சிறீதரன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!

Aasiriyar paarvai 2
Aasiriyar paarvai 2

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், தமிழ் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, அக் கட்சிகளில் போட்டியிட்ட ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் பல முக்கியமான விடயங்களைச் சொல்லியிருக்கிறது. மக்களை பொருட்படுத்தாமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அரசியல் என்ற பெயரில் செய்த அராஜகங்களுக்கு வெற்றிகளுக்குள் தோல்வியையும் பரிசளிக்கும் தண்டனையை இம்முறை மக்கள் வழங்கியுள்ளனர். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறீதரன் உண்மையில் வெற்றி பெற்றவரா? இல்லை வெற்றிக்குள் தோல்வி அடைந்தவரா என்பது அனைத்து வாகசர்களுக்கும் நன்கு தெளிவானதே

திரு சிவஞானம் சிறீதரன் அவர்களின் அரசியல் பயணம் தொடர்பில் தமிழ்க்குரல் பலமுறை கேள்விகளை எழுப்பியதுடன் அவரது சில பேச்சுக்கள் தொடர்பிலும் விளக்கங்களை பகிரங்கமாக கோரி மடலினை வரைந்தது. அத்துடன் அவரின் தான்தோன்றித் தனமான போக்குகள் குறித்தும் விமர்சனப் பார்வைகளை முன்வைத்தது தமிழ்க்குரல். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளின் சரிபாதி வாக்கினை பெற்று ஒருவாறு நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள சிறீதரன், தனது பாதை தொடர்பில் பயணம் தொடர்பில் சிந்திக்க வேண்டிய இறுதிக் கட்டம் இதுவாகும்.

முதலில் திரு சிறீதரன் அவர்கள் தனது அரசியல் பயணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தவிர்க்க வேண்டும். ஊடகங்களை, அரச அதிகாரிகளை, கல்வியலாளர்களை, வர்த்தகர்களை கட்டப்பஞ்சாயத்து மூலம் மிரட்டுகின்ற அடக்குகின்ற தனது செயற்பாடுகளை அவர் தவிர்க்க வேண்டும். அத்துடன் அவர் தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயற்படுகின்ற சமயங்களில் அவரை விமர்சிப்பவர்களை, துரோகிகள் என்றும் அரச புலனாய்வாளர்கள் என்றும் சொல்லுகின்ற அசிங்கமான அணுகுமுறையை அவர் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உணர வேண்டும்.

அத்துடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான விரோதச் செயல்களை சிறீதரன் நிறுத்த வேண்டும். குறிப்பாக தமிழீழ தேசியத் தலைவரை தனக்கு ஒப்பிடுவது தேசத்தின் குரல் பாலசிங்கத்தை சுமந்திரனுக்கு ஒப்பிடுவது போன்ற தேச விரோதச் செயல்களை தனது குறுகிய அரசியலுக்காக இனியும் செய்யக்கூடாது என்பதை மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனைப்போன்று அரசியல் நலனுக்காக தேச விரோதிகளுடன் கூட்டு வைப்பதை சிறீதரன் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேற்குறித்த விடயங்களை அவர் பின்பற்றியிருந்தால், கூடுதலான வாக்குகளை மக்கள் மத்தியில் இருந்து பெற்றிருக்க முடியும். இதனை இப்போது அவர் நன்றாகவே உணர்ந்திருப்பார் என நம்புகிறோம்.

கடந்த பத்தாண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிறீதரன் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கப் போகின்றார். இதுவரையில் நன்றாக உழைத்திருக்கக்கூடிய அவர், இனியேனும் தனது அடிப்படைச் சம்பளத்தை தவிர்த்து தனது வரப்பிரசாதங்களை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளாக வழங்க வேண்டும். இனியேனும் அவரது உதவியாளர், ஆராய்ச்சியாளர், ஓட்டுனர் பதவிகளை மனைவி உறவினருக்கு வழங்காமல் பொது மக்களுக்கு வழங்கி வாக்களித்த மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இதேவேளை பிரதேசவாதத்தை தூண்டும் செயல்களை சிறீதரன் இனியேனும் கைவிட வேண்டும். மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியமை காரணமாக கணிசமான மக்களின் எதிர்ப்புக்கு இவர் ஆளானார். அதனைப்போன்று யாழ்ப்பாணத்தான், கிளிநொச்சியான் என மாறி மாறி பேசி வாக்குகளை அள்ள முயன்றபோதும் அது மக்களுக்கு பிடித்த செயலாக அமையாமல் எதிர்ப்பை ஏற்படுத்தியமையால் வாக்குகளை இழக்க வேண்டிய நிலைக்கும் திரு சிறீதரன் தள்ளப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் சிறீதரனுக்கு எதிராக 50ஆயிரம் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த மக்களை எதிர்காலத்தில் வெல்ல சிறீதரன் என்ன உத்திகளை கையாளப் போகின்றார்? முதலில் பிரதேசவாத அணுகுமுறை சாதியப்பாகுபாடு போன்றவற்றை கைவிட்டு அனைத்து மக்களுக்கும் வேறுபாடுகள் களைந்த மக்கள் பிரதிநிதியாக இவர் இருக்க வேண்டும். இந்தப் பாடத்தை இனியும் ஏற்றுக்கொள்ளத் தவறினால் எதிர்வரும் காலத்தில் சிறீதரனுக்கும் கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்படும்.

ஒரு ஆசிரியராக அதிபராக கடமையாற்றிய சிறீதரன் பத்தாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினரான இருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு என்ன பங்களிப்பு செய்தார்? இவரின் எதிர்ப்புக்கும் பகைமைக்கும் உள்ளான கல்வித்துறை சார்ந்தவர்கள், தமிழ் தேசிய விரோத சக்திகளிடம் செல்ல இவரும் காரணமல்லவா? எதிர்காலத்தில் கல்வித்துறையில் தலையிடாமல் சுயாதீனமாக இயங்க அனுமதிப்பதுடன் கல்வி முன்னேற்றத்திற்கான தனது பொறுப்புக்களை இவர் ஆற்றவேண்டும்.

சமூகப் பொறுப்பும், இனப்பற்றும் உள்ள ஊடகம் என்ற வகையில் தமிழ்க்குரல் எப்போதும் அறத்துடனே பயணித்து வருகின்றது. தமிழர் விடுதலையும் அதன் வரலாறும் இன நலனும் சார்ந்து மாத்திரம் சிந்திக்கும் தமிழ்க்குரல், நபர்களுக்கான ஆளரசியலை கடுமையாக எதிர்ப்பதுடன் கொள்கைக்கான இலட்சிய அரசியலையே தனது எழுத்துக்களில் வலியுறுத்தி வந்திருக்கின்றது. அதன் எச்சரிக்கைகளையும் கோரிக்கைகளையும் பொருட்படுத்தாதவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளனர். தொடர்ந்தும் தமிழ் தேசியத்தை வலுப்படுத்த தனது நெறி தவறாப் பயணத்தை தமிழ்க்குரல் தொடரும்.

இந் நிலையில், பிரதேச வாதம், சாதியப் பாகுபாட்டை கைவிடுங்கள், தமிழ் தேசிய விரோத செயல்களை செய்யாதீர்கள், தமிழ்த் தேசிய விரோதக் கூட்டை தவிருங்கள் என்று தமிழ்க்குரல் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளாது மமதையுடன் நடந்த சிறீதரனுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளனர். இதனை இனியும் கற்காமல் விட்டால், எதிர்வரும் தேர்தல்களில் முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டு, தோல்வியும் துரோகமுமமான வரலாற்றை சிறீதரன் தனதாக்கிக் கொள்வார் என்பதையும் இச் சமயத்தில் குறிப்பிட்டுக்கொள்ளுகின்றோம்.

தமிழ்க்குரல் – ஆசிரியர் பீடம்

08.08.2020