யார் யார் இந்த தேர்தலில் வெல்ல வேண்டும்? -தமிழ்க் குரலின் தெரிவு

Aasiriyar paarvai 2
Aasiriyar paarvai 2

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் யாரை வெல்ல வைக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரையாடல் பரவலாக இடம்பெற்று வருகின்றது. ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் கணிப்புக்களை நிகழ்த்தி வருகின்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களும் வெகுசன மக்களும்கூட தமது விருப்பங்களையும் காணிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளை ஜனநாயக ரீதியில் வெல்ல வைக்கும் போராட்டத்தில் தமிழரின் உரிமைக்குரலாக இயங்கி வரும் தமிழ் குரல், அரசியல்வாதிகளின் அராஜகங்களை இடித்துரைப்பதுடன், அவர்களின் சிறந்த விடயங்களைப் பாராட்டியும் வந்திருக்கின்றது. ஊடக தர்மத்தின் வழி நின்றும், தமிழ் சமூகத்தின் மேம்பாட்டை முதன்மையாகக் கொண்டும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் பயணம் செய்யும் தமிழ் குரல், இந்த தேர்தலில் யார் எல்லாம் வெல்ல வேண்டும் என்ற தெரிவை கட்சி வேறுபாடுகள் கடந்து முன்வைக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் யார் எல்லாம் வெல்ல வேண்டியவர்கள். (கிழக்கு மாகாணம் தனி ஒரு பதிவாக பிரசுரிக்கபடும்.)

* யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம்

1. முன்னாள் முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் – தமிழ் மக்கள் தேசிய  கூட்டணி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் வடக்கு மாகாண முதல்வரும் நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண – கிளநொச்சி மாவட்டங்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இனப் படுகொலைக்கான நீதிக்காகவும் வலுவான குரலை எழுப்பி வரும் நீதியரசர் ஈழத் தமிழரின் நீதியின் முகமாகவும் விளங்குகின்றார். ஏமாற்றுத் தலைமைகளின் மத்தியில் விக்கியின் குரல் எமக்கு கால அவசியமாகும்.

2. மாவை சேனாதிராஜா – இலங்கை தமிழரசுக் கட்சி

மிகவும் இளைய வயதிலேயே அரசியல் போராட்டங்களின் வழி தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராஜா. அண்மைய காலங்களில் அவர் சில விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் தமிழரரசுக் கட்சியில் ஓரளவுக்கு நேர்மையான அரசியல்வாதியாக கருதப்படுகிறார். இவரை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் சுமந்திரன், சிறீதரன் போன்றோர் ஈடுபடுகின்ற நிலையில், இவரை இந்த தேர்தலில் வெல்ல வைப்பது தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உணரப்படுகின்றது.

3. க. அருந்தவபாலன் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கடந்த இருமுறைகள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட க. அருந்தபாலனின் வெற்றி தென்மராட்சி மக்களுக்கு மாத்திரமின்றி யாழ் கிளிநொச்சி மக்களுக்கு மிக அவசியமானது. தமிழர் விடுதலைப் போராட்டம்மீது தீராப்பற்று கொண்ட இவர், ஒழுக்கமான சிறந்த தலைமைத்துவம் கொண்ட ஒருவராக மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றவர். தமிழ் தேசியம் சார்ந்து வலுவான குரலாக ஒலிக்கக்கூடிய இவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது கால அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

4. ஈ. சரவணபவன் – இலங்கை தமிழரசுக் கட்சி

இவரில் பல விமர்சனங்கள் இருந்தபோதிலும், இலங்கை தமிழரசுக் கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கிளையாகி மாறியுள்ள நிலையில் அகச் கட்சிக்குள் இருந்து கொண்டு தனித்துவமாக செயற்படுபவர் ஈ. சரவணபவன். ராஜபக்ச ஆதரவாளரான டக்ளஸ் தேவானந்தாவின் அராஜகங்களை எதிர்ப்பதிலும், பல்வேறு சவால்களின் மத்தியில், ஈழ விடுதலைக்கும் தமிழர் உரிமைக்கும் ஆதரவாக உதயன் பத்திரிகையை நடத்தி வந்தவர் என்பதும் அவர் மக்கள் மத்தியில் அபிமானத்தைப் பெறுவதற்கு உகந்த காரணங்களாக உள்ளன. இன்று தமிழ்த் தேசிய விரோதப் போக்கை நோக்கி தமிழரசுக் கட்சியை இழுத்துச் செல்ல முனையும் தரப்புக்களை எதிர்ப்பதில் தீரமுடன் செயற்படும் சரவணபவன்  மாவை சேனாதிராஜாவுக்கு அடுத்தபடியாக தமிழரசுக் கட்சிக்குள் வெல்லவைக்கப்பட வேண்டிய ஒரு நபராக இருக்கின்றார்.

05. அனந்தி சசிதரன் (எழிலன்) – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைகின்ற பெண்களின் குறியீடு. அந்த மக்களின் அவலத்தை வெளிப்படுத்துகின்ற முகம். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏமாற்று வேலைகளுக்கு எதிராக பலமான குரல் எழுப்பி வருபவர். விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் எழிலனின் மனைவி என்பதால் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட இனத்தின் பாதிக்கப்பட்ட பெண்ணை பாராளுமன்றம் அனுப்புதல் அவசியமல்லவா?

06. விஸ்வலிங்கம் மணிவண்ணன் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்று சொல்லி வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பின் வழியிலேயே பயணிக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வகையில் நூதனமாக செயல்பட்டு வரும் அக் கட்சியில், கஜேந்திரகுமாரைப் போன்றே, சுகாஸ், காண்டீபன் ஆகியோரும் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அக் கட்சியில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணி மணிவண்ணனை மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

07. எம்.கே. சிவாஜிலிங்கம் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தமிழ் தேசியத்தை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கு மாத்திரமின்றி தமிழ் தேசியத்தை விட்டு தடம் மாறும் தமிழ் தலைமைக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் சிவாஜிலிங்கம். சில விமர்சனங்கள் இருந்தாலும் எதை துணிந்து பேசும் இவரின் வீரம் தமிழ் மக்களுக்கு பிடித்தமான ஒன்று. இனப்படுகொலை தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் கொண்டு வந்ததிற்கு அவரது பங்கும் அடிப்படையானது. அத்துடன் அண்மையில் புலிகள் இயக்கத்தையும் தலைவரையும் சுமந்திரன் கொச்சைப்படுத்திப் பேசிய போது, அதே சிங்கள ஊடகத்தில் சுமந்திரனை அம்பலப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. சிங்கள மொழியில் தமிழ் மக்களின் மனவெழுச்சியை பேசும் சிவாஜிலிங்கத்தின் குரல் ஈழத் தமிழினத்திற்கு அவசியமல்லவா?

* வன்னி மாவட்டம் (முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்)

1. சாள்ஸ் நிர்மலநாதன் – இலங்கை தமிழரசுக் கட்சி

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் விதமாக சுமந்திரன் பேசியிருந்த சமயத்தில், அதனை கடுமையாக கண்டித்து, சுமந்திரனின் பதவியை பறிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்த சாள்ஸ் வன்னி மாவட்டத்தில் நடக்கும் அராஜகங்களுக்கு எதி்ராகவும் குரல் கொடுாத்து வருபவர். அத்துடன் தமிழ் தேசியப் பயணத்தில் வழுவாத அக்கறை கொண்ட சாள்ஸ் நிர்மலநாதன் வன்னி மக்கள் மத்தியில் பெரும் அபிமானத்தையும் கொண்டவர்.

2. சிவசக்தி ஆனந்தன் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழைத்துவரப்பட்ட சிவசக்தி ஆனந்தன், பிற்காலத்தில் கூட்டமைப்பு அரசுக்கு எடுபிடியானதை எதிர்த்தமையால் அக் கட்சியைவிட்டு விலகி நீதியரசருடன் தன் பயணத்தை மேற்கொண்டார். வன்னி மக்களின் பெரும் அபிமானத்தை வென்ற சிவசக்தி ஆனந்தன் இம்முறையும் மக்களின் பெருத்த ஆதரவுடன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

3. க. சிவலிங்கம் – இலங்கை தமிழரசுக் கட்சி

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மற்றும் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய முதல்வராக இருந்த சிவலிங்கம், கல்வி கற்ற சிறந்த ஒழுக்க முள்ள தலைமைப் பண்பு கொண்டவர். விடுதலைப் போராட்டம் மீது கடும் பற்றுக் கொண்ட இவர், முல்லைத்தீவு மற்றும் வன்னி மண் மக்களின் பெரும் விருப்பத்திற்கு உரியவர். இந்த மண்ணிலிருந்து வெற்றிவாகை சூடக்கூடியவர் என்றும் கருதப்படுகின்றது.

4. லூட்ஸ் மாலினி ஜெனிட்டன் –  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

முல்லைத்தீவு துணுக்காய் வலயத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரான மாலினி அவர்கள், போர்க்காலத்தில் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அம்மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக கடும் பணிகளை பெரும் சிரமங்களின் மத்தியில் மேற்கொண்டவர். தேசியப் பற்றும் தலைமைப் பண்பும் கொண்டவரும் மாவீரர் விக்டரின் சகோதரியுமான இவரை எம் மண்ணிலிருந்து பெண் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்

28.07.2020