட கையாள வல்ல – கையாளும் இராஜதந்திரி. இலங்கையின் அதிதிறமைமிகு சட்ட அறிஞர்கள் என்று பார்க்கும்போது முதல் வரிசைக்குள் இருப்பவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் – பொதுத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு யாழ். மாவட்டத்தில் மூன்றாவது விருப்பு வாக்குப் பெற்று – நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் மதியாபரணம் ஆப்ரகாம் சுமந்திரன் என்ற எம். ஏ. சுமந்திரன்.

இத்தகைய பெருமை – வரவேற்பு என்று எல்லாமே அவரைச் சுற்றியிருந்தாலும், நாட்டைப் பிரிக்கும் புலி என்று சிங்கள மக்களாலும் இனத்தை விற்கும் துரோகி என்று தமிழர்களாலும் குற்றஞ்சாட்டுக்கள் சுமக்கும் நபரும் இவர்தான். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களில் பலருக்கு இவர் ஒரு புரியாத மனிதராக – மர்ம மனிதராகவே இருக்கிறார். இவர் மட்டுமல்ல இவரது உரை – பேச்சும்கூட தமிழ்த் தேசிய விரோதம் கலந்ததாக தெரிந்தாலும் – தனது மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே – பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துபவர். இவரது பேச்சுக்கள் சர்ச்சையாவதும் – அதுபற்றிக் கண்டும் காணாமலும் சென்றுவிடும் இவருக்கு மக்கள் மத்தியில் “சுத்துமாத்து” சுமந்திரன் என்றும் பெயர் உண்டு. இது அவருக்கும் நன்கு தெரியும்.

இவ்வாறு பலவிதமாக மக்களால் அறியப்பட்ட சுமந்திரனைச்  சுற்றித்தான் இப்போது இலங்கை அரசியல் நன்றாக சூடுபிடித்து உள்ளது. இதற்கு அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு (ஹிரு தொலைக்காட்சிக்கு) வழங்கிய நேர்காணலே. அந்த செவ்வியைக் கண்டவர் சமுதித்த என்பவர். இவர் தென்னிலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் மட்டுமல்ல ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருந்தபோது அவரின் ஊடகப் பிரதானியாகவும், தயாசிறி ஜயசேகர விளையாட்டு மந்திரியாக இருந்தபோது அவரின் ஊடகச் செயலாளராகவும் இருந்தவர் மட்டுமல்ல. தமிழர்களுக்கு எதிராக இனவாதம் கக்கும் சிங்கள ஊடகவியலாளர்களிலும் இவருக்கும் பிரதான இடமுண்டு.

தவறு எங்கே?

அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட வினாவொன்று “நீங்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அரசியல் நடவடிக்கையை – ஆயுத நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா? ” என்பதே அதற்கு அவர் “இல்லை. நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று பதிலளித்திருந்தார். இந்த நேர்காணலை மொழிபெயர்த்த யாழ். ஊடகம் ஒன்று “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?” என்று கேள்வியையும், அதற்கு சுமந்திரன், “இல்லை நான் ஒருபோதும் ஏற்கவில்லை” என்பதாகவும் மொழிபெயர்த்திருந்தது. இதுவே பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர், தமிழ் அரசியல்வாதிகள் பொங்கியதும் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதும் அனைவரும் அறிந்த கதைதான்.

இந்த நேர்காணல் குறித்து, சுமந்திரன் என்னதான் விளக்கம் கூறினாலும் தமிழ்த் தேசியவாதிகள் அதனைக் கேட்கும் செவிமடுக்கும் நிலைப்பாட்டில் இல்லை. மொழி பெயர்ப்புப் பிழை என்று கூறினாலும், தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்காமையே காரணம். அவர் விளக்கமளிக்க மறுத்தமைக்கு அவரின் நெஞ்சில் இருக்கும் வஞ்சமா? அல்லது தென்னிலங்கை சக்திகள் மீது கொண்ட விசுவாசமா? காரணம் என்பதே இப்போதைய பெருங்கேள்வி. இந்தக் கேள்விக்கு சுமந்திரன் பின்னர் அளித்த விளக்கவுரை காணொலியிலும், அவருக்கு ஆதரவாக சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையிலும் அந்த விடயங்கள் பற்றி சரியான தெளிவுபடுத்தல் இல்லை. பூசி மெழுகிய அது தன்னுடைய,  சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்பதுதான் மேலோங்கி இருந்தது.

ஆனால், இங்கு விடயம் தனிப்பட்ட சுமந்திரனை சமுதித்த நேர்காணல் செய்யவில்லை. அவர் நேர்கண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை – அதுவும் தமிழரின் விடுதலைப் பயணத்திற்காக அரசியல் வழியில் போராட விடுதலைப் புலிகள் உருவாக்கிய கட்சியின் பேச்சாளரை. அதுமாத்திரமின்றி 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற தமிழ் மக்களின் பிரதிநிதியை. அவர் தனது சுயவிருப்பு வெறுப்பு இன்றி அந்த வினாவுக்குப் பதிலளித்திருக்க வேண்டும் என்பதுதான்.

சுமந்திரன் கூறியது போன்று சிங்கள மக்கள் மத்தியில் “என்னை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனவாதியாக காட்ட முயற்சிக்கவே” அந்த நேர்காணல் என்று குறிப்பிடுகின்றார்.

ஆனால், அந்த வினாவுக்கு தலையைத் தொங்கப் போட்டு விளக்கமளிக்க அவர் மறுத்தபோதே, தமிழர்கள்தான் ஆயுதம் தூக்கினார்கள் – அவர்களால்தான் இந்த நாடு யுத்தத்துக்குள் மூழ்கி சொல்லொணா துன்ப, துயரங்களை சந்தித்தது என்ற கருத்தையும் – சிங்களவர்களின் மனதில் உள்ள தமிழர்களுக்கு இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவர்களுக்கு அதிகாரம் தேவையில்லை தமிழர்கள் நாட்டைப் பிரிக்கவே முயல்கிறார்கள் என்ற பதிவை ஏற்படுத்தி விட்டார்.

தலைவர் பிரபாரகரன் ஆயுத நடவடிக்கையை ஆரம்பித்தமைக்குக் காரணம் சிங்கள ஆட்சியாளர்களே என்பதைப் பதிவு செய்ய மறுத்ததன் மூலம் – அதைத் தனது தனிப்பட்ட கருத்தாக மாற்ற முனைவதன் மூலம் அவர் எடுத்துக் கொண்ட தமிழர் பிரச்சினைத் தீர்வு என்பதையே அர்த்தமற்றதாக்கிக் கொண்டுள்ளார் அவர் என்பது ஏன் இன்னமும் சுமந்திரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் புரியவில்லை? அல்லது புரிந்தும் புரியாததுபோல செயற்படுகின்றனரா? என்பதற்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

அகிம்சை வழியினரா ஜே.வி.பியினர்?

அதேநேரத்தில் இன்னொரு விடயத்திற்கும் அவர் பதிலிறுக்க வேண்டிய அவசியம் உண்டு.

ஜே.வி.பியினருக்கு அனுதாபியாக செயற்படும் சுமந்திரன் 1990 களில் சிறைகளில் இருந்த ஜே.வி.பியினருக்காக வாதாடினேன் என்று கூறியிருக்கிறார். ஜே.வி.பியினரின் மே தின ஊர்வலத்தில் பங்கேற்பதை கௌரவமாகக் கருதுகிறார். முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் விடயத்தில் இரு மனநிலைகளில் செயற்படும் சுமந்திரன் ஜே.வி.பியினருடன் மட்டும் நெருங்கிச் செயற்படக் காரணம் என்ன?

அவர்கள் ஆயுதம் தரிக்காத அகிம்சைவாதிகளா? பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகித்த தோழர் பாலன் “இப்போதும்கூட ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்றோ அல்லது ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்றோ ஜே.வி.பி. கூறவில்லை. இந்த ஜே.வி.பி. இயக்கம் நடத்திய ஊர்வலத்தில் கலந்து கொண்டமையை பெருமையாகக் கூறுகிறார். தமிழ் இளைஞர்கள் நடத்திய ஆயுதப் போராட்டத்தைத் தவறு என்று கூறும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் நடத்திய ஜே.வி.பியின் ஊர்வலத்தில் கலந்து கொண்டதை எப்படிப் பெருமையாகக் கூற முடியும்?”, என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு சுமந்திரனின் விடை என்ன என்பதைப் பகிரங்கமாகக் கூறுவாரா சுமந்திரன்?

தவிர, புலிகளை மன்னிக்க முடியாத குற்றவாளிகளாகப் பார்க்கும் சுமந்திரனின் நீதி தராசு (?) புலிகள் விவகாரத்தில் தாழ்ந்து உயர்வது ஏன்,?

ஆயுதவழி வந்த ஜே.வி.பியுடன் கூடிக்குலாவும் சுமந்திரன் விடுதலைப் புலிகளை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதன் மர்மம் என்ன என்பதும் புரியாத புதிர்தான். சரி அதைத் தவிர்த்து தமிழரின் போராட்டத்தை ஜே.வி.பியினர் ஆதரித்தார்களா என்றால் அதுவும் இல்லை. தமிழர் பிரச்சினைத் தீர்வுக்காக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட காரணமானவர்கள் ஜே.வி.பியினர். தமிழர்கள் விடயத்தில் அதிக இனவிரோதம் கக்குபவர்களில் அவர்களும் முக்கியமானவர்கள்.

இன்னொரு நீலன், கதிர்காமர்?

இலங்கைத் தமிழர்களின் அதிதிறமை சட்ட அறிஞர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் அவர்களின் மூளை தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு பயன்தருவதில்லை என்பது கடந்த கால வரலாறு. லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணம். இருவரும் தமிழர்களாக இருந்தபோதும் அவர்களின் மூளை ஒருபோதும் தமிழினத்தின் நன்மைக்காக செயற்பட்டதில்லை. ஆரம்பத்தில் சுமந்திரனின் செயற்பாடு அவ்வாறு இருக்கவில்லை. ஆனாலும், காலப் போக்கில் அவரின் செயற்பாடுகள் அவ்வாறே அமைந்துள்ளன என்பதே யதார்த்தம்.

அமிர்தலிங்கம் வழி அரசியல்?

பல இயக்கங்களுக்கு மத்தியில் அரசியல் செய்தவர் அன்றைய தமிழரசுக் கட்சியின் – தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம். இந்திய வல்லரசின் அழுத்தம் – இலங்கை அரசின் அழுத்தம் – இயக்கங்களின் அழுத்தங்கள் என்று அவர் சந்தித்த நெருக்குதல்கள் அதிகம்.

அழுத்தங்கள் அதிகரிக்கும்போது, அவர் தன்னை சந்திப்பவர்களை “நான் அரசியலில் இருந்து விலகப் போகிறேன்”, என்று கூறுவார். இது தொடர்பில் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறினார், “விலகப் போகிறேன்… விலகப் போகிறேன்… என்று கூற வேண்டும். அப்படிக் கூறினால் எவரும் அழுத்த மாட்டார்கள். ஆனால், அரசியலை விட்டு விலகப் போவதில்லை” என்று கூறினார்.

இதேபோன்று, நேர்காணல் விவகாரத்தால் தன்னைச் சந்தித்த சிலரிடம் அரசியலில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறியிருக்கிறார் சுமந்திரன். இது சிலரின் காதுகளுக்குப் போகும் விதத்தில் அவர் பார்த்துக் கொண்டார். இப்போது, அதில் வெற்றியும் கண்டுள்ளார். அது சம்பந்தனின் அறிக்கை.

தந்தை செல்வாவின் பெயரால்…!

இந்த விவகாரத்தை தந்தை செல்வாவின் பெயரால் அணைக்க முயற்சி செய்கிறார் சுமந்திரன். தமிழர்களுக்கு வரலாறு தெரியாது அல்லது வரலாற்றை மறந்து விட்டார்கள் என்பது அவரது எண்ணமோ என்று புரியவில்லை.

சர்ச்சையின் பின்னர், விளக்கவுரை காணொலியை வெளியிட்ட சுமந்திரன் அதில் மாவை சேனாதிராசாவுக்கு பதிலளிப்பதாகக் காட்டிக் கொண்டு தமிழர்களின் காதில் பூ சுற்றும் வேலையைப் பார்த்தார். “எங்களுடைய கட்சி அகிம்சைக் கட்சி. எங்களின் கட்சி ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்டவர். இன்றைய கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா வெளியிட்ட அறிக்கையிலே இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார். அதிலே உத்தமசிங், பகத்சிங் ஆகியோருக்காக நேரு வாதாடிய போது, காந்தி இங்கிலாந்துக்கு எழுதிய கடிதத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார். அந்தக் கடிதத்திலே இவர்களுடைய வழிமுறைகளோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர்களுடைய அர்ப்பணிப்பை நான் மதிக்கிறேன் என்று எழுதியிருந்தார் என்று. நானும் அதைத்தானே சொல்கிறேன். இன்றைக்கா நேற்றா சொல்கிறேன். பல வருடங்களாக சொல்கிறேன். அந்த முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை”, என்பது சுமந்திரனின் விளக்கம்.

தந்தை செல்வா காட்டிய வழி

ஆனால், தந்தை செல்வா தமிழர் உரிமைக்காகப் போராடியபோது, சட்டவழிப் போராட்டத்தை நடத்தினார். சிங்கள அரசுடன் ஒத்துழைத்து அரசியல் நடத்தினார். இறுதியாக தீவிர அறவழிப் போராட்டங்களை நடத்தினார். அவை எதுவும் பலனற்றுப் போன நிலையில்தான், நாடாளுமன்றத்தில் இறுதி உரை ஆற்றியபோது, “எங்களுடைய இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள்” என்று நோய்பிணியிலும் வயது மூப்பின் மத்தியிலும் உரத்துக் குரலெழுப்பினார். அவரின் உரையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் அனைத்து சிங்கள அரசியல்வாதிகளும் மிக உன்னிப்பாக அவதானித்தனர். அவர் சிங்கள அரசு தமிழருக்கு உரிமைகளை தரப்போவதில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான். சிங்கள இனவாதிகளுக்குப் புரியும் மொழியில் இளைஞர்களை நடக்க ஆசிர்வதித்தார்.

அப்பேர்பட்ட தலைவனின் வழிவந்த கட்சியில் – ஆயுதப் போராட்டத்தை ஆசிர்வதித்து – வழிகாட்டிய தலைவனின் கட்சியைச் சேர்ந்த ஒருவர் – 58 ஆயிரம் வாக்குகள் மூலம் தெரிவாகி – ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குரலாக ஒலிக்க வேண்டியவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி பதிலளித்திருப்பது ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் சரியாகி விடாது.

தமிழர்களின் கடமை

சுமந்திரனின் கொள்கை வழியில் இருந்து இம்மியும் பிசகாத கொள்கை வழிகொண்ட சம்பந்தனின் அறிக்கை சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்கலாம். ஆனால், தமிழ்த் தேசியத்தின் பெயரால் – தந்தை செல்வாவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தலைவர் பிரபாகரனினதும் – தமிழரின் விடுதலை என்ற இலட்சியக் கனவுடன் சாவினைத் தழுவிய ஆயிரம் ஆயிரம் வீரர்களின் ஆன்மாவும் – இந்த விடுதலைப் போரில் ஆகுதியாகிப் போன 3 இலட்சம் தமிழ் மக்களின் ஆன்மாவும் ஒருபோதும் இதனை மன்னிக்கவோ ஏற்கவோ மாட்டா.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில், தலைவர் பிரபாகரனிடம் ஒரு போராளி ஒரு நபரைக் குறிப்பிட்டு பேசினார். ஊர்ச் சண்டியரான அவரின் துணிச்சல் குறித்துக் கூறினார். அதற்குத் தலைவர் பின்வருமாறு பதிலளித்தார். “எங்களுக்கு வல்லவர்கள் தேவையில்லை. நல்லவர்களைத் தாருங்கள் அவர்களை நான் வல்லவர்களாக்கிக் காட்டுகிறேன்” என்றார். அந்த மாபெரும் தலைவனின் வழிகாட்டுதலில் நடந்த தமிழினம்,

“சுமந்திரன் போன்றவர்களை களையெடுத்து நல்லவர்களை – தமிழ்த் தேசியத்தின் வழி நடப்பவர்களை – மக்களின் பிரச்சினைகளை தீர்க்க திடசங்கற்பம் கொண்டவர்களை –  மக்கள் பணியில் உண்மையாக செயலாற்ற வல்லவர்களை” தெரிவு செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளது.

தமிழ்க்குரலுக்காக கரிகால்வளவன்