தலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62!

vayathu62 scaled
vayathu62 scaled

இன்றைய நாள் (மே 22) ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கரிநாள். ஆனால், பிரபாகரன் என்ற வரலாற்றுப் பெருந் தலைவனைத் தந்த நாளும் இன்றைய நாள்தான்.

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார் அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க. இதற்கு எதிராகத் தமிழர்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் குதித்தனர்.

தொடர் போராட்டங்களை அடக்க வன்முறையைக் கையில் எடுத்தது சிங்கள தேசம். நாடு முழுவதும் இருந்து சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கு எதிராக அட்டகாசங்களைத் தொடங்கினர்.

கொழும்பு, அநுராதபுரம், பொலநறுவை, குருநாகல், காலி எனப் பல இடங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் – யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் – தாக்கப்பட்டார்கள் – வெட்டப்பட்டார்கள் – உயிருடன் தீயிட்டு எரிக்கப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல சித்திரவதைகளின் பின்னர் அவர்களை கொதிக்கும் தார் பரல்களுக்குள் போட்டும், ரயர்களைப் போட்டும் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

தமிழர்களை விரட்டியடித்து – கொன்று குவித்து அடாவடிகள் புரிந்த சிங்களக் காடையர் கும்பல்கள் தமிழர்களின் சொத்துக்களை சூறையாடத் தொடங்கின. அவர்களின் வீடுகளில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் அனைத்தும் அந்தக் கும்பல்களால் எடுத்துச் செல்லப்பட்டன.

கல்லோயாவில் 150 தமிழர்களை கொன்றொழித்து, அவர்களின் வாழ்விடங்களை கைப்பற்றியதுடன் தொடக்கி வைக்கப்பட்ட இந்தக் கலவரம் மே, 22 ஆம் நாளில் பொலநறுவையில் ஆரம்பமாகிப் நாடு முழுவதும் பரவியது. பஞ்சம்பிழைக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என தமிழர் தேசங்களுக்கு வந்த சிங்களவர்களும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்புடன் தாக்குதல்களை தொடங்கினார்கள். நாடு முழுவதும் விரிவடைந்த இந்தக் கலவரம்தான் இலங்கையில் தமிழினத்துக்கு எதிராக நாடு பூராவும் நடத்தப்பட்ட முதலாவது இனக்கலவரமாகும். 1977, 1983 எனப் பின்னாளில் நாடு முழுவதுமாக விரிவடைந்த இனப் படுகொலைகள் – கலவரங்களுக்குத் தாய்க் கலவரமும் இதுவேதான்.

1958 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பொலநறுவை, அநுராதபுரம் பகுதிகளில் தமிழ் மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் வாழ்ந்தனர். திருகோணமலையில் கப்பல் துறையில் வேலை இழந்த 400 பேரின் குடும்பங்களை அன்றைய பண்டாரநாயக்க அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் குடியேற்ற முனைந்தது. இது தற்காலிகக் குடியேற்றமே. குடியேற்ற முனைந்த அதே கட்சியினரே தமிழர்களுக்கு எதிராகக் கலவரங்களையும் தொடக்கி வைத்தனர். அங்கிருந்த தமிழ் மக்களை விரட்டியடித்தது சிங்கள தேசம். கரும்புத் தோட்டங்களுக்குள்ளும் பண்ணைகளுக்கும் ஒளித்தார்கள் தமிழர்கள். அவற்றுக்கு நெருப்பிட்டு தங்கள் இனவெறியை தீர்த்துக் கொண்டது காடைக்கும்பல். அந்த நெருப்பில் சிலர் தப்பிப் பிழைத்தாலும் பலர் எரிந்து சாம்பலாகினர்.

இந்தக் கலவரங்களுக்கு எதிராக அரசாங்கம் எந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அப்போது மகாதேசாதிபதியாக இருந்த சேர் ஒலிவர் குணதிலக கலவரங்களைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், அவை எல்லாம் வெறும் பெயருக்கே இருந்தன. பொலிஸாரும், இராணுவத்தினரும் அந்தச் சட்டத்தை மதிக்கவேயில்லை. மாறாக அவர்கள் சிங்களக் காடையர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள்.

பெரும் தனவந்தர்களாக இருந்த தமிழர்கள் பலர் இந்தக் கலவரத்தில் அனைத்தையும் இழந்தவர்களானார்கள். பலர் அங்கவீனர்களாகினர். உடுத்த உடையுடன் மாத்திரம் ஏராளமான தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அரசின் அறிவிப்பின்படி 20 ஆயிரம் பேர் இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை இதனிலும் அதிகம் என்றே கூறப்படுகின்றது.

இவ்வாறு சொந்த மாகாணங்களுக்கு ஏதிலிகளாக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தங்குளுக்கு நேர்ந்தவற்றை – தாங்கள் நேரில் கண்டவற்றை இங்குள்ள மக்களுக்குத் தெரிவித்தார்கள். இந்தக் கதைகளை கேட்டவர்களில் சிறுவனாக இருந்த பிரபாகரனும் அடக்கம். தமிழர்கள் உயிருடன் தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் அந்தச் சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. இந்தச் சம்பவம்தான் தனது இனத்தின் விடுதலைக்கு – இனம் அனுபவித்த துன்பங்களுக்கு – அழிக்கப்பட்ட – அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினத்தைக் காக்க ஆயுத வழியை நோக்கி சிந்திக்க வைத்தது. உண்மையில் இந்தக் கலவரத்தில்தான் ‘தலைவன் பிரபாகரன்’ பிறந்தார்.

1958 இனவழிப்பில் – இனச் சுத்திகரிப்பில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 300 தொடக்கம் 1500 வரை என்கின்றன சுயாதீன தகவல்கள். ஆனால், அரசாங்கமோ 158 பேரே உயிரிழந்தனர் என்று பதிவு செய்ததது. இந்தப் பாரம்பரியத்தை முள்ளிவாய்க்கால் படுகொலை வரை உண்மையான எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதே அதன் பாரம்பரியமாக உள்ளது.

1958 மே 22 இனவழிப்பு தொடங்கி இன்றுவரை பல கலவரங்களை – வன்முறைகளை – இனப்படுகொலைகளை – இனச் சுத்திகரிப்புக்களை தமிழினம் கண்டுவிட்டது. ஆனால், சிங்களமும் தமிழர்கள் மீதான வன்மமும் இன்னமும் மாறவில்லை. தமிழர்களின் உரிமை வேட்கையும் இன்னமும் ஓயவில்லை.

-தமிழ்க்குரலுக்காக கரிகால்வளவன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)