ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு என்ன?

vlcsnap 2019 09 19 11h29m11s443 copy
vlcsnap 2019 09 19 11h29m11s443 copy

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நியமிக்கப்பட்ட குழுவினர் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இது ஒரு குறுகிய கால முயற்சி. உண்மையில் இந்த முயற்சியை ஆகக் குறைந்தது ஆறு மாதங்களிற்கு முன்னராவது மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும் பேரவை ஒரு சில முயற்சிகளை இறுதி நேரத்தில் மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பேரவையால் நியமிக்கப்பட்ட குழுவினர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயகத்தின் செயலாளர் சிறிகாந்தா, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்கினேஸ்வரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். விக்கினேஸ்வரனைத் தவிர ஏனை தலைவர்கள் எவருமே பொது வேட்பாளர் முயற்சியை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பின் போது அவர் இந்த யோசனையை நேரடியாகவே மறுத்துவிட்டார். சம்பந்தன் இந்த முயற்சிக்கு ஆதவளிக்காமை ஆச்சரியமான ஒன்றல்ல. வேட்பு மனுத் தாக்குதலுக்கு மூன்று நாட்கள் இருக்கின்ற நிலையில், அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததும் கூட ஆச்சரியமான ஒன்றல்லதான். ஆனால் அடுத்து என்ன? என்னும் கேள்விக்கு இதுவரை பேரவையும் பதிலளிக்கவில்லை, பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழுவினரும் பதிலளிக்கவில்லை.

ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்னும் தேவையை உந்தித்தள்ளிய காரணிகள் என்ன? ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள வேட்பாளர்கள் எவருமே, தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக பிரதான போட்டியாளர்களாக கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே சிங்கள – பௌத்த வாக்குகளை இலக்கு வைத்தே தங்களது பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இதில் கோத்தபாயவை விடவும் சஜித் அதிகம் அந்த விடயங்களில் கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது. சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, தமிழ் அல்லது முஸ்லிம் தலைவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அது முற்றிலும் சிங்களவர்களுக்கான ஒரு கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில் சஜித் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். கொழும்பு மாவட்டம், பல்லின மக்களும் வாழ்கின்ற ஒரு இடம், ஆனால் அங்கு ஒருவர் கூட தமிழில் பேசவில்லை. ஏன்? கோத்தபாயவை எதிர்கொள்ள வேண்டுமாயின் தானும் கோத்தபாய போன்ற ஒரு சிங்கள-பௌத்த தேசியவாதிதான் என்பதை காண்பிப்பதே சஜித்தின் நோக்கம். எனவே நடைபெறப் போகும் சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் யார் அதிகம் சிங்கள-பௌத்தர்களுக்கு விசுவாசமானவர்கள் – யார் அதிகம் சிங்கள-பௌத்த தேசியத்தை தாங்குபவர்கள் என்னும் போட்டியே இடம்பெறப் போகிறது.

இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் ஏன் வாக்களிக்க வேண்டும் என்னும் கேள்வி எழுந்தது. இது தொடர்பில் முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, அனைத்து தமிழ் மக்களையும் அவருக்கு வாக்களிக்கச் செய்வதன் ஊடாக, தென்னிலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் இலங்கைத் தீவில் தலையீடு செய்துவரும் வெளியக சக்திகளுக்கும் ஒரு தெளிவான செய்திய சொல்ல வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி முளையிலேயே கருகிவிட்டது. அதற்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். இப்போது பிரச்சினை அதுவல்ல. இனி என்ன செய்வது? இப்போது பேரவை மக்களுக்கு என்ன சொல்லப் போகின்றது? பேரவையால் தேர்தலில் பங்குகொள்ளுமாறு மக்களை கேட்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எனெனில் சிங்கள வேட்பாளர்கள் எவரையுமே ஆதிரிக்க முடியாமையால்தானே ஒரு தமிழ் பொது வேட்பாளர் தேவைப்பட்டது. ஆனால் தமிழ் மக்கள் பேரவை தனது பொறுப்பிலிருந்து விலகியோட முடியாது. இப்போது இரண்டு தெரிவுகள்தான் பேரவையின் முன்னால் இருக்கின்றது? ஒன்று, தற்போது களத்தில் நிற்கும் ஒரேயொரு தமிழ்த் தேசிய பின்புலம் கொண்ட வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களை கோருவது. அது சாத்தியமில்லையெனில், ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களை கோருவது. இதில் எதனையும் கூறாமல் தமிழ் மக்கள் பேரவை நழுவிக் கொள்ளுமாக இருந்தால் அது மிக மோசமானதொரு சந்தர்ப்பவாதமாகவே பார்க்கப்படும். ஒரு மக்கள் இயக்கமாக தங்களை முன்னிறுத்திவரும் மக்கள் பேரவை மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் கடப்பாட்டிலிருந்து நழுவியோட முடியாது. அரசியல் தலைவர் என்போர் செய்யும் அதே தவறை பேரவையும் செய்ய முடியாது.

ஒரு சிலரின் வாதம் இப்படியிருக்கிறது. தேர்தலை பகிஸ்கரித்தால் அது கோத்தபாய ராஜபக்சவிற்கு சாதமாகிவிடும். இதனை சரியென்று எடுத்தால், ஒரு தமிழ் பொது வேட்பாரரை நிறுத்தி, தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தாலும் கூட, அதுவும் கோத்தபாயவிற்குத்தானே சாதகமாகும். ஏனெனில் இரண்டுமே, தமிழ் மக்கள் சஜித் பிரேமாசவிற்கு அளிக்கும் வாக்குகளைத்தானே குறைக்கின்றன அல்லது இல்லாமலாக்குகின்றன. இதில் இப்படியும் ஒரு வாதம் வைக்கப்படுகின்றது. அதாவது, சிவாஜலிங்கத்திற்கு ஒரு வாக்கை வழங்கிவிட்டு, இரண்டாவது தெரிவை ஒரு பிரதான வேட்பாளருக்;கு வழங்குவது. அவ்வாறாயின் அதற்கு முன்னர் அந்த வேட்பாளர் உங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா. அதற்கு எந்த வேட்பாளர் தயார்? நிச்சயமாக சஜித் பிரேமதாச ஒரு போதுமே தமிழ் கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கும் மேல் இரண்டாவது தெரிவு என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வில்லை. ஏனெனில் இதுவரை அதனை பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை. எனவே இந்த வாதங்கள் எல்லாமே பொருளற்றவை.

இவைகள் எவையுமே நடைமுறைக்கு பொருத்தமானவை அல்ல. எந்தக் கோணத்தில் பேசினாலும் தமிழர் தேசத்தின் நிலைப்பாட்டிலிருந்து மேற்கொள்ளும் முடிவை கோத்தபாயவுடன் தொடர்படுத்தி, விமர்சிப்பது இலகுவானதுதான் ஆனால் அதற்கு பின்னால் தமிழ் மக்கள் இழுபட முடியாது. அது அறிவுபூர்வமான புரிதலுமல்ல. சிங்கள தேசத்தை முன்னிறுத்தி தமிழர்கள் சிந்திக்க முடியாது. தமிழ் மக்கள் தமிழர் தேசத்தின் கோரிக்கைகளிலிருந்துதான் ஒவ்வொரு தேர்தல்களையும் நோக்க வேண்டும். வாக்களிக்க வேண்டும். அதற்கான தலமைத்துவத்தைத்தான் தமிழ்த் தேசிய கட்சிகளும் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களும் வழங்க வேண்டும். எனவே நாம் மேலே பார்த்த இரண்டு தெரிவுகள்தான் தற்போது மக்கள் முன்னால் இருக்கின்றன. ஒன்று சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவருக்கு வாக்களிக்குமாறு மக்களை விழிப்பூட்டுவது. அதற்காக பணியாற்றுவது. இல்லாவிட்டால், தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை விழிப்பூட்டுவது. இரண்டில் ஒன்றை நோக்கி பேரவை தனது நிலைப்பாட்டை சொல்லாமல் தொடர்ந்தும் அமைதியாக இருக்க முடியாது.

தமிழ்க் குரலுக்காக கரிகாலன்