மகா நடிகன் சிறீதரனின் பச்சோந்தி அரசியல்!

பார்வை சிறீ
பார்வை சிறீ

நடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டனர், தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்பது காசி ஆனந்தனின் பிரபல கவிதை வரிகள். இந்தியாவிலும் தமிழகத்திலும் நீண்ட கால மிதவாத அரசியல் காணப்படுகின்ற சூழலில் இது யதார்த்தமான வரிகள்தான். ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடங்கிய மிதவாத அரசியலில், தமிழகத்தின் நடிகர் திலகங்களை மிஞ்சும் மகா நடிகர்கள் உருவாகியிருப்பது வியப்புத்தான். இன்னும் எத்தனை தசாவதாரங்களை காண நேரிடுமோ?

மூச்சுக்கு முந்நூறு தரம் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிவிட்டு, ரணில் ஒரு நரி, கருணாவை பிரித்து, எங்கள் மண்ணை சிதைப்பதில் பங்காற்றியவர் என்றும் ரணிலுக்கு வாக்களிப்பவர்கள் துரோகிகளே என்றும் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின்னர், ரணில் முதுகை தடவிக் கொடுக்க சிரித்துக் கொண்டு நின்ற சிறீதரனின் மகா நடிப்பும் பச்சோந்தித்தனமும் மீண்டும் வெளிப்படுவதை அண்மைய அரசியல் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

அண்மையில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக வன்மங்களை கக்கியிருந்தார். அப்போது, விடுதலைப் புலிகளைப் பற்றி யார் பேசினாலும் அதற்கு நான்தான் பதில் அளிப்பேன் என்ற மாதிரியும், விடுதலைப் புலிளை பற்றி பேச எனக்கு மாத்திரமே தகுதி உண்டு என்றும் காட்டிக் கொண்டிருந்த சிறீதரன் வாய்கட்டுப் போட்ட நாய்க்குட்டியாக மாறியிருந்தார். இது பற்றி பலரும் கேள்வி எழுப்பியபோதும் அவர் கள்ளமெனத்தில் இருந்தார்.

விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான அன்பும் ஈடுபாடும் கொண்ட ஒருவர் அவ்வாறு மௌனியாக இருக்க மாட்டார். தலைவர் பிரபாகரன் மீது உண்மையான பற்றும் உறுதியும் கொண்ட ஒருவர் அப்படி கோழையாக அடங்கியிருக்க முடியாது. தனது அரசியலிருப்பு மற்றும் எதிர்கால வருவாய்களை கருத்தில் கொண்ட ஒருவரால்தான் சுமந்திரனை பகைத்து எதிர்காலத்தில் கட்சியின் இருப்பை பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கில் மௌனியாக கோழையாக மூச்சுக்காட்டாமல் இருக்க முடியும்.

இது பற்றி அன்றைக்கு தமிழ்க்குரல் கேள்விகளை எழுப்பியிருந்தது. வழமைபோல ரணிலின் ஆள், கோத்தாவின் ஆள் என்று கண்ணை மூடிக் கொண்டு சூரியனை நோக்கி கல்லெறியும் சிறுவனைப் போல சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட சிறீதரன், இப்போது ஒரு மகா நடிகன் என்ற தன் அரசியல் நாடகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அண்மையில் தீவகத்திற்கு எம்.ஏ. சுமந்திரனுடன் சிறீதரன் அரசியல் பிரசாரத்திற்கு சென்றுள்ள புகைப்படங்கள், சிறீதரனின் கபடமான பச்சோந்தி அரசியலை வெளிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம்மீதும் அதன் தலைமை மீதும் எந்த பற்றும் சிறீதரனுக்கு இல்லை என்பதும் சுமந்திரன் பற்றே இருக்கிறது என்பதும் சுமந்திரனின் சிங்கள ஆதரவு கருத்துக்களே சிறீதரனின் கருத்தும் நிலைப்பாடும் என்பதையும் இப் புகைப்படங்களும் கூட்டும் நன்றாக புலப்படுத்துகிறது.

சுமந்திரனுக்கு கிடைக்கும் வாக்கு தனக்கும் கிடைக்கும் என்பதும் தனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள் கிடைக்க வேண்டும் என்றால் சுமந்திரனை பகைக்கக்கூடாது என்பதுமே சிறீதரனின் அணுகுமுறை. விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனுடன் இணைந்து அரசியல் செய்வதும், சிங்களப் பேரினவாதக் கட்சியில் நின்று அரசியல் செய்வதும் ஒன்றுதான். வெளிப்படையான துரோகத்தை செய்யும் சுமந்திரனைக் காட்டிலும் சிறீதரன் ஆபத்தானவர் என்பதை அண்மையகால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

கிளிநொச்சியில் தன்னை மீறி சுமந்திரனை ஆதரித்தவர்களை துரோகிககள் என்றார் சிறீதரன். சிலரை கட்சியில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இன்றும் சுமந்திரன் துரோகி என்று, சிறீதரனின் அன்றைய வார்த்தைகளை நம்பி சமூக ஊடகங்களில் கம்பு சுற்றும் சிறீதரன் ஆதரவாளர்களும் உள்ளனர். தன்னை மீறி சுமந்திரனை ஆதரித்தவர்கள், துரோகி என்றுவிட்டு, இன்று சுமந்திரனின் அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் தேர்தல் பிரசாரம் செய்வது அவரை நம்பிய ஆதரவாளர்களுக்கு செய்யும் பெரிய துரோகமல்லவா?

பிரபாகரன் புகழ்பாடி இதுவரை அரசியல் செய்த சிறீதரன், தற்போது தனது அரசியலை காப்பாற்றிக்கொள்ள, சுமந்திரனுடன் இணைந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் தன்னை தோற்கடித்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்கத் தயார் என்று கூறியிருப்பது சுமந்திரன்மீதான பக்தியால் அல்ல. அன்றைக்கு பிரபாகரன்மீதான பக்தியால் அவரை புகழ்ந்திருந்தால், இன்று சிறீதரனிடம் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. அன்றைக்கு தனது அரசியலுக்காக பிரபாகரன் பெயர் உச்சரித்த வாய், இன்று சுமந்திரன் அடுத்த தலைமையாக வந்தால் தனது அரசியல் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே கண்மூடித்தனமான சுமந்திரன் பக்தியை வெளிப்படுத்துகிறது.

சுமந்திரன்மீது, யாழ்ப்பாண நகரத்தில் செருப்புமாலை அணிவித்து, பல்வேறு இணையங்களிலும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு, அவரது கூட்டங்களுக்கு வெறும் ஐந்தாறுபேர்கள் சேருகின்ற நிலையிலும் தோல்வியை தழுவிவிடுவேனா என சுமந்திரன் அஞ்சுகின்ற நிலையிலும் அவரது பாதங்களை பற்றி அரசியல் செய்து தன்னை காப்பாற்ற முயல்கிற ஒருவர் தமிழ் மக்களின் விடிவுக்கும் உரிமைக்கும் உண்மையாக ஒருபோதும் செயற்பட முடியாது. சுமந்திரனை தவிர்க்கும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், சிறீதரனையும் தவிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)