பிரபா‘கரம்’ பற்றிய தமிழர்களின் ஒரே தேர்வு விக்கினேஸ்‘வரம்’

Aasiriyar paarvai
Aasiriyar paarvai

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் தமிழ் தேசம் வந்து நிற்கின்றது. 2020 – பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் களத்தை உண்மையில் ஒரு போராட்ட களமாகவே ஈழ மக்கள் எதிர்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இரத்தம் சிந்த வைத்தது சிங்கள தேசம் என்றால், அந்த இரத்தத்தை வைத்து அரசியலாக்கி, அதனை பதவியாகவும் பணமாகவும் மாற்றும் வியாபாரத் தலைமைத்துவத்திடம் எமது மக்களும் போராட்டமும் மண்ணும் சிக்கியுள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் எடுத்துரைக்க வேண்டிய காலத்திற்கு வந்துள்ளோம்.

ஈழத் தமிழ் மக்களிடம் இன்று என்ன ஆயுதம் இருக்கிறது? அன்று விடுதலைப் புலிகள் ஈழத் தமிழ் மக்களின் அரணாக இருந்தார்கள். அவர்கள் முன்னெடுத்த அரசியல் விடுதலைக்கான, ஆயுதப் போராட்டம், ஈழத் தமிழ் மக்களுக்கு முகவரியை தந்தது. ஈழத் தமிழினம் என்று ஒரு இனம் இருக்கிறது, அவர்களுக்கு என்று ஒரு தாகம் இருக்கிறது என்பதை சொல்லும் விதத்தில் சொல்லிய விடுதலைப் புலிகள் ஈழ மக்களின் என்றைக்குமான அரண்களே. அவர்கள் இன்று எம் மக்களுக்கு விட்டுச்சென்ற ஆயுதம்தான் என்ன?

இறுதிப்போர் என்பது இலங்கை அரசின் பல முகங்களை உலகிற்கு அம்பலப்படுத்தியது. ஈழத்தில் நடப்பது இனப்படுகொலை என்றும் இன அழிப்பு என்றும் விடுதலைப் புலிகள் மிக நீண்ட காலமாக எடுத்துரைத்து வந்தனர். இறுதிப் போரில் அவர்கள் தம்மை அழித்து அதன் உயரிய உறுதியான வலுச் சாட்சியங்கள் ஆகினர். இனப்படுகொலைக்கான நீதியை வெல்லும் போராட்டக் களத்தையே எமக்கு விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, கடந்த பத்தாண்டுகளில் வடக்கு கிழக்கில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? மக்கள் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். தங்களை பலப்படுத்தி இனத்தை பலவீனப்படுத்தியதே இவர்களின் மாபெரும் சாதனை ஆகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார், விஜயகலா போன்றவர்கள் இலங்கை அரசையும் அதன் இனப்படுகொலையையும் ஆதரித்தவர்கள். அதேவேலையை கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்திருக்கிறது. இலங்கை அரசின் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்ததுடன் அரசின் ஆட்சியை தக்க வைக்க உதவியதுடன், ஐ.நாவிலும் அரசைக் காப்பாற்றியது கூட்டமைப்பு.

இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தருவோம் என்று மக்களுக்குச் சொன்னவர்கள், அதே இனப்படுகொலை குற்றத்திலிருந்து பாதுகாக்கும் விதமாக இலங்கை அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்தனர். இனப்படுகொலை விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமான, அவர்களைக் காப்பாற்றும் விதமான இந்த அணுகுமுறையை மக்களுக்கு செய்தது துரோகம் எனச் சொல்லாது வேறு எப்படி சொல்வது?

இந்தத் துரோகங்களுக்கு ஒரு முடிவை கட்ட பொன்னான வாய்ப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு கிட்டியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகளின் ஏமாற்று அரசியலால் ஈழ மக்கள் விரக்தி அடைந்தபோது, தலைவர் பிரபாகரன் ஈழத் தமிழ் மக்களின் மீட்சிக்காக விடுதலைப் போராட்டத்தை தொடங்கினார். அதேபோன்று, இன்றைக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் ஏமாற்று அரசியலால் மக்கள் விரக்தி அடைந்துள்ள நிலையில் விக்னேஸ்வரன் புதிய தலைமையாக வந்துள்ளார். விடுதலைப் போராட்டம்மீதான பற்றை நேர்மையுடனும் அப் புனிதத்தின் நியாயங்களுடன் வெளிப்படையாக பேசி ஆதரித்து வருகிறார்.

இனப்படுகொலை தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றியது மாத்திரமின்றி, தமிழர்களுக்கு சுயநிர்ணய ஆட்சி தேவை, அவர்களின் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும், சர்வதேச விசாரணை ஊடாக நீதி வழங்க வேண்டும், ஐநா ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று எமது இனத்தினதும் விடுதலைப் போராட்டத்தினதும் கொள்கைகளை தனது அரசியல் இலக்காக கொண்டுள்ளார் விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அன்று பொறுப்புக் கொடுக்கப்பட்ட கொள்கைகளை அவர்கள் இன்று கைவிட, விக்னேஸ்வரன் அவற்றை ஏந்திச் செல்லுகிறார்.

எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படுகின்ற எவருக்கும் மக்கள் இம்முறை ஆதரவு அளிக்கக்கூடாது. இனப்படுகொலைக்கு உள்ளான நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் அல்லவா? ரோஹிங்ய மக்கள் தம்மீதான இனப்படுகொலையை செய்தவர்களுக்கும் அதனை ஆதரித்த கட்சிகளுக்கும் ஒரு வாக்குகூட விழக்கூடாது என்ற கொள்கையில் வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் நாட்டு தேர்தலை அணுகி வருகிறார்கள். பத்தாயிரம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்ட அந்த மண்ணில் அப்படியென்றால் ஒன்றரை லட்சம் பேரை பறிகொடுத்த நாம் என்ன பதிலை அளிக்க வேண்டும்?

எமது இனத்திற்கு கிடைத்த ஒப்பற்ற அரசியல் தலைவர் விக்னேஸ்வரன். வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தன்னலமற்ற வகையிலும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி, ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையை புதிய தடத்தில் பயணிக்கச் செய்து, இந்த மண்ணில் சுய நிர்ணய உரிமை கொண்ட கௌரப் பிரஜைகளாக வாழ தன் அரசியல் பயணத்தை மிக தீர்க்கமாக தொடங்கியுள்ளார். நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான அப்பழுக்கற்ற அணியை வடக்கு கிழக்கில் வெற்றி பெறச்செய்து, எம் தேசியப் பற்றையும் தாயகப் பற்றையும் இனப் பற்றையும் வெளிப்படுத்துவோம்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்

02.08.2020