சாதியவாதிகளின் கூடாரமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

samakaalam 1
samakaalam 1

தமிழ் மண்ணில் ஒரு மகத்தான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அது வெறுமனே தேச விடுதலையை மாத்திரம் கருத்தில் கொள்ளாது பெண் விடுதலை, பால் சமத்துவம், சமூக ஒடுக்குமுறைகளற்ற தேசம் என பல்வேறு நோக்கங்களால் நிறைந்திருந்தது. இன விடுதலையும் சமூக விடுதலையும்தான் எமது இலட்சியம் என தியாகி திலீபன் கூறினார். ஈழ விடுதலைப் போராட்ட காலம் என்பது அதற்கு முழு முன்னூதாரணமான ஒரு காலகட்டமாக அமைந்திருந்தது.

விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் முறியடிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடப்பதற்குள் நாம் பல்வேறு சோதனைகளை கண்டு வருகிறோம். மிக மோசமான அரசியல் சூழலில் சிக்கியுள்ளது வடக்கு கிழக்கு. அடக்குமுறையாளர்களின் பல்வேறு பொறிகளுக்குள் எமது மண் சிக்கி மக்களின் வாழ்வு கசங்கியுள்ள நிலையில், எமது அரசியல் தலைமைகளின் ஒடுக்குமுறைப் போக்கினாலும் மக்களின் வாழ்வும் மண்ணும் கசங்கி வருவது துயரகரமானது.

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல மாற்றங்களை கண்ட வடக்கு கிழக்கு மண்ணிலே முன்னெடுக்கப்படும் தமிழ் தேசிய அரசியல் என்பது, மிகவும் முற்போக்குத் தனமாக இருக்க வேண்டும். இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாம், போராடும் நாம், எமது சமூகத்திற்குள் ஒடுக்குமுறைகளை தூண்டுபவர்களாகவோ, முன்னெடுப்பவர்களாகவோ இருந்துவிட முடியாது.

துரதிஷ்டவசமாக தமிழ் தேசிய அரசியலில் சாதியத்தை வளர்க்கும் கைங்கரியங்கள் முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் தேசியத்தை சாதியத்தில் வளர்க்க முடியுமா? நிச்சயமாக இல்லை. அப்படி சாதியத்தை வளர்ப்பதாக இருந்தால், அங்கே தமிழ் தேசியம் கருக்கப்படும் என்பதே உண்மையான நிலவரம். அல்லது தமிழ் தேசியத்தின் வேரை மெல்ல அழிப்பதே உண்மையான நிலவரம்.

அண்மையில் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் ஆனோல்ட் கிளிநொச்சியில் ஒரு திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை பிரதேச மக்கள் திருப்பிக் கொடுத்துள்ளதாகவும் இதற்கு காரணம் அவர் தாழ்த்தப்பட்ட சாதியை  சார்ந்தவர் என்றும் “அவனிட்ட எல்லாம் காசு வாங்குறியளடா…” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சியை சேர்ந்த பாராளுமன்ற வேட்பாளர் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் தரப்பிடம் கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.   இதனையடுத்தே அந்த இளைஞர் தரப்பு, பணத்தை ஆனோல்டிற்கு திருப்பிக் கொடுத்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே இருக்கும் இந்த சாதிய வெறுப்பும் பாகுபாடும் என்பது சாதாரணமான விடயமல்ல. வாக்குகளுக்காக மக்களை துண்டாடவும் பாகுபாடுகளை கொண்டாடவும் செய்பவர்கள், நிச்சயமாக இன ஒடுக்குமுறையாளர்களுக்கு துணைபோகக் கூடியவர்களே. இத்தகையவர்களை இப்போதே தோற்கடிக்க வேண்டும். தவிர்த்தால், அவர்கள் பின்னாளில் தமிழ் சமூகத்திற்கு பெரும் கேடு விளைவிப்பார்கள். தமிழ் சமூகம் துண்டு துண்டாக சிதற நேரிடும்.

ஒரு தேசத்திற்காக போராடுகின்ற இனத்தில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், பிரதேச வாதம் பேசலாமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாதியம் பேசிய குறித்த அரசியல்வாதி, நெடுந்தீவு சென்றால் தன்னை நெடுந்தீவான் என்பார்.  வரணிக்குச் சென்றால் வரணியான் என்பார். வட்டக்கச்சி சென்றால் வட்டக்கச்சியான் என்பார். கடந்த பத்தாண்டுகளாக இவர் இப்படி பேசும் வாசகங்கள் பலரிடையே பிரபலமாகியுள்ளது. இப்போது மக்கள் விழிப்படைந்தும் விட்டார்கள். பிரதேசவாதமும் சாதியமும்தான் இவரது அரசியல் முதலீடு. இப்போது சுமந்திரன் பக்கம் திரும்பியதும் அவரின் பிரதேச வாக்குகளையும் கிறீஸ்தவ சபை வாக்குகளையும் அள்ளவே என்றும் சொல்லப்படுகின்றது.

இந்த அரசியல்வாதியே ஒருமுறை கிளிநொச்சியின் ஒரு பகுதியில் உள்ள மக்களை வடக்கத்தையான் என்று சொல்லி பெரும் சிக்கலில் மாட்டியிருந்தார். அத்துடன் சாதி பார்த்து பிரதேசங்கள் பார்த்து ஆட்களை ஆதரிப்பதும் கட்சி பிரமுகவர்களை தேர்வு செய்வதும் இவரது கைவந்த கலை என்பதும் பலரும் அறிந்தது. ஒரு பிரதேசத்தில் எந்த சாதியினர் அதிகமாக உள்ளனரோ, அந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுத்து, தேர்தலில் நிற்க வைத்து, அவரை வெல்லச் செய்து, பின்னர், அவர் ஊடாக தனக்கு வாக்குகளை எடுப்பதுதான் நோக்கமாம்.

இப்படியெல்லாம் செய்து விட்டு ‘தமிழ் தேசிய தலைமகன்’  (இப்படி அழைக்கப்படுபவர் தலைவர் பிபாகரனே) என்றுதேர்தல் விளம்பரத்தில் போடுவார். இதுவெல்லாம் எத்தகைய காலக் கொடுமை? இதற்கெல்லாம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு என்பதே சாதிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. எங்கு எந்த சாதியை சேர்ந்தவரை நிறுத்த வேண்டும் என்பதுதான் அடிப்படையே தவிர, தமிழ் தேசியத்தின்மீது எத்தகைய பற்றுக் கொண்டவர் என்பதல்ல. சாதியவாதிகளின் கூடாரமாக கூட்டமைப்பு மாறி வருகின்றதா?

சமூகத்தில் ஒரு உயரிய பதவில் இருந்த ஆனோல்டை இவ்வாறு சாதிப் பெயர் சொல்லி அழைப்பதும், சாதியப் பாகுபாடு காட்டுவதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்தில் சாதியவெறி எப்படி இருக்கிறது என்பதையே வெளிப்படையாகக் காட்டுகின்றது. மக்களை வழி நடத்த வேண்டிய இத்தகைய அரசியல் கட்சிகள் சாதிய சட்டகத்தில் இயங்குவது, விடுதலைக்காக போராடிய தமிழ் மக்களை பெரும் பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகும். இனவிடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய இயக்கத்தை கொச்சைப்படுத்தும் நிராகரிக்கும் கூட்டமைப்பு போன்ற கட்சிகளிடம் இத்தகைய ஊறுகள்தான் அறுவடையாகும்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)