நீதியரசர் விக்னேஸ்வரன் தோற்கடிக்கப்பட்டால்…?

Samakaala paarvai
Samakaala paarvai

தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாக வடக்குமாகாண தேர்தல் களத்தில் இம்முறை தமிழ்த் தேசியத்திற்கான வாக்குகளைப் பங்குபோடுவதில் கடும் போட்டி நிலவுகின்றது. கடந்த பத்து வருடங்களாக தமிழ் மக்களை வைத்து சூதாடிய சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பினர், தமக்கே மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். மக்கள் மத்தியில் வீட்டுச் சின்னத்திற்கே அமோக ஆதரவு இருப்பதான பிரச்சாரமொன்றை முடுக்கி விட்டிருக்கின்றனர். தங்களிடமுள்ள பணபலத்தின் காரணமாக அவர்களால் கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்ய முடிகின்றது. தமிழ் மக்கள் மாற்றுத் தலைமையை தோற்கடிக்க வேண்டுமென்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அண்மையில் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார். உண்மையில், நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை எப்பாடுபட்டேனும் தோற்கடிக்கவேண்டும் என்பதைத்தான் சம்பந்தன் மறைமுகமாக குறிப்பிடுகின்றார்? ஏன் சம்பந்தன் இந்தளவிற்கு ஆவேசம் கொண்டலைகின்றார்?

நீதியரசர் விக்கினேஸ்வரனின் தோல்வியை சிங்கள இனவாதிகளும் விரும்புகின்றனர் அதேவேளை, சுமந்திரன் – சம்பந்தன் அணியும் விரும்புகின்றது. ஏன்? இந்தக் கேள்விக்கான விடையை தேடவேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர். சிறிலங்காவின் நீதித்துறையில் 40 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டிருப்பவர். சிறிலங்காவின் நீதித்துறையிலுள்ள பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்தவர். இவ்வாறான ஒருவர் தமிழ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கியொலித்தால், அது சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு பெரும் சவாலாக அமையும். அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒருகட்சியின் தலைவராகவும் விக்கினேஸ்வரன் இருக்கின்றபோது, சர்வதேசரீதியிலும் தமிழ் மக்களின் தனித்துவமான குரலாக அவரால் இருக்கமுடியும். இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை சம்பந்தன் – சுமந்திரன் அணி விரும்பவில்லை.

ஏன் விரும்பவில்லை? ஏனெனில் – விக்கினேஸ்வரன் அவ்வாறானதொரு தகுதியை அடைந்துவிட்டால், சுமந்திரன் இதுவரை மேற்கொண்டு வந்த சுத்துமாத்து அரசியலை தொடர்ந்தும் செய்யமுடியாமல் போய்விடும். அத்துடன், தாம்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் – தாம் கூறுவது மட்டும்தான் சரியானதென்று சர்வதேச சமூகத்திற்கு கதை சொல்லமுடியாமல் போகும். ஏனெனில், இதனை தவிடுபொடியாக்கும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்படுவார். இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதை விக்கினேஸ்வரன் சர்வதேச அரங்குகளில் ஓங்கியொலிப்பார். இதனால், தற்போது பல்வேறு தரப்புக்களாக சிதறிக்கிடக்கும் தமிழ் புலம்பெயர் சமூகம் முற்றிலுமாக விக்கினேஸ்வரனின் பின்னால் அணிதிரளும். இதன் காரணமாக தாயகத்தையும் புலத்தையும் இணைக்கும் ஒருதலைவராக விக்கினேஸ்வரன் மாறுவார்.

இதனை சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு விரும்பவில்லை. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் இதுவரை தாங்கள் போலித்தனமாக கூறிவந்த பல விடயங்கள் அம்பலத்திற்கு வந்துவிடுமென்று இவர்கள் அஞ்சுகின்றனர். இதனால் எப்பாடுபட்டேனும் விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் சென்றுவிடக் கூடாதென்று ஒற்றைக் காலில் நின்று பணியாற்றுகின்றனர். மாற்று அணியை தோற்கடியுங்கள் என்று மக்களிடம் கூறுகின்றனர். வாக்குகள் சிதறிவிடுமென்று போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றனர். இதுவரை வாக்குகள் சிதறாமல் இருந்ததால், தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மையென்ன? கூட்டமைப்பால் எதனையாவது உருப்படியாக செய்து காட்டமுடிந்ததா? இல்லையே! மேலும் வாக்குகள் சிதறி, அரசாங்கத்தோடு நிற்கும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு செல்வது தவறானது ஆனால் தமிழ்த் தேசியத்தில் உடும்புப்பிடியான உறுதியைக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரனுக்கும், அவரது தலைமையை ஏற்றிருப்பவர்களுக்கும் மக்களின் வாக்குகள் செல்வதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. இதனை நமது மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். மேலும் கூட்டமைப்பு என்னும் பெயரில் மக்கள் முன்னால் வருகின்ற அனைவரும் நேர்மையான தேசியவாதிகள் இல்லை. இதனைஅவர்கள் கடந்தகாலத்தில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

விக்னேஸ்வரனை தோற்கடிக்க வேண்டுமென்று சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு முயற்சிப்பதற்கு பின்னால் பிறிதொரு காரணமும் இருக்கின்றது. அதாவது, இதுவரை சம்பந்தன்தான் தமிழ் மக்களின் தலைவராக வலம் வந்துகொண்டிருக்கின்றார். இதனால் தான் நினைப்பதையெல்லாம் கேள்வியின்றி செய்து வந்தார். ஆனால் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்றுவிட்டால், அதனை சம்பந்தனால் செய்யமுடியாது. ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர், வயதிலும் அனுபவத்திலும் சம்பந்தனுக்கு நிகரானவர், கொழும்பில் உயர்வர்க்கத்தினருக்கு நன்கு தெரிந்தவர், ஆங்கிலப் புலமையில் சம்பந்தனுக்கு நிகரானவர் – இப்படியான பல தகுதியுள்ள ஒருவர் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக இருக்கின்றபோது, சம்பந்தனால் போலியாக தமிழ் மக்களின் தலைவராக இருக்கமுடியாது. விக்னேஸ்வரனை எப்பாடுபட்டேனும் தோற்கடிக்க வேண்டுமென்று, சம்பந்தன் வெறிகொண்டு அலைவதற்கு பின்னால் இருக்கின்ற மிக முக்கியமான காரணம் இதுதான். உண்மையில் சம்பந்தனுக்குள் இருக்கின்ற தலைமைத்துவ வெறி இப்போது ஒரு தலைமைத்துவ நோயாக மாறிவிட்டது.

உண்மையில் நீதியரசர் விக்கினேஸ்வரன் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் என்ன நடக்கும்? இப்படியொரு கேள்வி பலருக்கும் எழலாம். சுமந்திரனின் சதிக்குள் நமது மக்கள் அகப்பட்டு ஒருவேளை, விக்னேஸ்வரன் நாடாளுமன்றம் செல்லமுடியாது போகுமானால், பின்வரும் விடயங்களை நமது மக்கள் இழக்க நேரிடும்.

இறுதியுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராக பேசக் கூடிய ஒரு ஆளுமைமிக்க, நேர்மையான, உறுதியான குரலை தமிழ் மக்கள் இழந்து போவர்.

• தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கான வரலாற்று வாய்ப்பை தமிழ் மக்கள் இழந்துபோவர்.

• விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்குமாகாண முதலமைச்சராக இருந்தபோது, வரலாற்றுச் சிறப்புமிக்க இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியவர். அவ்வாறான ஒருவர் சுமந்திரனின் சதியால் தோற்கடிக்கப்பட்டால், இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்களை வடக்கு மாகாண தமிழர்கள் மறுத்துவிட்டனர் என்னும் முடிவுக்கு சர்வதேச சமூகம் வருவதற்கான வாய்ப்பை நாமே வழங்கியவர்களாவோம். இதனால் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை சர்வதேச அரங்குகளில் பலவீனப்படும்.

• சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு தாம் நினைத்தவற்றையெல்லாம் செய்யக் கூடிய ஒரு நிலைமை மீண்டும் ஏற்படும். தமிழ்த் தேசிய அரசியல் மெல்லச்சாகும்.

நமது மக்கள் தமது சுயகௌரவத்தை பாதுகாப்பதற்காக விக்கினேஸ்வரனை வெற்றிபெறச் செய்யப் போகின்றார்களா? அல்லது சுமந்திரனின் சதிவலைக்குள் சிக்கித்தமிழ்த்தேசியத்தின் சிதைவிற்கு துணைபோகப்போகின்றார்களா?

இனி முடிவு நமது மக்களிடம். 

-தமிழ்க்குரலுக்காக கரிகாலன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)