தென்மராட்சி : வீழுமா ? விழித்தெழுமா?

samakaalam 3
samakaalam 3

தேர்தலுக்கும் பதவிக்கும் மக்களை கறிவேப்பிலையாக பாவிப்பவர்கள்  இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான். அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல்வாதிகள் அனைவரும் தென்மராட்சிப் பகுதி மக்களை தமது அரசியல் தேவைக்காக கறிவேப்பிலையாக பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுகின்றனர் என்பது இன்னொரு கசப்பான உண்மையாகும்.

தென்மராட்சி என்பது யாழ்ப்பாணத்தின் பூர்வீகப் பிரதேசங்களில் ஒன்று. யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பெரும் பிரிவுகளில் ஒன்று. மேற்கே வலிகாமத்தையும் வடக்கே வடமராட்சியையும் தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியையும் கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியையும் தொடும் தென்மராட்சி மண், போரால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் மிகவும் முக்கியமான களமாக அமைந்த தென்மராட்சி மண், பல உன்னதமான போராளிகளையும் தந்திருக்கிறது. அது மாத்திரமின்றி மாமனிதர் ரவிராஜ் போன்ற சிறந்த மக்கள் பிரதிநிதிகளையும் எமக்கு அளித்திருக்கிறது. அத்தகைய மண்ணில் இன்று எத்தகைய அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது என்பதும், இன்று எத்தகைய உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்ற என்பதையும் நாம் அவதானித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த காலத்தில் தமது வாக்கு வங்கிகளாக தென்மராட்சியைப் பயன்படுத்தி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கே இரண்டு விதமான அரசியல்களை வளர்த்து தமக்கு சாதகத்தையும் தமிழினத்திற்கு பாதகத்தையும் ஏற்படுத்த முயல்கின்றனர். அதில் ஒருவர் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்தன். இவர் ஒரு ஒழுக்க சீர்கேடான நபர். அது பற்றிய ஆதாரங்கள் சில காலங்களின் முன்பு ஊடகங்களில் வெளிவந்திருந்தன.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இத்தகைய ஒருவரை வளர்த்து தென்மராட்சியில் ஒழுக்கமற்றவரை முன்னூதாரணமாக்கி இளைஞர்களை தவறான வழியில் இட்டு தனது அரசியலை முன்னெடுக்கப் பார்க்கின்றது.

இதைத் தவிர, தற்போது பொம்மை அரசியலை வளர்க்கும் முயற்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுகின்றது. திருமதி ரவிராஜ் சசிகலா கடந்த காலத்தில் எந்த வகையிலும் அரசியலுடன் தொடர்புடையவரல்ல. மாமனிதர் ரவிராஜ் அரசியலில் ஈடுபட்ட காலத்தில் ஆதரவாளர்களுக்கு ஒரு செம்பு தண்ணீரைக்கூட இவர் கொடுத்ததில்லை என ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் போராட்டத்தையும் தமது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மாமனிதர் ரவிராஜின் பெயரைப் பயன்படுத்தி தமக்கு வாக்குகளை பெற திட்டம் தீட்டியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலர், மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலாவை தோற்கடித்துவிட்டு அவரது வாக்குகளை தாம் பயன்படுத்தி தேர்தலில் வெல்லவும் முயன்று வருகின்றனர்.

உண்மையில் சசிகலாவை பாராளுமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்று கூட்டமைப்பு நினைத்திருந்தால், அம்பிகாவிற்குப் பதிலாக சசிகலா ரவிராஜிற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கியிருக்க வேண்டும். சசிகலாவை போட்டியிடச் செய்து, அனுதாப அலையை வீசச்செய்து அவரை தோற்கடித்து, அவரது வாக்குகளைப் பயன்படுத்தி, அம்பிகாவை தேசியப் பட்டியல் எம்பியாக்கும் சூழ்ச்சித் திட்டம் என்பது, மாமனிதர் ரவிராஜிற்கு மாத்திரமல்ல தென்மராட்சிக்கும் செய்யும் துரோகமே.

இந்த சூழ்ச்சியும் பெரும் திட்டமும் நன்றாக தெரிகின்ற போதும், திருமதி ரவிராஜ் சசிகலா அவர்கள், மௌனியாக இருப்பது, கட்சியின் சூழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பானது. அத்துடன் அது தென்மராட்சியில் பொம்மை அரசியலை வளர்க்கவே வழி வகுக்கும். சுமந்திரன் ஆதரவாளரான சயந்தன், சுமந்திரனுக்கும் வாக்களிக்க மக்களை கோர வேண்டும் என சசிகலாவை வற்புறுத்தியிருந்தமை குறித்து ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன. கூட்டமைப்பின் அராஜகங்களை எதிர்ப்பதே மாமனிதர் ரவிராஜிற்கு செய்யும் மரியாதை ஆகும்.

இதுவே கடந்த காலத்தில் தென்மராட்சி மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றவரும் கல்வியலாளருமான க. அருந்தபாலன் அவர்களுக்கு நடந்தது. ‘அருந்தவபாலனுடன் எமக்கும் வாக்களியுங்கள்’ என்று கேட்ட அரசியல்வாதிகள், தமது பகுதியில் ‘அவருக்கு வாக்களிக்கூடாது’ என்று பிரசாரம் செய்து, அருந்தவபலனை திட்டமிட்டுத் தோற்கடித்தனர். இம்முறை அருந்தபாலனை வெல்ல வைக்கின்ற தார்மீகப் பொறுப்பு, தென்மராட்சி மக்களுக்கு மாத்திரமல்ல, யாழ் கிளிநொச்சி மக்களுக்கும் உண்டு. நேர்மையான ஒருவரை நாம் பிரதிநிதியாக்க வேண்டுமல்லவா? 

தமிழ் தேசிய அரசியலில் ஒழுக்கமும் நேர்மையும் கொள்கைப் பற்றும் கொண்ட க. அருந்தவபாலன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டம் மீதும் அதன் தலைமை மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். கல்விப் பணியுடன் சமூகப் பணிகளிலும் பெரும் ஈடுபாட்டுடன் பங்களித்துள்ள அருந்தவபாலன், மக்களுடன் ஊடாடி பெரும் அபிமானத்தையும் பெற்றவர். மக்களுக்கும் ஈழ உரிமைப் போராட்டத்திற்கும் எதிரான ஈனச் செயல்களைக் கண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகிய அவர், நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

உண்மையில் கடந்த காலங்களில்  அருந்தவபாலனை  அவர்கள் தோற்கடிக்கவில்லை. கூட்டமைப்பின் எல்லா வேட்பாளர்களும் எல்லா கட்சியினரும் இப்படித்தான் தென்மராட்சியை தோற்கடித்தனர். எனவே இம்முறையாவது தென்மராட்சி மண் விழித்துக்கொள்ளுமா? தமக்கான பிரதிநிதி ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புமா? கடந்த இருமுறையும் கூட்டமைப்பு வேட்பாளர்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட அருந்தவபாலனை வெல்ல வைப்பதே தென்மராட்சி மண்ணின் எழுச்சியை வெளிப்படுத்தும் வெற்றியாகும். வாக்குப் போட்டிப் பங்குகளில் சிதையாமல் தென்மராட்சி ஒன்றுபட்டு விழித்தெழ வேண்டும்.

-தமிழ்க்குரலுக்காக நிவேதன் வீரசிங்கம்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)