மட்டக்களப்பின் ஆளுமை வ.நல்லையாவின் ஜனன தினம் இன்று

nallaiah
nallaiah

நேற்றைய நிகழ்வுகள் இன்றைய நினைவுகளால் மீட்டெடுக்கப்படுகின்ற வேளையில் அங்கே மானிடம் வெற்றி கொள்கிறது. மட்டக்களப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வ.நல்லையா அவர்கள் 1909 ஐப்பசி 10ம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் சிங்களவாடியில் வல்லிபுரம், அன்னம்மாவிற்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்கு 04 மூத்த சகோதரிகள் உண்டு. மட்டக்களப்பில் பெரும் வித்தியாதரசியாக பணியாற்றிய யாழ்ப்பாணம் மல்லாகத்தினைச் சேர்ந்த முத்தையா தங்கரெத்தினம் அவர்களை காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு 4 பிள்ளைகள்( நளினி, ராதாகிருஸ்ணன், சிவகுமார், சூரியகுமார்)

“ஏறுபோல் வீறு நடை கொண்ட மாஸ்டர் அவர்கள் வெள்ளை வேட்டியுடன் சால்வை சரசரக்க தெருவில் நடற்தால் கூடி நிற்கும் மக்கள் கூட்டம் திரும்பிப பார்க்காமல் இருக்க முடியாது” என நல்லையாவினுடைய வசீகரத் தோற்றம் பற்றி முதுபெரும் தமிழறிஞரான எவ்.எக்ஸ்.சி.நடராசா குறிப்பிடுகிறார்.

நல்லையா அவர்கள் தனது தொடக்க கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியிலும் மேல்நிலைக் கல்வியை புனித மைக்கேல் கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு தேஸ்டன் கல்லூரியுடன் இணைந்திருந்த ஆங்கி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக வெளிவந்தார். இலண்டன் பல்கலைக்கழக கலைமானிப் பரீட்சையிலும் தேறினார். 1960ம் ஆண்டு வழக்கறிஞர் பரீட்சையில் சித்தியடைந்து வழக்கறிஞரானார்.

ஆசிரியராக 14 வருடங்கள் பணியாற்றிய நல்லையா அவர்களின் அரசியல் வாழ்க்கையானது உள்ளூர் அரசியலிலிருந்து ஆரம்பமாகிறது. 1938-1943 வரை நகரசபை உறுப்பினராக கடமையாற்றினார்.

அதன் பின்னர் 1943ல் மட்டக்களப்பு வடக்கு பிரதிநிதி திரு.ஈ.ஆர்.தம்பிமுத்து பதவியிழக்க அவ்வெற்றிடத்திற்கான இடைத்தேர்தலில் களமிறங்கி வெற்றிபெற்று 1943-1947 வரை அரசாங்க சபை உறுப்பினராக கடமையாற்றினார். அதன் பின்னர் மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் 1947, 1952 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

நல்லையா அவர்கள் தேர்தல்களில் களமிறங்குகின்ற வேளையில் அவரிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவன

“நல்லையா மாஸ்டர் என்று
நாவால் உரைத்திட்டாலும் கல்லும்
கரையுமடி கிளியே
கவலையும் தீருமடி கிளியே”

“கைக்குப் புள்ளடி
குருவிக்குப் பொல்லடி”
(குருவிச்சின்னத்தில் போட்டியிட்ட தேவநாயகத்தினை எதிர்த்து இடம்பெற்ற பாடல்)

1952 இன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக 1965இல் நல்லையாவினுடைய அரசியல் வாழ்க்கை முற்றுப்பெற்றது.

நல்லையாவினுடைய 12 வருட அரசியல் வாழ்க்கையில் பல்வேறு குறிப்பிடத்தக்க பணிகளை தனது ஆளுமை மூலமாக ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவையாவன

ஜே.ஆர்.ஜெயவர்தனா அவர்களால் இலங்கையில் ஆட்சி மொழியும் கல்வி மொழியும் சிங்களத்திற்கு மாற்றப்படல் வேண்டும் எனும் பிரேரணைக்குப் பதிலாக “சிங்களமும் தமிழும்” எனும் திருத்தத்தினை பரிந்துரைத்து வெற்றிபெறச் செய்திருந்தார்.

மட்டக்களப்பில் கழிவாகிப்போன வைக்கோலை சந்தைப்படுத்தவும், நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கவும், கடதாசி வேலையில் ஓரளவு தன்னிறைவை பெறவும் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் துணை கொண்டு வாழைச்சேனையில் கடதாசி ஆலையினை நிறுவியமை.

மட்டக்களப்பு-மன்னம்பிட்டி பாதையினை புனரமைத்து கொழும்பிற்கான பயணத்தினை துரிதமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு செய்து முடித்திருந்தமை.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் முகமாக ஓட்டமாவடிப் பகுதியில் பிறைன்துரை குடியேற்றத்தினை அமைத்துக் கொடுத்திருந்தமை. தற்போது பிறைன்துறை என அழைக்கப்படுகிறது.

1943 இல் கல்விக்குழுவில் அங்கம் வகித்து இலவசக்கல்வி சார்ந்த தமது சிந்தனைகளை வழங்கியிருந்தமை.

1952இல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியை நிறுவியமை. அது தற்போது கிழக்குப் பல்கலைக்கழகமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலை நல்லையா மற்றும் மட்டக்களப்பு தெற்கு பிரதிநிதி எஸ்.தருமரெத்தினம் ஆகிய இருவரின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டு 1941இல் அதன் முதலாவது அதிபராக செயற்பட்டமை.

ஒரு கல்லில் இரு மாங்காய் போன்று அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, அரசினர் கல்லூரி( தற்போது இந்துக்கல்லூரி) ஆகியவைகளை தோற்றுவித்திருந்தமை.

இவை தவிர பல்வேறு பாடசாலைகள், வைத்தியசாலைகள். நீர்ப்பாசன திட்டங்களின் விஸ்தரிப்பு, குடியேற்ற திட்டங்கள், என்பவைகளை அமைத்துக் கொடுத்தமையுடன் பல்வேறு பதவிகளையும் அலங்கரித்து பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லையா அவர்கள் மெழுகுவர்த்தி போல் தன்னை அழித்து பிறருக்கு ஒழியூட்டி மட்டக்களப்பு வரலாற்றில் தன்ககென ஒரு தனியிடத்தை பிடித்துக்கொண்ட ஆளுமை. இந்த மண்ணின் விழிம்புகள் வரை பயணித்த மனிதரும், நல்லையா அவர்கள் பன்முக ஆளுமை கொண்ட மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு மனிதராக விளங்கியவர்.

பிறப்பு விதியென்றால் இறப்பும் விதியே, மானிடம் மரணிப்பது மனிதத்தின் முடிவல்ல, அதன் மெய்யியல் வாழ்விற்கும் அதுவே தவம், மனித வாழ்வு ஒரு அவசர நிகழ்வின் அடையாளம், நிகழ வேண்டிய அனைத்தும் நிகழ்ந்துவிட்டால் அதுவே வாழ்க்கை என்றாகி விடுகிறது.

இவ்வாறு கிழக்கில் உதயமாகிய நல்லையா அவர்கள் தனது 67வது வயதில் 1976 டிசம்பர் 27இல் மேற்கில் (கொழும்பு) மறைந்து விடுகிறார்.

-தயா பவித்ராஜ்-