அலையில் எழுந்த நரிகள்!

alaiyil eluntha narikal
alaiyil eluntha narikal

1977ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் இரு பேரலைகள் எழுந்தன. வடக்கு கிழக்கில் தனி நாட்டுக்கோரிக்கை என்ற பேரலை எழுந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வாறே தென்னிலங்கையில் ஜே.ஆர். அலையெழுந்து தென்னிலங்கையில் மாபெரும் தேர்தல் வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுத்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்கு அந்தப் பெரும்பான்மையை அடைய வழிவகுத்தது.


தானுண்டு தன் தொழிலுண்டு என வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்த இரா.சம்பந்தனை காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் சட்டத்தரணிகள் கட்சி என்ற மரபின் அடிப்படையில் திருமலை தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நிறுத்தினார். தனி நாட்டுக் கோரிக்கை அலை சம்பந்தனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கியது. பல்கலைக்கழக கல்வியை முடித்துவிட்டு இருந்த ரணில் விக்கிரமசிங்கவை அவரது மாமனார் 1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். அன்று எழுந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அலையில் மிக இளைய நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் புகுந்துகொண்டார். பேரலைகளால் தூக்கி அரசியல் அரங்கில் ஏற்றப்பட்ட இருவருமே பல கட்டங்களைத் தாண்டி இப்போது அரசியல் நரிகளாக உருவெடுத்துள்ளனர்.


ஒருவர் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் மற்றவர் சிங்கள மக்களின் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த போதும் இருவருமே ஒத்த பல குணாம்சங்களைக் கொண்டவர்களாகவிளங்கி வருகின்றனர். மக்களையோ மக்கள் கருத்துக்களையோ தமது அணியைச் சேர்ந்த சக அரசியல்வாதிகளின் கருத்துக்களையோ பொருட்படுத்தாமல் சர்வாதிகாரப் போக்கில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில் சிறிது கூட இவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. நம்பவைத்து கழுத்தறுப்பதிலும், கூட இருந்து குழி பறிப்பதிலும் இருவருமே மிகுந்த ஆற்றல் பெற்றவர்கள், பல சமயங்களில் அதே குழிகளில் அவர்களும் விழுவதுண்டு. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இவர்கள் எந்த மோசமான முடிவுகளையும் எடுக்கத் தயங்குவதில்லை.


அலைகளில் அள்ளுப்பட்டு வந்த இருவரில் ஒருவரான ரணில் விக்கிரமசிங்க இன்று இலங்கையின் பிரதமர். இப் பதவி கூட மஹிந்த எதிர்ப்பு அலையில் மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றியில் அள்ளுப்பட்டு வந்தது தான் என்பது முக்கியமானதாகும். அதாவது இவரின் பதவி இவரின் வெற்றியில் கிட்டியதல்ல.
இங்கும் சிங்கம் இன்னொரு மிருகத்தைக் கொன்று தின்ற இறைச்சியின் ஒரு பகுதியை நரி தின்ற கதை தான். ஆனால் ரணிலைப் பொறுத்தவரையில் சிங்கத்தை ஏமாற்றி முழு இறைச்சியையும் தானே உண்பதற்குத் திட்டமிட்ட முறையில் செயற்படற் கூடியவர். ரணில் விக்கிரமிங்க அவர்கள் ஒரு காலத்தில் இலங்கை அரசியலையே தீர்மானிக்கும் அளவுக்கு சக்தி பெற்றிருந்த விஜயவர்த்தன குடும்பத்தின் வாரிசு. பரம்பரையே எதிரணியைப் பிளவுபடுத்தி தங்கள் வெற்றிகளைப் பெற்றுவருவதில் வல்லவர்கள் தான்.


1960ல் எதிர்மறைப் பத்திரிககைளைத் தேசிய மயமாக்கும் தீர்மானத்தை திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரேரணை கொண்டுவந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சி.பி.டி. சில்வா தலைமையிலான 13 பேரை இரவோடிரவாக விலைக்கு வாங்கிப் பிரேரணையைத் தோல்வியடைய வைத்ததுடன், அரசாங்கத்தையும் கவிழ்த்தனர் விஜயவர்த்தன குடும்பத்தினர். அந்தப் பரம்பரைப் பெருமையை இன்றுவரை விடாமல் காப்பாற்றி வருபவர் ரணில் விக்கிரமசிங்க. தொடர் தோல்விகளையே சந்தித்துவரும் இவர் தற்செயலாக கிடைக்கும் வெற்றிகளைக் கூட தனது நரி வேலைகள் காரணமாக முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவதுண்டு.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மருமகனான இவர் ஜே.ஆரின் பின்பு ஐ.தே.க கட்சியின் தலைமையைக் கைப்பற்றப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் பிரேமதாசாவின் ஆளுமை, மக்கள் செல்வாக்கு என்பவற்றின் முன்பு இவரால் போட்டியிட முடியவில்லை. அது மட்டுமன்றி அனுபவமும், ஆற்றலும் வாய்ந்த அத்துலத் முதலி, காமினி திசநாயக்கா ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பெற்றிருந்த செல்வாக்கை இவரால் தகர்க்க முடியவில்லை. எனினும் பிரேமதாசா, அத்துலத் முதலி, காமினி திசநாயக்கா ஆகியோரின் மரணத்தின் பின்பு அடுத்த தலைவராகக வரக்கூடிய சிறிசேன குரேயை மடக்கித் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டார். அது மட்டுமன்றி சிறிசேன குரேயை அரசியல் களத்திலிருந்தே ஒதுக்கிவிட்டார். இவ்வாறே இவர் சஜித் பிரேமதாசவை அரசியலிருந்து விரட்ட எடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.


1995ல் பெரிய மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற சந்திரிகா அம்மையாருக்கு எதிராக இவர் இன வாதப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்கு சந்திரிகாவால் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதியை நாடாளுமன்றில் எரியூட்டி அதை நிறைவேற விடாமல் செய்தார்.


2000ம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டார். இந்த 2000 – 2005ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இவரது நரித்தனம் உச்சக்கட்டத்தை எட்டியது. 2002ல் விடுதலைப்புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு பேச்சுக்களை ஆரம்பித்தார். இதற்கு சந்திரிகாவும் சம்மதம் தெரிவித்து கையெழுத்து வைத்த நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு அரிய வாய்ப்பு உருவாகியது.
ஆனால் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் முடிந்த நிலையில் இரு தரப்புக்குமிடையில் ஒரு நகல் ஒப்பந்தம் தயாரான நிலையில் பேச்சுக்களை முறிக்க ரணில் தனது நரி விளையாட்டை கட்டவிழ்த்து விட்டார். விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தளபதியான கருணாவை அமைப்பை விட்டு பிரித்தெடுத்தார். பேச்சுக்கள் முறிவடைந்தன. இனப்பிரச்சினைக்கான தீர்வை முறியடித்த பெருமையுடன் 2005 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். தமிழ் மக்களிக்கு ரணில் செய்த துரோகத்துக்கு பதிலடியாக தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரித்தனர்.
விடுதலைப்புகள் அமைப்பினை பிளவுபடுத்திய நரித்தனத்தின் காரணமாக ஜனாதிபதியாக வரக்கூடிய சந்தர்ப்பத்தை இழந்தார் ரணில். இவர் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் இவரை படுகுழியில் வீழ்த்திவிட்டது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ‘போர் வெற்றி நாயகன்’ என்ற பிம்பத்துடன் சிங்கள மக்களின் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்தார். இரு தேர்தல்களிலுமே ரணிலால் ஜனாதிபதித் தேர்தலைக் கனவில் கூட காண முடியவில்லை. அதாவது இவர் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம் காரணமாக தனக்குத் தானே குழிவெட்டி அதில் விழுந்து கொண்டார்.


எனினும் இன்று மக்கள் மத்தியில் முனைப்புப் பெற்றுவந்த மஹிந்த எதிர்ப்புணர்வு காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பை மைத்திரிக்கு உருவாக்கியது. அந்த வெற்றியின் நிழலில் வந்து பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளார். அவர் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெற்று பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், கூட நாட்டின் அதிகாரத்தைத் தனது கையில் கொண்டுவருவதற்கான நரித்தனமான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்.


19வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசுத்தலைவராகவும், அமைச்சரவைத் தலைவராகவும் உள்ள ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரத்தைப் பிரதமர் கைகளுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார். ஆனால் உயர்நீதிமன்றம் அந்த மாற்றம் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்ற முடியாது எனத் தீர்மானித்ததன் மூலம் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதே வேளையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பிளவு படுத்தி நாடாளுமன்றில் மைத்திரியின் பலத்தைக் குறைக்க அவர் எடுத்த முயற்சி கூட வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் அப்படியான ஒரு பிளவைப் பயன்படுத்தி மஹிந்தராஜபக்ஷ பிரதமராக வரக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் மஹிந்த காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார். இங்கும் கூட அவரின் நரிவேலை அவரை நோக்கியே திரும்பிவிட்டாலும் ஆச்சரியம் இல்லை.


இன்னொரு புறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்துவதிலும், அதன் உரிமைப் போராட்ட வீரியத்தை மழுங்கடிக்கவுமான முயற்சியில் இறங்கிவிட்டார். அதற்கு அவரைப் போலவே அலைகளில் அரசியலுக்குள் வந்த இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்கி வருவது தெரியவருகிறது. குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும், வடமாகாணசபையும் இனப்பிரச்சினை தொடர்பாக எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடும், வெளியிடப்படும் கருத்துக்களும் ரணில் மேற்கொள்ளும் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எனவே முதலமைச்சரைத் திட்டமிட்டு ஓரங்கட்டுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் வகையில் செயற்பட ஆரம்பித்துவிட்டார்.
பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது மாகாணசபை முற்றாகவே புறமொதுக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரணில் சந்தித்து உரையாடியுள்ளார். இப்படியான அவமதிப்புக்கள் மூலம் முதலமைச்சர் வெறுப்படைந்து ஒதுங்கிவிடலாம் அல்லது மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திரும்பலாம் என ரணில், சம்பந்தன் கூட்டு நம்பியிருக்க முடியும். இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் நோக்கத்தை ரணிலும் த.தே.கூட்டமைப்பை சரணாகதிப் போக்கில் கொண்டு செல்ல சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரும் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது.


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஏகோபித்த முறையில் ஆதரவு வழங்கியமையினாலேயே ரணில் பிரதமராக வர முடிந்தது. ஆனால் பதவி கிடைத்ததும், அதே தமிழ் மக்களுக்கு எதிராக அவர் நரி வேலைகளில் இறங்கிவிட்டார். ஆனால் இதுவும் அவர் தனக்குத் தானே தோண்டும் குழியாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. அவர் அதில் விழும் போது சம்பந்தனையும், சுமந்திரனையும் இழுத்துக்கொண்டு விழுவதும் சாத்தியமே,
எப்படியிருந்த போதிலும் இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே நேர்மையற்ற, மக்கள் நலனில் அக்கறையற்ற, பதவி வெறியும் அதிகாரத் திமிரும் கொண்ட, நம்பிக்கைத் துரோகம் செய்யத்தயங்காத ஒரு அரசியல்வாதியாகவே தன்னை இனங்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே என்றும் இவர் ஒரு தோல்விகரமான அரசியல்வாதியாகவே விளங்கிவருகிறார்.

(கடந்தகாலப் பதிவுகள்)