சிந்திக்காதுவிட்டால்! சாவுமணிச்சத்தம் வெகுதொலைவில் இல்லை.

samakaalam 4
samakaalam 4

தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முட்டுச் சந்தியில் நிற்கின்றது. அதாவது சிங்கள பெரும்பாண்மை அரசியலுக்குள் கரைந்து தொலைந்து போவதா? அல்லது நாம் இந்து சமுத்திர பிராந்தியத்தில், ஒரு நெடியவரலாற்றைக் கொண்ட, தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபிக்கும் வகையில் எமது அரசியலை தொடர்வதா? அடுத்த மாதம் 5ம் திகதி இடம்பெறப் போகும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதற்கான பதிலைக் காண்பதற்கான தேர்தலாகும்.

கடந்த ஐந்து வருட கால ரணில்-மைத்திரி ஆட்சியில் தமிழ்த் தேசிய அரசியல் பெருமளவு சிதைவடைந்துவிட்டது. அதனை இந்தக் கட்டத்திலாவது தடுத்து நிறுத்தாதுவிட்டால், தமிழ்த் தேசிய அரசியல் என்பது முற்றிலும் இல்லாமல் போய்விடும். இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் இலங்கையின் பாராளுமன்றத்தில் தமிழர்களின் வரலாற்றுஉரிமையை முன்னிறுத்தி, ஆதாரங்களுடன் விவாதிக்கக் கூடிய ஒரு உறுதிமிக்க தலைவர் தேவை. யுத்தம் நிறைவுற்று 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவ்வாறானதொரு தலைவரை தமிழ் மக்களால் காணமுடியவில்லை. ஆனால் காலம் ஏதொவொருவகையில் தலைவர்களை இனம்காட்டும் என்பார்கள். காலம் இப்போது மிகவும் தெளிவாக ஒரு தலைவரை காட்டியிருக்கின்றது. தமிழ்த் தொன்மையையும், வரலாற்றையும் தன்னுள் சுமந்திருக்கும், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட ஒருவரை வரலாறு இப்போது நமக்கு முன்னால் கொண்டுவந்திருக்கின்றது. அவர்தான் நீதியரசர் விக்கினேஸ்வரன்.

நீங்கள் சிந்திக்காதுவிட்டால்!
சாவுமணிச்சத்தம் வெகுதொலைவில் இல்லை.

சிங்கள தேசியவாதம் தனக்கு எவ்வாறானதொரு தலைவர் தேவை என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காட்டியிருக்கின்றது. சிங்கள– பௌத்த தேசியவாதத்திற்கு கட்டுப்பட்டு, தமிழர்கள் வாழவேண்டும் என்பதுதான் சிங்கள பெரும்பான்மையின் அரசியல் தீர்ப்பு. ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் மக்களின் அரசியல் தீர்ப்பாகும். கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போதும், தமிழ் மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தனர். ஆனால் மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராகவே மக்களின் பிரதிநிதிகள் நடந்துகொண்டனர். இதன் காரணமாகவே இன்று தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முட்டுச் சந்திக்கு வந்திருக்கின்றது. முட்டுச் சந்தியில் நிற்கும் நமது தேசிய அரசியலை ஒரு ஆற்றல்மிக்க தலைவர் பொறுப்பெடுக்காதுவிட்டால், நிச்சயம் தமிழ்த் தேசிய அரசியல் கரைந்து காணாமல் போய்விடும். இதனை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விக்கினேஸ்வரன் பாராளுமன்றம் செல்லாதுவிட்டால், அவர் சிலரது சதியால் தோற்கடிக்கப்பட்டால், தமிழ்த்தேசிய அரசியலின் சாவுமணிச் சத்தத்தை நீங்கள் நிச்சயம் கேட்பீர்கள்.

இப்போது தேர்தல் களத்திற்கு திரும்புவோம். நாம் நிலைமைகளை மிகவும் ஆழமாக நோக்கவேண்டும். நமக்கு முன்னால் இப்போது இரண்டு தெரிவுகள் மட்டுமே உண்டு. ஒன்று, வழமைபோல் கண்ணை மூடிக்கொண்டு, பழக்கதோசத்தின் காரணமாக, வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு -மீண்டும் ஏமாந்து நாசமாவது. இதனை நாம் தடுக்க விரும்பினால், கடந்தகால அனுபவங்களை அலசி ஆராய்ந்து, சிந்தித்து வாக்களிப்பது.

இந்த இரண்டில் நீங்கள் எதனைதெரிவுசெய்யப் போகின்றீர்கள்? நாங்கள் சிந்திக்கப் போவதில்லை – இப்படித்தான் இருக்கப்போகின்றோம் என்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களை நீங்கள் நம்பும் நல்லூர் கந்தனாலும் காப்பாற்ற முடியாது ஆனால், சிந்தித்து செயற்படப் போகின்றோம் – எங்களாலும் சிந்திக்க முடியும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் வெளிச்சம் புலப்படும். இப்போது நமக்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுகின்றது. ஒருவேளை அந்தவெளிச்சம் விடியலை காட்டாவிட்டாலும் கூட, விடியலுக்கான வழியைக் காட்டும்.

சிந்திக்காதுவிட்டால்!
சாவுமணிச்சத்தம் வெகுதொலைவில் இல்லை.

இம்முறை வாக்களிப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் தங்களுக்குள் கேட்கவேண்டிய கேள்வி ஒன்றுதான் – அதாவது, இப்போது தமிழ் மக்களுக்கு தேவையானவர்கள் யார்? இன்றைய சூழில் எப்படியானவர்கள் நாடாளுமன்றம் செல்லவேண்டும்? இந்தக் கேள்வியிலிருந்துதான் ஒவ்வொருவரும் சிந்திக்கத் தொடங்கவேண்டும். 2010இல் வாக்களித்தோம், 2015இல் வாக்களித்தோம் ஆனால் எதுவும் நடக்கவில்லை – அவ்வாறாயின் மீண்டும் தோல்வியடைந்தவர்களுக்கும் – ஏமாற்றியவர்களுக்கும் நீங்கள் வாக்களித்தால் உங்களின் பெயர்என்ன? வரலாறு உங்களை மன்னிக்குமா? இரண்டு தடவைகள் நாடாளுமன்றம் சென்று செய்யமுடியாமல் போனதை, இனி எவ்வாறு அவர்களால் செய்யமுடியும்? சிங்கள ராஜதந்திரத்தை எண்ணிப்பாருங்கள். சிங்கள மக்களை பாருங்கள் – அவர்கள் எந்தளவிற்கு முதிர்ச்சியுடனும் புத்திசாலித்தனத்துடனும் சிந்திக்கின்றனர்!நம்மில் சிலரோ, ஒருகாலத்தில், சிங்கள மக்களை மூடர்கள் என்றனர். ஆனால் நமது வீழ்ச்சிகளை திரும்பிப்பார்த்தால், உண்மையில் யார் மூடர்கள்?

சிங்கள மக்கள், 2015இல் மைத்திரிபாலவிற்கு வாக்களித்தனர் ஆனால், அவர்தங்களுக்கு பொருத்தமற்றவர் என்பதை எப்போது உணர்ந்தார்களோ, அப்போதே தங்களை மாற்றிக்கொண்டனர். கோட்டபாய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்தனர். தங்களுக்கு ஒரு உறுதியான தலைவர் தேவையென்று சிங்கள மக்கள் சிந்தித்ததன் விளைவுதான், கோட்டபாயவினால் தனித்து சிங்களமக்களின் வாக்குகளால் வெற்றி பெறமுடிந்தது. மறுபுறமாக நீங்கள் தெரிவு செய்தவர்களை உற்றுப் பாருங்கள் – ஆகக் குறைந்தது, அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் உறுதியான நாவுடன் பேசமுடியவில்லை. அவர்களின் நா தடுமாறுகிறது. உறுதியற்றவர்கள் தடுமாறத்தானே செய்வார்கள். இப்படியானவர்களையா இம்முறையும் நாடாளுமன்றம் அனுப்பப் போகின்றீர்கள்!

சிந்திக்காதுவிட்டால்!
சாவுமணிச்சத்தம் வெகுதொலைவில் இல்லை.

2010இல் உங்களால் இது தொடர்பில் சிந்திக்க முடியாமல் இருந்தது. ஓர் பேரழிவின் தடுமாற்றத்தின் பிடியில்,வேறு எதைச் செய்யமுடியும்? பின்னர், 2015இல் சிந்திப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும், அடுத்தது யார் என்னும் கேள்வி இருந்தது. ஆனால் இம்முறை நிலைமை அப்படியல்லவே! உங்களுக்கு முன்னால் தெரிவுகள் உண்டு. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனியாயங்களுக்கு நீதிவேண்டும் என்று தொடர்ச்சியாக உரத்துப் பேசிவரும் நீதியரசர் விக்கினேஸ்வரன் இம்முறை உங்களுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கின்றார். காலம் ஒருவரை உங்களுக்கு தந்திருக்கின்றது. இனி ஏன் நீங்கள் தயங்கவேண்டும்? அவரோடு ஒரு அணியினர் உங்களின் முன்னால் இருக்கின்றனர். அவர்களில் பொருத்தமானவர்களை நீங்கள் தெரிவுசெய்யலாம். விக்கினேஸ்வரன் நாடாளுமன்றம் சென்றால் உடனே தமிழ் மக்களின் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடுமென்று இந்தக் கட்டுரைவாதிடவில்லை. அப்படியான போலியான நம்பிக்கைகளை கொடுப்பதும் தவறானது. ஆனால் விக்கினேஸ்வரனிடம் தமிழ்த் தேசிய அஞ்சல் கோலை கொடுங்கள். அவர் ஓடிமுடிக்கும் இடத்தில் வரலாறு நிச்சயம் தலைவரை நிச்சயம் காட்டும். ஏனெனில் வரலாறு வெற்றிடங்களில் பயணிப்பதில்லை.

விக்கினேஸ்வரனின் முக்கியத்துவங்கள் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாதவை. ஏனெனில் விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர். தமிழ் கலாசாரத்தின் குறியீடு. வரலாற்று பின்புலத்தில் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அரசியல் உரித்தையும் ஆணித்தரமாக முன்வைக்கக்கூடியவர். அவ்வாறான ஒருவர் பாராளுமன்றத்தில் பேசும் போது, அது இலங்கைத் தீவிலும் சர்வதேச சமூகத்தாலும் உண்ணிப்பாக நோக்கப்படும். முக்கியமாக இந்திய உப கண்டத்தில் தமிர்களின் அரசியல் மீண்டும் பேசுபொருளாகும். இந்தியா, நேபாள், மலேசியா, ஆபிரிக்கா மேலும் உலகெங்கும் வாழும் இந்துத் தமிழ் மக்கள் அனைவரையும் ஒருபுள்ளியில் இணைக்கும் ஒரு குறியீடாக விக்கினேஸ்வரனால் இருக்கமுடியும். இது நமக்கு பலமல்லவா?

சிந்திக்காதுவிட்டால்!
சாவுமணிச்சத்தம் வெகுதொலைவில் இல்லை.

கடந்த இரண்டு தேர்தல்களின் போதும் பழக்கதோசத்தால் சிந்தித்தது போன்று, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் தாம் செய்த தவறுகளை மறக்கும் மக்கள் கூட்டம் மீண்டும், மீண்டும் தவறுகளையே செய்துகொண்டிருக்கும். ஒருமுறை தவறானவரை நீங்கள் பாராளுமன்றம் அனுப்பிவிட்டால், பின்னர் தொடர்ந்தும் தவறானவர்களுக்கு பின்னால்தான் நீங்கள் போக நிர்பந்திக்கப்படுவீர்கள். சிங்கள மக்கள் தங்களுக்கு ஒரு உறுதியானதலைவரை பெற்றிருக்கின்ற சூழலில், தமிழ் மக்கள் உறுதியற்ற, ஆளுமையற்ற, ஒழுங்காக தமிழர்தம் வாதங்களை முன்வைக்கத் தெரியாதவர்களை பாரளுமன்றம் அனுப்பினால், அதுபெரும் அதர்மமாகும். அதர்மத்தை செய்யாதீர்கள். வரலாறு காட்டிய தலைவர் விக்கினேஸ்வரனுடன் பயணம் செய்ய உங்களை தயார் செய்யுங்கள். வரலாறு நம்மை விடுவிக்கும்.

மறக்காதீர்கள்
சிந்திக்காதுவிட்டால்!
தமிழ்த் தேசியத்தின் சாவுமணிச்சத்தம் வெகுதொலைவில் இல்லை.

-தமிழ்க்குரலுக்காக கரிகாலன்-

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)