ஈழத் தமிழருக்கான தீர்வினை எட்டுதல் : புரிந்துணர்வுடனான தீர்வு

.png
.png

தமிழினத்தின் உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த மூலவர்களுள் ஒருவரான தியாகி பொன். சிவகுமாரன் முதல் வித்தாக வீழ்ந்து இன்றுடன் (ஜூன் 05) 46 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அவரைப் பின்பற்றித் தமிழினத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரமாக மாவீரர்கள் வீரச்சாவைத் அணைத்துக் கொண்டார்கள்.

தமிழர் விடுதலையின் மிகப் பெரும் சக்தியாக – தமிழர்களின் காப்பரணாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலுடன் மௌனித்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இறுதி யுத்தத்தின்போது, தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கும் – கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க்குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இன்றுவரை நீதியும் கிட்டவில்லை. அதேநேரம், உரிமைகளின்றி – எந்தத் தீர்வுமின்றி – இறுதியில், நீதியும் மறுக்கப்பட்ட -மறுக்கப்படும் இனமாக, நிர்க்கதியாகி நிற்கின்றது ஈழத் தமிழினம்.

இந்நிலை மாறி, தமிழினம் வரித்துக் கொண்ட சுயநிர்ணய உரிமையை – உரிமைகளுடன்கூடிய சாதாரண வாழ்வை, தமிழினம் அடைய வழி என்ன என்பதே இன்று எழுந்துள்ள வினா.

தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுக்கான வழிகளை ஆராய்வதற்கு ஈழத் தமிழினத்தின் விளிம்பு நிலை வரலாற்றை ஒருமுறை மேலோடுவது உகந்தது.

வரலாற்றில் தமிழர் தேசம்

இலங்கையின் சுதந்திர வரலாற்றைத் தவிர்த்து, அதற்கு முன்னைய – இரண்டாயிரம் ஆண்டுகால இலங்கையின் நீண்ட வரலாற்றில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே இலங்கை ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அதிலும், சுமார் 150 ஆண்டுகள் அந்நியரான பிரித்தானியரின் ஆட்சிக் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பியரான போர்த்துக்கேயரின் வருகையின்போது, இலங்கை மூன்று இராச்சியங்களாக இருந்தது. சிங்களவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த கோட்டை இராச்சியத்தை முதலிலும், தமிழரின் இராச்சியமாக விளங்கிய யாழ்ப்பாணத்தை அடுத்ததாகவும் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றினர். ஆனால், அவர்கள் இந்த இராச்சியத்தை ஒன்றிணைக்கவில்லை. இனம், மொழி, கலாசாரம் – பண்பாட்டால் என்று, பலவற்றாலும் வேறுபட்டு நின்ற இந்த இரு தேசங்களையும் தனித் தனியாகவே ஆட்சி செய்தனர்.

தமிழ் பேசும் மக்களாக இஸ்லாமியத் தமிழர்களாக அதுவரை இருந்த முஸ்லிம்களை தனி இனமாக அடையாளப்படுத்தியவர்களும் இவர்களே. இதன் மூலம், இலங்கையின் இனங்களை அவர்கள் எவ்வாறு வகுத்துப் பேணி ஆட்சி செய்தனர் என்பதற்கு இது ஓர் உதாரணம். அவர்களின் பின் வந்த ஒல்லாந்தரும் இதே வழிமுறையையே பின்பற்றினர்.

எனினும், பின்னர் வந்த பிரித்தானியர்கள் மற்றைய ஐரோப்பியரின் ஆட்சிக்குள் அகப்படாத மலையக இராசதானியையும் கைப்பற்றி ஆட்சியமைத்தார்கள். அவர்களே இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர். தமது நிர்வாகத்தை இலகுவாக்க அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாகாண முறைமையால், தமிழர் பிரதேசங்கள் பல சிங்கள தேசத்திடம் பறிபோனது. அன்று சுதேசிகளின் ஆட்சியே மலர வேண்டும் என்ற நோக்கோடு தமிழ், சிங்களத் தலைவர்கள் ஒன்றிணைந்திருந்தனர். அதனால், அன்று தமிழர்கள் தங்கள் தாயகம் பறிபோவதை எதிர்த்துப் போராடவில்லை. அன்றைய நிலையில், தனி இன நலன்கள் முக்கியம் கொள்ளப்படவுமில்லை. எனினும், இதற்கான விலையை தமிழர்கள் சிறிது காலத்திலேயே கொடுக்க நேர்ந்தது.

1947 சோல்பரி அரசியல் யாப்பு மூலமாக சுதேசிகளின் கை ஆட்சியில் ஓங்கியது. அப்போதே சிங்கள தலைமைகள் தமிழர் நிலங்களை குடியேற்றங்கள் என்ற பெயரில் அபகரிக்கத் தொடங்கி விட்டன.

திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை அப்போதைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். குடியேற்ற நிலத்தில் அரச மரம் ஒன்றை நாட்டி வைத்த அவர், குடியேறிகளான சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றியபோது, “இந்த மரம் வளர்ந்து பெரிதாகும்போது இந்த மாவட்டத்தில் நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும்” என்றார். இவர் பற்ற வைத்த நெருப்புத்தான், அன்று கந்தளாயில் கலவரமாக வெடித்தது. சுதந்திரம் பெறுவதற்கு முன்னமே, பெருந்தேசிய இனத்தின் கைகளில் அதிகாரம் கிடைத்த உடனேயே தமிழருக்கு எதிரான திட்டங்களும் – கலவரங்களும் ஆரம்பமாகி விட்டன. கல்லோயா திட்டம் முளைத்தது.

மறுபுறத்தில், ‘சிங்களம் மட்டும்’ சட்டம் பிறந்தது. தமிழ் புறக்கணிக்கப்பட்டது. இலங்கை நாடு சிங்கள – பௌத்தர்களுக்கு மட்டுமே என்பதாக அரசியலமைப்புக்கள் இரு தடவைகள் மாற்றி எழுதப்பட்டன. பல்கலைக்கழக அனுமதி என்ற பெயரில் இனப் பாகுபாடு அறிமுகமானது. அன்று, சிறுபான்மை இனங்கள் ஒன்றாக இணைய மறுத்தன. இணைந்தவைகளும் அரசின் சூழ்ச்சிகளுக்குள் வீழ்ந்து போயின.

தூய தமிழ்த் தேசிய வாதம்

ஈழ வரலாற்றில் தமிழினத்தின் – தமிழ் பேசும் மக்களின் போராட்டம் என்பது உண்மையில் ஒன்றாகவே ஆரம்பித்தது. 1957களில் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை தமிழரசுக் கட்சி முன்னெடுத்த போது, மலையகத் தமிழர்கள் இணைந்து நின்றார்கள். முஸ்லிம் மக்களும் ஆதரித்தே நின்றார்கள். 1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அத்திவாரம் இடப்பட்டு, ஐக்கிய தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்டபோது, வடக்கு – கிழக்கு தமிழர்களின் செல்வாக்கைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகியவற்றுடன், அன்று மலையகத் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து நின்றது.

1972இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிறிமாவோ அரசாங்கம் பறித்தபோது, தங்களின் பிரச்னைகள் வேறு என்றும், அரசுடன் இணைந்தாலே தாம் வாழ முடியும் என்றும் உணர்ந்த மலையகத் தமிழர்களின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டைமான், குறுகிய காலப்பகுதிக்குள்ளாகவே பிரிந்து போனார் – அரசுடன் இணைந்து கொண்டார். இதனால், தாயகத் தமிழர்கள் – மலையகத் தமிழர்களின் இணைப்பு சாத்தியமற்றுப் போனது.

இதேபோன்று, தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து இயக்கங்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, முஸ்லிம்களும் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பல விடுதலைப் போராட்ட இயக்கங்களில் – குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பில் முஸ்லிம்களும் இணைந்தே போராடினார். தமிழ் பேசும் இனத்தவனாக, கப்டன் ஜோன்சன் என அழைக்கப்பட்ட ஜூனைதீன் (1985) வீழ்ந்தபோது, இரண்டு இனங்களின் ஒற்றுமையும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டமாக, குறுகிய காலத்திலேயே தமிழினம் தனித்துப் போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், 2009 போர் வரை தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களித்த முஸ்லிம்களும் இருக்கவே செய்தனர். அதுவரையான மாவீரர் பட்டியலில் முஸ்லிம்களின் பெயரும் இடம்பெறவே செய்தது.

ஆனால், 2009இன் பின்னரான சூழ்நிலையையும், அதற்கு முன்னைய சில சம்பவங்களையும் சரியாக இணைத்துப் பார்க்கையில் சிறுபான்மை இனங்கள் – தமிழ் பேசும் மக்களாக இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் தமிழர்களின் ஆரம்பகாலக் கோரிக்கையான சமஷ்டி என்றழைக்கப்படும் கூட்டாட்சி முறைமையை ஏற்படுத்தியிருந்திருக்கலாம். ஆனால், சூழ்நிலைகளும் – அரசின் தந்திரோபாயங்களும் அதற்கு இடமளிக்கவில்லை.

ஆனாலும், பிற்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்க ஆரம்பித்தபோது, மலையகத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கவே முயன்றனர். ஆனால், அதுவும் கைகூடவில்லை. சமாதானப் பேச்சின்போது தமிழ்த் தரப்பில் முஸ்லிம்கள் சேர விரும்பினர். அதேநேரம், அரசாங்கத்தின் பக்கமும் அதே இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் பேச முற்பட்டதால், ஒரு தரப்பில் மட்டுமே இருக்கலாம் என்ற நிபந்தனையை புலிகள் முன்வைத்ததால் அவர்கள் அரசாங்கத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

எது எப்படி இருப்பினும், இன்று தாயகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, மலையகத் தமிழர்கள் – முஸ்லிம்களும் உரிமைகள் பெற்று, இந் நாட்டில் தமது இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரித்து அனைவருக்கும் உண்டு. ஒரு மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில், தமது தேசியத்தைப் பிரதிபலித்துக்கொண்டு, தமிழ் பேசும் சக்தியாக இவர்கள் இணைவதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளவும், இலங்கை அரசின் எதேச்சதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தவும் – சர்வதேச அழுத்தம் ஒன்றை விரைந்து ஏற்படுத்தவும் முடியும்.

மூன்று சிறுபான்மை இனங்களும் ஒன்றிணைவதன் மூலம் இலங்கை நாடாளுமன்றில் 40 – 45 ஆசனங்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும். நாடாளுமன்றில் இந்தக் கூட்டிணைவு, அரசாங்கத்தை அச்சமூட்டவும் – அதேசமயம் அரசின், எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறவும், இதன் மூலம் இந்த இனங்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும்.

தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம்

தமிழர்களின் உரிமைகளுக்காக அரசியல் வழியில் தீர்வு காண முயற்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் தமக்குள் முரண்பட்டு பிளவுண்டுள்ளன. தமிழ் பேசும் மக்களின் நன்மைக்காக அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்றிணைவதன் மூலம் பல விடயங்களை சாதிக்க முடியும். நாடாளுமன்றிலும் அதீத பலத்தைப் பெற முடியும். ஆனால், அது முடியாத பட்சத்தில், தமிழ்த் தேசியத்தின் வழியில் இன்று பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போன்றவையேனும் ஒன்றிணைந்து செயற்படுவதும் – தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்வதும் அவசியமாகின்றது.

சர்வதேச ஒத்துழைப்பை பெறல்

நாட்டில் ஒன்றிணைந்து -கூட்டாக சிறுபான்மை இனங்கள் செயற்பட்டாலும், அதிகாரத்தைப் பகிர்வை அவ்வளவு இலகுவாக சிங்கள – பௌத்த பேரினவாதம் தந்துவிட மாட்டாது. உள்நாட்டில் சிறுபான்மை இனங்கள் ஜனநாயக வழிப் போராட்டங்களையும், அரசாங்கத்துக்கு அழுத்தங்களையும் பிரயோகிக்கும் அதேநேரம், இலங்கை அரசின் மீது சர்வதேச ரீதியிலான அழுத்தங்களையும் – நெருக்கடிகளையும் இராஜதந்திர ரீதியாக ஏற்படுத்த வேண்டும்.

இன்று, தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகம் வாழும் கனடா, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் அரசியல் பலம் பெற்றவர்களாகவும், சக்தி வாய்ந்த உயரதிகாரிகளாகவும், வியாபாரப் பெரும் புள்ளிகளாகவும்கூட உள்ளனர். பரந்துபட்டு வாழும் இவர்கள் அனைவரும் தாயக மக்கள் உரிமைகளைப் பெற நிச்சயம் உதவுவார்கள். இவர்களை ஓரணியாக ஒன்றிணைத்து, தாங்கள் வசிக்கும் நாடுகளின் அரசுகள் மூலமாகவும் – சர்வதேச அமைப்புக்கள் மூலமாகவும் பலமான அழுத்தம் ஒன்றை இலங்கை அரசுக்கு ஏற்படுத்த முடியும். உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தப்படும் நெருக்கடியை நிச்சயமாக இலங்கையால் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில், இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச நாடுகளின் கைகளிலேயே உள்ளது.

இந்தியா பரிந்துரைத்த 13

இன்றைய உலகில், இந்தியாவும் – சீனாவும் வேகமாக வளர்ந்து வரும் வல்லரசு நாடுகள். ஆசிய பிராந்தியங்களில் இந்த இரு நாடுகளையும் சாதகமாகக் கையாள்வதும் தமிழர்களின் பிரச்னைத் தீர்வுக்கு வழிவகுக்கும். ஈழத் தமிழர்களுடனான இந்தியாவின் நல்லுணர்வு என்பது கசப்பு நிறைந்தது. எனினும், அதனை நீக்கி, இந்திய உறவைப் பலப்படுத்த நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும். அதேநேரம், தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக, இந்தியாவின் செல்வாக்கினால் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் ஏற்கவே இந்தியா இன்றும் வற்புறுத்துகிறது. அதேநேரம் இலங்கை அரசுக்கும் அது அழுத்தம் கொடுக்கிறது.

இன்றிருக்கும் நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவதும், அதற்கு இந்தியாவின் அனுசரணையை தமிழர் தரப்பு கோருவதும் சிறப்பானதாக இருக்கும். ஆனால் அதேவேளை, தமிழர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருத்தல் வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நெடுந்தூர பயணத்தில் தங்குமடம் போன்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு தமிழ் – முஸ்லிம் – மலையகத் தமிழர்களுடனான உறவை வலுப்படுத்தி ,அனைத்து சிறுபான்மை இனங்களும் இந்நாட்டில் தமது விதியைத் தாமே எழுதக்கூடிய மார்க்கம் நோக்கி சிந்தித்தல் – அது நோக்கி நகர்வது சிறப்பானது.

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தல், காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெறுதல் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வது. இந்த முயற்சிக்கு நிச்சயம் இந்தியாவின் ஆசியும் இருக்கும் நிலையில், அவர்களை தமிழர் தரப்பு தந்திரோபாயமாகக் கையாண்டு, தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கத் தூண்ட முடியும்.

13ஆவது திருத்தச் சட்டம் பல குறைபாடுகள் நிறைந்தது. எனவே, அதனை வலுப்படுத்தக் கோருவதுடன், மலையக தமிழர்களான இந்திய வம்சாவழித் தமிழர்களின் நலன்கள் – உரிமைகளில் இந்திய அரசு அக்கறையுடன் இருக்கும். சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து செயற்படும்போது, மலையகத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் இந்தியாவை சிறுபான்மை சமூகங்கள் தமக்கு சாதகமாகக் கையாள முடியும்.

பரஸ்பர விட்டுக் கொடுப்புக்கள்

தீர்வு முயற்சி – சமாதான ஒப்பந்தம் என்று தமிழர் தரப்புக்களை இலங்கை அரசு கையாண்டு வந்தது. தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்று தொடர்ந்த இலங்கை அரசின் சமாதான ஏய்ப்பு நடவடிக்கைகள் இப்போதும் இரா. சம்பந்தனிடமும் தொடர்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு கால அவகாசத்தைப் பெற்றுத் தருவதில் விட்டுக் கொடுப்புக்கள் நிறையவே இருந்தன. அதன் பலனை இலங்கை அரசாங்கம் அறுவடை செய்தபோதிலும், தமிழர் தரப்பு எந்த நன்மையையும் அடைய முடியவில்லை. தொடர்ந்து ஏமாற்றங்களே விஞ்சி நிற்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும்வேளைகளில் இலங்கை அரசின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். அந்தச் சந்தர்ப்பங்களின்போது, அரசியல் கைதிகளின் விடயம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை மிகத் தீவிரமாகக் கையாள்வதும், அவர்களின் விடுதலை – பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் தந்திரோபாயத்தை வகுப்பதும் இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர உதவும்.

இதே பாணியிலேயே சர்வதேச அனுசரணையுடன் தீர்வு முயற்சியை கையாளல். அந்நேரங்களில் சில விட்டுக் கொடுப்புக்களை – யதார்த்தபூர்வ அணுகுமுறைகளிலான விட்டுக் கொடுப்புக்களை செய்வதன் மூலம், இலங்கை அரசை தமிழர்களுக்கான தீர்வு வழிக்கு வரவைக்க முடியும்.

சிங்கள மக்களை தெளிவுபடுத்தல்

தமிழருக்கு இப்போதுள்ள – யதார்த்தபூர்வ வழி, சமஷ்டி என்றழைக்கப்படும் கூட்டாட்சியே. ஆனால், சிங்கள மக்கள் சமஷ்டி என்பது பிரிவினை அல்லது தனிநாடு என்றே கருதுகின்றனர். சிங்கள இனவாத சக்திகளும் – சிங்கள ஊடகங்களும் இதனையே அந்த மக்களுக்குப் பிரசாரம் செய்து வருகின்றன.

ஆனால், சமஷ்டி ஆட்சி என்பதை சிங்கள மக்களின் அபிமான தலைவரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவே முதலில் முன்வைத்தார். 1927இல் ` Federal Government of Ceylon’ என்ற கட்டுரையை ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியிருந்தார். ஆனால், அவரது சமஷ்டிக் கோரிக்கை ஏற்கப்படாமலே போயிற்று. பின்னாளில், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் சமஷ்டியையே முன்வைத்தது. விடுதலைப் புலிகளும்கூட உயர் அதிகாரப் பகிர்வுடன்கூடிய கூட்டாட்சியை பரிசீலிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், சிங்கள மக்கள் அதற்குத் தயாராகவில்லை.

சிங்கள மக்களிடம், சமஷ்டி என்பது கூட்டாட்சியேயன்றி, அது பிரிவினையோ அல்லது தனிநாடோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டம் ஒன்று அவசியமாகின்றது.

பெரும்பான்மை மக்களான அவர்களின் மனமாற்றம் இங்கு முதன்மையாகிறது. அதேநேரம், கூட்டாட்சி முறைமை மூலம் பிராந்திய சிங்கள மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் தெளிவுபடுத்துவதன் மூலம் தமிழர்கள் தங்கள் தீர்வுப் பாதையை இலகுபடுத்த முடியும். அத்துடன், சிங்கள மக்களிடத்தில் தமிழ் மக்கள் மீதான நம்பிக்கையையும் நல்லுறவையும் ஒருசேர கட்டமைக்க வேண்டிய தேவையும் உண்டு.

முடிவுரை

“போராட்ட வடிவங்கள் மாறாலாம் போராட்ட இலட்சியம் மாறாது”, என்பது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் உதிர்த்த வசனம். இதனை மனதிருத்தி தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் வழியை அடைய – கூட்டாட்சி முறைமையை நோக்கி நாட்டை அழைத்துச் செல்ல, முதலில் கூட்டாட்சிப் பண்பு கொண்ட 13ஆவது திருத்தத்தை முழுமையாகக் கோருவதும், அதன் வழியே சிறுபான்மை சமூகங்களை ஒன்றிணைத்து கூட்டாட்சி உரிமைக்காகப் போராடுவதும், ஏக காலத்தில் உள்நாட்டு – சர்வதேச அழுத்தங்களை -நெருக்கடிகளை உருவாக்குவதும், இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சக்திகளை தமிழர்களுக்கு ஆதரவாக அல்லது தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண சிங்கள அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கச்செய்வதுமான இவற்றுக்கு ஏற்றதான விதத்தில் தமிழர் தரப்பு சில துரும்புகளை – தந்திரோபாய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழினத்தின் நன்மைக்காகப் பயன்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவதும், சிறுபான்மை இனங்களை ஒன்றிணைத்து கூட்டாட்சி நோக்கி இலங்கை அரசை நகர்த்துவதும், அதற்காக உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்துவதும் இன்று தமிழர் – தமிழ் பேசும் மக்கள் முன்னுள்ள ஒரே வழியாகும்.

-தமிழரசன்


(பொன்.சிவகுமாரன் ஞாபகார்த்தமாக, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை எட்டுதல் என்ற கருப்பொருளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்ற கட்டுரை)